எந்த ஊருக்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் நீங்கள் பேருந்து நிலையத்திற்குச் செல்வீர்களா? அப்படிச் சென்றால் என்ன ஆகும்?
இந்தப் பேருந்தில் ஏறுவதா? அந்தப் பேருந்தில் ஏறுவதா என்ற குழப்பம் தான் மிஞ்சும். எங்கும் போக முடியாது. போனாலும் மகிழ்ச்சி இருக்காது.
வாழ்க்கையிலும் அப்படித்தான். திட்டமிடாமல் வாழ்க்கையை நாம் நகர்த்திக் கொண்டே சென்றால் குழப்பம் தான் மிஞ்சும். எந்த ஒரு முன்னேற்றத்தையும் நாம் காண முடியாது. வாழ்க்கையில் நமக்கு ஒரு இலக்கு இருந்தால் நாம் சிறப்பாக வாழலாம்.
மாணவப் பருவத்தில் இருப்பவர்கள் அடுத்து என்ன ஆக வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு மருத்துவராக, பொறியாளராக, முதலாளியாக, அறிவியல் அறிஞராக, பத்திரிக்கையாளராக, ஆசிரியராக, விளையாட்டு வீரராக அல்லது எழுத்தாளராக வேண்டுமென இலக்கைத் தீர்மானிக்கலாம்.
மற்றவர்கள் தங்கள் வாழ்வில் அடைய விரும்பும் குறுகிய கால மற்றும் நீண்டகால இலக்குகளை முடிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். உங்களைப் பற்றி நன்கு யோசித்து, உங்களின் பலம் பலவீனங்களைப் பட்டியலிட்டு நல்ல இலக்கைத் தீர்மானியுங்கள்.
உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ணாமல் ‘உங்களால் முடியும்’ என்ற எண்ணத்தோடு இலக்கைப் பற்றி யோசியுங்கள்.
உங்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும்?
தெளிவாக
(எடுத்துக்காட்டு) நான் ஒரு தொழிலதிபராக விரும்புகிறேன்.
அளவிடக்கூடியதாக
நான் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக விரும்புகிறேன்.
அடையக்கூடியதாக
உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உதாரணமாக 60 வயதிற்குப் பிறகு, உடல்நிலை மோசமான பிறகு ஒலிம்பிக் போட்டிகள் பற்றி யோசிக்கக் கூடாது.
தொடர்புடையதாக
இலக்கு உங்களுக்குத் தொடர்புடையதாக இருந்தால் அதை அடைவது எளிது. மேலும் இலக்கை நிர்ணயித்த பின் அது தொடர்பான அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
கால வரையறை உள்ளதாக
நான் இன்னும் 5 வருடத்தில் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக வருவேன்.
இப்படிச் சிறப்பான இலக்கினை நாம் வகுத்துக் கொண்டால் நம் மனம் அதை அடைவது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்துவிடும். நம் செயல்களும் அதற்கேற்றவாறு அமைய ஆரம்பித்துவிடும்.
எனவே வாழ்வில் முன்னேற முதற்கட்டமாய் நல்ல இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!