இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?

இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனதைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும்.

இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தை துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று.

‘ஒருவன் படிக்கின்ற புத்தகங்களைப் பொறுத்தே அவன் எத்தகைய மனிதன் என்று அறியலாம்’ என்று ஆங்கில மூதுரை கூறுகிறது. எனவே நல்ல இலக்கியங்களைப் படிப்பவனே சிறந்த பெரியோனாக விளங்குவான். ஆதலால் நல்ல இலக்கியங்களைப் பெற்று மகிழ்வது நம் தலையாய கடமையாகும்.

 

இலக்கியங்களின் பயன்கள்

இலக்கியங்களில் இலைமறை காய்களாக இயற்கை, வாழ்வியல் நெறிகள், தத்துவம், இறைவன் போன்ற பொருள் நயங்கள் செறிந்து கிடக்கின்றன.

இவற்றின் வெளித்தோற்றங்களாகக் காட்சிளிக்கும் மோனை, எதுமை, மடக்கு, யமகம், திரிபு போன்ற சொல் நயங்களை உணர்ந்து சுவைக்கும் போது என்றுமே காணாத இன்பத்தை அடையலாம்.

இலக்கிய சுவையில் திளைத்த ஒருவர் ‘இருந்தமிழே உண்ணாமல் இருந்தேன், இமையோர் விருந்து அமிழ்தம் ஈந்திடினும் வேண்டேன்’ என்றார்.

உலகத்தில் நாம் பல்வேறு மக்களோடு பழகும்போதும், வயிற்றுப் பிழைப்புக்காகப் பலதுறைகளிலும் ஓடியாடித் திரிந்து உழைத்து அலுத்துப்போகும் போதும் தோன்றக்கூடிய வெறுப்பை இலக்கியங்களே போக்க வல்லன.

 

‘ஜான் ஸ்டூவர்ட் மில்’ என்பார், கலைத்துறையை மருந்தாக நாடித் தன் துன்பத்தை நீக்கிக் கொண்டார். அவர் தம் துன்பத்தை நீக்கிக் கொள்ள வோர்ட்ஸ் வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞரின் பாட்டுத் தொகுதி ஒன்றைப் படிக்கத் தொடங்கினர்.

அவர் தம் மனச் சோர்வை அது மாற்றும் என்ற நம்பிக்கையோடு படிக்கவில்லை. ஆனால் அந்த நூலால் வியக்கத்தக்க வகையில் அவர் ஊக்கமும் ஆறுதலும் பெற்றார்.

“என் மனநிலைக்கு ‘வோர்ட்ஸ் வொர்த்’ பாட்டுக்கள் மருந்தாக இருந்தன. வாழ்க்கையின் பெரிய பொல்லாங்கெல்லாம் தவிர்க்கப்பட்ட பிறகு, பெறத்தக்க நிலையான இன்பம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்பாட்டுக்களால் நான் அறிந்தேன். அவற்றின் பயனாக உடனே நான் முன்னிலும் மகிழ்ச்சி உற்றேன்” என்றார்.

 

இலக்கியப் படிப்பு என்பது காலத்தை பயனுள்ள வழிகளில் போக்குதல், பயனுள்ள எண்ணத்தையும் சொல்லையும் பாராட்டுதல் போன்ற நன்மைகளைக் கொடுக்க வல்லது.

பரந்த அறிவையும் விரிந்த பார்வையையும் அளிக்க‌ வல்ல காவிய இன்பத்தைச் சுவைத்து மகிழ்வதைவிடப் பேரின்பம் உலகத்தில் வேறு இல்லை என்பர் சான்றோர்.

வாய் அருக வயிறு கலனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நின்ற பிறகு, மறைந்தொழிவதோடு தெவிட்டும் தன்மையும் வாய்ந்தன. அளவுக்கு மிஞ்சினால் நோய்க் கிடந்தருவன.

செவியருக உளம் உணரத்தக்க கவிச்சுவையோ, வெளின் தெவிட்டாத தெள்ளமுதாய் மேலும்மேலும் வளர்ந்து நினைக்கும் போதெல்லாம் புத்தின்பம் பயப்பதாய் நமதுள்ளத்தை என்றும் இன்பத்தில் ஆழ்த்தவல்லதாய் உள்ளது.

