இருவர்

இருவர்

ஐம்பத்தியாறு வருடங்கட்கு பிறகு பள்ளி தோழன் பத்மராஜனின் வாட்ஸாப் ப்ரோஃபைல் போட்டோவைப் பார்த்து அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தவனை ஓரளவுக்கு அடையாளம் கண்டு கொண்டார் ரிடையர்ட் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசன்.

திருச்சி டோல்கேட்டில் பத்மராஜனின் தம்பியை தற்செயலாக ஸ்கூல் ட்ரில் மாஸ்டர் உதவியால் தெரிந்து கொள்ள, அவன் அண்ணா பத்மராஜன் மும்பையில் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதையறிந்து மனம் மகிழ்ந்தார் ஸ்ரீநிவாசன்.

ஐம்பது ஆண்டுகட்கு மேலான வாழ்க்கையில் எல்லோருக்கும் ஜனனங்கள், மரணங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், ஏமாற்றங்கள், மாற்றங்கள்.

கிராமத்து பள்ளியில் குறும்புத்தனமான மாணவர் வாழ்க்கையில் பத்மராஜனின் பங்கு அவருக்கு நினைவாக ஊஞ்சல் ஆடியது.

இருவரும் அண்டை வீட்டுக்காரர்கள்.

ஸ்ரீரங்கத்தில் ஒழுங்காக படிக்காத பத்மராஜனை அவன் அப்பா, அவனை அவன் தாத்தா பாட்டியிருக்கும் நல்லசேலம் கிராமத்து பள்ளியில் சேர்த்து விட்டார். எட்டாம் வகுப்பிலேயே அவன்தான் உயரம் குறைவானவன்.

அவன் தாத்தாவிற்கு கிராமத்து பெருமாள் கோவிலில் அர்ச்சகர் ஜோலி. கிராமத்தில் யாரேனும் கோவிலில் மண்டகப்படி கொடுத்திருந்தால் அன்றைய தினம் சிறுவர்க்கு கொண்டாட்டம்தான்.

பாத்திரத்திலிருந்து கை நிறைய கொத்துகடலை சுண்டலை அள்ளி இருக்கின்ற கூட்டத்தைப் பொறுத்து ஏந்தும் கரங்கட்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏழெட்டு சுண்டல் வரும் வண்ணம் கொடுப்பார்.

வறட்சியான கிராமம்; வருமானம் இல்லா கோவில்; வாழ்வாதாரம் இல்லா அர்ச்சகர்.

அறுபது வயதான, வெள்ளை வெளேர், ஜைஜான்டிக் ஜானகி மடிசார் பாட்டி, பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் ஒரு சிலர்க்கு தங்கள் முன் பக்க ஓட்டு வீட்டிலேயே, ஓரமாக ஒரு பெஞ்ச் போட்டு, அதில் மாற்றி மாற்றி அனைவர்க்கும் சாப்பாடு போட்டு அதில் வரும் வருவாயில் ‘அட்லாஸ்’ உலகத்தை சுமப்பது போல் வாழ்க்கையை சுமந்து கொண்டிருந்தனர்.

பின் பக்கம் கூரை வேயப்பட்ட சமையலறை. இரண்டுமே மழை பெய்தால் ஒழுகும். ஜானகி மாமி சமையல் அந்த ஊரில் மிகவும் பிரபலம்.

புளியோதரை மற்றும் வத்தக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட். ‘கோக்கா கோலா’ ரகசியம் போல் மாமியின் புளிக்காய்ச்சல் ‘கமகம’ ரகசியம்.

‘ஜாதிப்பெயர் ஒழிப்பு’ என்ற பெயரில் ‘பிராமணாள் கபே’ யில் உள்ள ‘பிராமணாள்’ வார்த்தையை தார் பூசி அழித்தாலும் அவர்களில் ஒரு சிலர் விரும்புவது இது போன்ற மாமி மெஸ்தான், இன்றளவும்.

தள்ளாத முதுமையிலும், தாளாத வறுமையிலும், தவறாது, தளராது தினம் ஒரு இட்லி, ஸ்ரீநிவாசன் அண்ணாவின் கண் பார்வை குறைந்த சுட்டியான குட்டிப் பயலுக்கு இனாமாக கொடுத்தனுப்புவார்.

