இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?

இறைவன் பரம கருணையுடன் நமக்கு பணவசதியையும், பொருள் வசதியும், இதர பாக்கியங்களையும் தரும்போது தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவற்றைச் சுகபோகங்களில் செலவழிக்காமல், மேலும் மேலும் புண்ணிய காரியங்களைச் செய்வதற்காகவே தான் அத்தகைய வசதிகளை இறைவன் நமக்குத் தந்திருக்கிறான் என்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஐந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதனால் ஒரு சிறு பிரயோஜனம் கிடையாது. ஆனால் சிதிலமடைந்த சிறு திருக்கோயிலின் புனர் நிர்மாணத்திற்கு ஒரே ஒரு செங்கல்லைக் கொடுத்தாலும் அது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்.

இறைவன் என்று நமக்குத் தேவைக்கு அதிகமான செல்வத்தைத் தருகிறானோ, அன்றே அவன் நம்மைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டு விட்டான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதிகப் பணம் மதியைக் கெடுக்கும். எந்தச் சுகத்தையும் எனக்கு அளவோடு கொடு என்று தான் நாம் பகவானைப் பிரார்த்திக்க வேண்டும்.

நம் பிறவி வீணாகக்கூடாது என்றால், நாம் நிச்சயம் இளம் வயதிலேயே வசதிகள் உள்ளபோதே, நல்ல காரியங்களைச் (புண்ணிய செயல்கள்) செய்துவிட வேண்டும். உடல் ஆரோக்கியம் உள்ளபோதே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, திவ்ய தேசங்களைத் தரிசித்துவிட வேண்டும்.