 

“கவிப்பா அமுதம் இசையின் கறியோடு
கண்ணன் உண்ணக் குவிப்பான்” என்று கம்பர்  கூறியிருக்கிறார்.

கவிப்பா இன்பம், அமிழ்தாமாகும் என்பதனையும் இசையோடு சேர்ந்து அது உண்ண உண்ணத் தெவிட்டாத தெள்ள அமுதமாகும் என்பதனையும் கூறியிருத்தல் நோக்கத் தக்கது.

 

திருவாசகத் தேனில் திரித்த இராமலிங்க வள்ளலார் தாம் பெற்ற இன்பத்தை.

“வான் கலந்த மாணிக்க வாசக! நின்வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.”
என்று கூறுகிறார்.

இவ்வின்பத்தை அடையும் வழியை நன்கு அறிந்து கொண்டால் வேலையிலிருந்து நீங்கி ஓய்வு பெறுங் காலத்திலும் முதுமை காரணமாக அவலக் கவலையாலும் தளர்ச்சியாலும் துன்பம் படுங்காலும் இவ்வின்பம் இளமையுணர்ச்சியை பூட்டி மட்டில்லாத மகிழ்ச்சியை அளிக்கும்.

 

ஆயந்தொறும் இன்பந்தருங் கல்வி என்றும்

நவில்தொறும் நூல்நயம் போலும் என்றும்

செவியற் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள் என்றும்

செவிக்கு உணவில்லாதபோது என்றும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

இவற்றிலிருந்து பசி, நீர் வேட்கை அவலக் கவலை, முதுமை, தளர்ச்சி முதலியவற்றைப் போக்கி மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்து என்றும் இளமையாக்க வல்லது இலக்கிய இன்பம் என்பது தெரிகின்றது.

 

முருகுணர்ச்சியும் கற்பனையும்

சிறந்த இலக்கியங்களில் ஆங்காங்குக் காணப்படும் ஒன்பது சுவை நயங்களும் அவற்றிற்கேற்ற ஓசை நயமும் கற்பவர் மனதிற்கு மகிழ்ச்சி தருவது கண்கூடு. இலக்கியத்தில் முருகுணர்ச்சியும் கற்பனையும் மிளிர்கின்றன.

(முருகு என்றால் அழகு என்று பொருள். முருகுணர்ச்சி என்பது அழ‌குணர்ச்சி என்று பொருள்படும்.)

 

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிய மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
என்ற பாடலைப் பாருங்கள்.

இப்பாட்டில் சூர்ப்பநகை அழகிய பெண்ணாக வடிவெடித்து வரும் போது ஒரு பெண் மெல்ல நடந்து வருவதைப் போன்று மெல்லிய எழுத்துகள் பொருந்திய நடையாக செய்யுள் அமைந்து இருக்கின்றது.

 

ஒரு குரங்கின் வேடிக்கை விளையாட்டைப் பாவேந்தர் எப்படிக் கூறுகிறார் பாருங்கள்.

கிளையினிற் பாம்பு தொங்க

விழுதென்று குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை

வெடுக்கெனக் குதித்த தைப்போல்

கிளைதொறும் குதித்துத் தாவி

கீழுள்ள விழுதை எல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்!

இங்ஙனம் பாடல்களைக் கற்பிக்கும் போது பாடல்களின் முருகுணர்ச்சியையும் கற்பனையையும் எடுத்துக் காட்டவேண்டும்.

 

செய்யுள் கற்பிப்பதன் நோக்கமே இலக்கியத்தின் சுவையை உணரும் ஆற்றலை வளர்ப்பதாகும்.

Poetry is the art of the ear not through the eye. Poetry is sound not sense (Shelly)

செய்யுள் கற்பிக்கும் ஆசிரியர்கள் இசையுடன் படித்து இன்பத்தைத் துய்க்கச் செய்ய வேண்டும் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

இலக்கிய இன்பம் இவ்வுலக இன்பங்களில் சிறப்பானது. அந்தத் தெவிட்டாத அமுதைப் பருகி மகிழ்வோம்.

S.ஆஷா

 

One Reply to “இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?”

Comments are closed.