ஒரே ஒரு லாந்தர் எரியும் வீட்டில் கண் பார்வை குறைந்த ஜானகி மாமி ஒருமுறை ரசத்திற்கு பதிலாக கும்மிருட்டில் ‘செகண்ட்’ அடிக்கப்பட்ட காப்பி டிகாக்ஷனை இலையில் பரிமாறி விட்டார்.

சாப்பிடுபவரும் சாம்பார் சாதம் சாப்பிடும்போது இலையில் எஞ்சியிருந்த கொத்தமல்லி கருவேப்பிலை மற்றும் உப்பை டிகாக்ஷனுடன் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ‘இது ஒரு புதுவித ரசம்’ என்று நினைத்து சாப்பிட்டுவிட்டு புத்துணர்ச்சியுடன் போய் விட்டார்.

மறுநாள் அதிகாலை விறகு அடுப்பில் பால் காயும்போதுதான் பில்டெரில் டிகாக்ஷன் ஏன் இல்லை என்பது ஜானகி மாமிக்கு புரிந்தது.

மாலைவேளைகளில் அறுபத்திஐந்து வயது தாத்தா வயிற்றுக்கு மேலே வெற்றுடம்புடன் சற்றே அழுக்கு படிந்த பூணலுடன், கரிய உடலுடன், தொங்கிய கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டு சுற்றிலும் குழுமியிருக்கும் ஒரு சில கிராமத்து மனிதர்க்கு, மூக்கில் பொடி போட்டுகொண்டு கரகரத்த குரலில் ராமாயணம் படிப்பார்.

இரவில் தெருவில் வீட்டு வாசல் வழியே சென்னைக்கு விரைந்து செல்லும் வெங்காய லாரிகளின் சத்தத்தின் நடுவில் அனைவரும் தத்தம் கயிற்றுக்கட்டிலில் உறங்குவர்.

பக்கத்து வீட்டு அப்பாதுரையின் டிரான்சிஸ்டரில் ‘சிலோன்’ ரேடியோவில் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியில் “வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்” என்று பி.பி. ஸ்ரீனிவாசன் குரல் அந்த தெரு முழுவதும் ஒலிக்கும்.

வீட்டிற்கு மின்சாரம் இன்னும் வரவில்லை. ஸ்ரீரங்கத்து பள்ளியில் சொற்ப மார்க்குகள் வாங்கிக்கொண்டிருந்த பத்மராஜன் நல்லசேலம் கிராமத்து பள்ளியில் சேர்ந்தவுடன் எழுபது, எண்பது என்று மார்க் வாங்க ஆரம்பித்து விட்டான்.

படிப்பறிவில்லா தாத்தா, பள்ளி ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து போடும்போது பேரன் எழுபது எண்பது மார்க்குகள் வாங்கியது பார்த்து அகமகிழ்ந்து பேரனை கட்டியணைத்துக் கொண்டு கையெழுத்து போட்டு கொடுப்பார்.

பக்கத்து ஊரான ‘சிறுவயலூர்’ கிராமத்து கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிக் கொண்டிருந்த பத்மராஜனின் அப்பாவுக்கும் பரம சந்தோசம்.

மதியம் பள்ளி முடிந்து பிரம்மச்சாரி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வழக்கம்போல் ‘ஜானி மாமி’ மெஸ்ஸில் பெஞ்சிலோ அல்லது இடம் கிடைக்காமல் பசி பொறுக்காமல் தரையிலோ அமர்ந்து இலையில் சாப்பிட்டுக்கொண்டிருப்பர்.

சாணியால் மெழுகப்பட்ட மண் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது சில நேரங்களில் ரசம் சாதத்தை அள்ளி சாப்பிடும்போது இலை கிழிந்து விடும். நகக்கண்ணில் ஒருதுளி மண்.

பத்மராஜனின் அப்பா வழக்கம்போல் சைக்கிளில் சிறுவயலூரிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு ஒருமுறை மதியம் வந்தார்.

மெஸ்ஸில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்ததால் வீடு முழுவதும் உணவு மணம். பத்மராஜனின் அப்பா, வெய்யிலில் சைக்கிளை மிதித்ததால் வழிந்த வியர்வையை துண்டால் துடைத்துக்கொண்டு, கையை அலம்பிக்கொண்டு, பெற்றோருக்கு ஒத்தாசையாய் தாயாரிடமிருந்து ரசம் வாளியை வாங்கிக் கொண்டு வேண்டியவர்க்கு பரிமாறினார்.

