இலக்குகள்
மறந்து போகும்
ஒரு நெடிய
பயணத் தொலைவிற்கு அப்பால்!
பரந்து விரிந்த
பிழைத்தலுக்கான
சப்தங்களின் சாகசங்களில்
உதிர்கின்றன சிறகுகள்!
மூச்சு முட்டும் கணங்களில்
இலட்சியம் ஏதோ
கானல் நீரெனக்
காண்கிறது!
சிலவற்றை சிலரும்
பலவற்றை பலரும்
பகிர்ந்து
பெற்றுக் கொண்ட
பெரும் விளம்பரங்கள்
இலாப நோக்கில்
அலைமோதும் !
மூக்கின் மேல்
விரல் வைக்கும்
விவாதங்களில்
எவரெவரோ முன்னிலைப்படும்
செய்திகளின் பின்னணியில்
தொலைகிறது
பிரதான இலக்கு!
அதீத தனிமையில்
மௌனித்து அலைகையில்
எடுபடாத கோணங்கள்
சிறப்பாகவே இருப்பதாய்
மனசாட்சியிடம்
பெறுகின்றன நற்சான்று!
வளர்தலும் தேய்தலுமென
விரையும்
வேக நாட்களில்
ஏதேனும் மூலையொன்றின்
ஊற்றுக்கண் திறப்பில்
ஒளிவட்டம்
பெருகி வரலாம்!
அதுவரை
சிறு முயற்சி செய்தேனும்
தொலைத்த தொலைந்த
பெரும் இலக்கை
நினைவு கூர்தல்
நிகழட்டும்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
மறுமொழி இடவும்