அடுத்ததாக பொரியலை பத்மராஜன் ஆசிரியர் சாமுவேலுக்கு பரிமாறிக் கொண்டே “சார்! ரொம்ப சந்தோஷம் சார்! உங்க தயவுலே ஸ்ரீரங்கத்தில் கஷ்டப்பட்ட என் பையன் இப்ப நல்ல மார்க் வாங்கியிருக்கான் சார்! அங்கே முப்பது மார்க் வாங்க தடுமாறியவன் இங்க ‘எழுபது எண்பது’ ன்னு வாங்கியிருக்கான் சார்!
எல்லாம் உங்களோட மகிமை! “என்று சொல்லிவிட்டு தான் கோவில் பிரசாதமாக கொண்டு வந்திருந்த சர்க்கரை பொங்கலையும் அவர் இலையில் கூடுதலாக இட்டார்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஆசிரியர்கள் இரண்டு மணி அளவில் வகுப்புகட்கு திரும்பினர்.

வாத்தியார் சாமுவேல் பியூன் பொன்னுசாமியை அழைத்து, ஹெட் மாஸ்டரிடம் சொல்லி பத்மராஜனின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை வாங்கி பரிசீலித்தார்.

எட்டாம் வகுப்பில் ஏனோ மயான அமைதி நிலவியது. பத்மராஜன் ஆசிரியரின் அவசர நடவடிக்கை அறிந்து அபாய கட்டத்திற்குள்ளானான்.

வாத்தியார் பத்மராஜனை அழைத்து அவன் மதிப்பெண் அட்டையை காண்பித்தவுடனேயே குற்ற உணர்ச்சியில் ‘பொல பொல’வென்று கண்களில் கண்ணீர் கொட்ட கதறி அழுதான்.

வேறொன்றுமில்லை. குழந்தைகள் எப்போதுமே மிகவும் கற்பனாசக்தி மிகுந்தவர்கள் அல்லவா?

15 என்ற மதிப்பெண்ணில் “ஒன்றின்” மேலே இடது பக்கமாக, கிடைமட்டமாக ஒரு கோடு போட்டு சுலபமாக 75 மார்க் வாங்கிவிட்டான்.

30 ஐ நன்றாக சுழித்து 80 ஆக்கி அற்புத மார்க் வாங்கி விட்டான்.

இப்படியே மேலும் சில மார்க் மோசடி. அப்போதெல்லாம் மதிப்பெண்கள் எண்களில் மட்டுமே இருந்தது. அடைப்புக்குறிகளில் மார்க்குகள் எழுத்துக்களிலும் இடம் பெறாதது பத்மராஜனுக்கு சௌகரியமாக போய்விட்டது.

அனைத்து மதிப்பெண்களையும் சர்வ ஜாக்கிரதையாக திருத்தி தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி வாத்தியார் இல்லாத சமயத்தில் பத்தோடு பதினொன்றாக மற்ற மதிப்பெண்கள் அட்டைகளோடு நுழைக்கப்பட்டு கட்டாக அடுக்கப்பட்டு ஹெட் மாஸ்டர் அலமாரிகளில் நிரந்தரமாக அடைக்கலமாகி விட்டிருந்தது.

சாதாரணமாகவே சாமுவேல் வாத்தியார் நம் மேல்கையின் அடிப்பாக சதையை இரு விரல்களால் கசக்கிப்பிழிந்தால் நாங்களெல்லாம் ஏழடி ஜம்ப் பண்ணுவோம்; வலியில் எகிறி குதிப்போம்.

அன்று கூடுதலாக சர்க்கரைப்பொங்கல் வேறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த சாமுவேலின் அடிகள் இடிகளாய் இறங்கின பத்மராஜனின் உடலெங்கும். அவர் அவனை அடிக்க அடிக்க நன்றாய் படிக்கும் எங்களுக்கு எல்லாம் கூட அடி வாங்காமலேயே குலை நடுக்கம். ஒருவழியாக சாமுவேல் சுனாமி ஓய்ந்து பத்மராஜன் தன் தரை இருக்கையில் வந்து அமர்ந்தான்.

அடுத்த பீரியட் “விளையாட்டு” என்பதால் அனைவரும் விளையாடும்போது பத்மராஜன் வாங்கிய அடிகள் எல்லாம் அனைவர்க்கும் விளையாட்டு களிப்பில் மறந்தே போனது.

அன்றிரவு இரவு சாப்பாட்டிற்கு மீண்டும் சாமுவேல் ‘ஜானி மாமி மெஸ்’ விஜயம் செய்தபோது பாட்டிக்கு ஒத்தாசையாய் பத்மராஜன்தான் சாமுவேல் சாருக்கு வெங்காய சட்னி, தேங்காய் சட்னி என்று பரிமாறினான்.

அமைதியாக உணவருந்திவிட்டு தாத்தா பாட்டியிடம் பத்மராஜனின் தகிடுதத்தம் பற்றி எதுவும் சொல்லாமல் சாமுவேல் தான் வசிக்கும் அறைக்கு திரும்பி விட்டார். அந்த அளவில் பத்மராஜனுக்கு அடிகள் ‘இத்தோடு போச்சே’ என்ற நிம்மதி.

பள்ளி விஷயத்தை பள்ளியோடு நிறுத்திக்கொண்ட வாத்தியாருக்கு மனதார நன்றி கூறிக்கொண்டான்.

காலம் கடந்தது. தாத்தா பாட்டிக்கு வயதாகிவிட்டதால் அந்த வருடம் படிப்பு முடிந்து, பத்மராஜன் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே திரும்பினான்.

பின் எப்படியோ அவரவர் அவரவர் பாதைகளை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் தொடர்பின்றி அனைத்து மாணவர்களும் காணாமலாயினர்.

ரிடையர்ட் ஆன பின்னர் ஓய்வு நேரத்தில் ஸ்ரீநிவாசன் பழைய பள்ளி, கல்லூரி மாணவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள “பேஸ்புக்” போன்ற தளங்களிலும், கல்லூரி அலும்னி (Alumni) பட்டியல்களில் தன் பழைய நண்பர்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படித்தான் இன்று அவர் பத்மராஜனை கண்டு பிடித்தார். ஈஸிசேரில் சாய்ந்து கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீனிவாசன் நிகழ் காலத்திற்கு திரும்பினார்.

மொபைல் போனில் தெரிந்த வாட்ஸாப் போட்டோவில் பத்மராஜனை ஓரளவுக்கு அடையாளம் கண்டுகொண்டு அவனை அழைத்தார்.

சற்று நேர இடைவெளிக்குப்பிறகு பத்மராஜன் “ ஹலோ! யார் பேசறது?”

“டேய்! நான் ஸ்ரீநிவாசன்! உன் ஸ்கூல்மேட்!”;

சில செகண்ட்கள் அசௌகரிய மௌனத்திற்கு பிறகு, ஓ ! மை காட் ! எப்பிடிடா என்னை கண்டுபுடிச்சே?” என்று பத்மராஜன் அலற, இருவரும் அள்ள முயன்றனர் பல்லாண்டுகால வாழ்க்கையை ஒரு டெலிஃபோன் காலில்!

ஸ்ரீநிவாசனின் மனைவி சீதா தன் கணவர் இவ்வளவு உற்சாகத்துடன் யாரிடமும் பேசி பார்த்ததே இல்லை! ஸ்ரீநிவாசன் பேசி முடித்து இன்ப அதிர்வுகளில் இருந்து விடுபட சில நிமிஷங்கள் ஆயிற்று.

பத்மராஜன் மும்பைக்கு போய் நாற்பது வருஷத்திற்கு மேல் ஆச்சாம்! ‘ஜானகி மாமி மெஸ்’ ; ‘ஜானி ஹோட்டல்’ ‘ஐயங்கார்ஸ் கபே’ என்று மூணு ஹோட்டல் வைத்திருக்கானாம்; ஒரே பொண் மஸ்கட்டில் இருக்காளாம் ;

வருஷா வருஷம் பேரன் பேத்தியோடு ஒரு மாசம் வந்து தங்குவாளாம்; வொய்ஃப் பத்மாவிற்கு ஒரு ஹோண்டா எஸ்.யு.வி.யாம் ; அவனுக்கு ஒரு டொயோட்டா ஃபார்சூன் காராம்; ரெண்டு த்ரீ பெட் ரூம் பிளாட் சொந்தமா இருக்காம். மும்பை கார்ப்பரேஷன் கவுன்சிலராக வேறு இருந்திருக்கானாம்.

“இங்க ஒரு வாரம் சீதாவோட வந்து இருந்துட்டு போடா” என்ற பத்மராஜனின் வற்புறுத்தலுக்கு “ஓகே” சொல்லிவிட்டு பேசி முடித்த ஸ்ரீநிவாசனுக்கு ‘ஏண்டா! அவனை காண்டாக்ட் பண்ணினோம்’ என்று ஆகிவிட்டது.

எல்லையில்லா தன்னிறக்கம், ஏற்கனவே தாழ்வுணர்ச்சி கொண்ட ஸ்ரீநிவாசனை, சில கணங்கள் அமிழ்த்தியது.

பட்டப்படிப்பில் கெமிஸ்ட்ரியில் டிஸ்டிங்ஷன் வாங்கியும், ஏதோ சுமாரான கெமிக்கல் கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வாழ்ந்து, ஒரே பையனை பாங்க் லோனில் இஞ்சீனியர் ஆக்கி, இருக்கின்ற ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டியில், ஒரு சாதாரண 2 பெட் ரூம் பிளாட்டில் சென்னையில் கொளத்தூர் அருகே, மாதாமாதம் மகனின் உதவியை எதிர்பார்த்து வாழும் தன் வாழ்க்கையை நினைத்துக் கொண்டார்.

இத்தனைக்கும் அவர் பணி நாட்கள் முழுவதும் யாரும் அவருடைய டிகிரி மதிப்பெண் சான்றிதழ்களை எல்லாம் வேலை வாய்ப்பு இன்டர்வியூ முடிந்து எந்த நிறுவனமும் க்ராஸ் செக் செய்து பார்க்கவேயில்லை.

பயோ டாடாவில் டிஸ்டிங்ஷன் என்று பெருமையோடு குறிப்பிட்டிருந்தாலும் யாரும் அதை பெரியளவு கவனித்தாக தெரியவில்லை.

டிகிரியில் ஐந்து மார்க், பத்து மார்க் சற்று குறைவாக வாங்கியிருந்தாலும் இப்போதிருக்கும் வாழ்க்கைக்கு ஒன்றும் குறைவு இருந்திருக்காது.

வேறு பெரிய கெமிக்கல் நிறுவனங்களில் வேலை தேடி போனாலும் செலக்ட் ஆனாலும் ஆரம்ப சம்பளம், சீனியாரிட்டி , வேலை செய்யும் இடம், கிளைமேட் போன்றவை திருப்திகரமாக அமையவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி.யில் தெரு விளக்கில் விடிய விடிய படித்ததையும் வகுப்பில் எப்போதும் ‘செகண்ட் ரேங்க்’ வாங்கியதையும் நினத்துக் கொண்டார்.

‘கல்வி ஓட்டப் பந்தயத்தில் தனக்கு வெகு பின்னால் வந்தவர்கள் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் முந்தி விட்டனரே!’ என்று வருத்தப்பட்டார்.

பெரியப்பா பையன் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி என்றெல்லாம் எழுதியபோது தானும் முயற்சி செய்யாது அசிரத்தையாக இருந்து விட்டோமே என்று இப்போது நினைத்து வருந்தினார்.

எழுதியிருந்தால், அரசு வேலை கிடைத்திருந்தால், ‘ஜாம் ஜாம்’ என்று இப்போது பென்ஷன் வந்து கொண்டிருக்கும் என்று ஏகப்பட்ட விரக்தியலைகள் அவர் மனதில்.

“வாழ்க்கை ஒரு ஒன்வே டிராஃபிக். வாழ்க்கையை மீண்டும் திரும்ப வாழமுடியாது” என்று கல்லூரி புரொஃபசர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அருகில் மனைவி சீதா நிற்கின்றாள் என்பதை உணர்ந்த ஸ்ரீநிவாசன், நினைவலைகளிலில் இருந்து மீண்டு, “நாம் மும்பை போறோம்” என்றார்.

உடனே அவள் “தாதர் எக்ஸ்பிரஸ் 3 டயர் நான்-ஏசி தானே? வெயிட்டிங் லிஸ்ட் ஜாஸ்தியாக இருக்கும்” என்றாள் சற்று ஏளனமும் கிண்டலும் கலந்த குரலில்.

ஸ்ரீநிவாசன் அமைதியாக “ஃப்ளைட்டில்” என்றார்.

வியப்புடன் பார்த்த மனைவியை நோக்கி “ஃப்ளைட்டில் போய் வர பத்மராஜனே புக் பண்ணி விட்டான்” என்றார்.

ஆனால் அந்த வார்த்தைகளில் சந்தோஷமும் பூரிப்பும் இல்லை.

பத்மராஜன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் இன்னும் அவர் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
98842 51887