இலவங்கம் – மருத்துவ பயன்கள்

இலவங்கம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பசித் தீயைத் தூண்டி உடலைத் தேற்றும். இசிவையும், துடிப்பையும் தடுத்து வாந்தியை நீக்க வல்லது.

மேலும் தோல் நோய்களையும் கட்டுப்படுத்த வல்லது. “பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும் போம்….” என்கிற அகத்தியர் குணபாட நூல்.

பித்தத்தைக் கட்டுப்படுத்துதல், விந்து ஒழுகுதல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக செய்யப்படும் மருந்துகளில் முக்கியமாகவும், லேகியம், சூரணங்கள் போன்றவற்றில் துணை மருந்தாகவும் இலவங்கம் சேர்க்கப்படுகின்றது.

இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்து இலவங்க எண்ணெய் அல்லது கிராம்பு தைலம் தயாரிக்கப்படுகின்றது. இது நல்ல மணமுள்ளது. அழுகலை அகற்றும்: அரிப்பைத் தடுக்கும்: பசியைத் தூண்டும்: உடலைப் பலமாக்கும்.

இலவங்கம் மலைப் பகுதிகளில் உள்ள‌ மர வகையைச் சேர்ந்த‌ தாவரம் ஆகும்.மரத்தில் தோன்றும் மொக்குகளைப் பறித்து காய வைத்து, கடைகளில் இலவங்கம் அல்லது கிராம்பு என்கிற பெயரில் விற்பனையாகின்றது.

இலவங்கம் எல்லா நாட்டு மருந்து மற்றும் மளிகை கடைகளிலும் கிடைக்கும். கிராம்பு கறி மசாலாவில் முக்கிய இடம் பெறுகிறது. சுவையும், மணமும் தரும். இதை ஊறுகாய், பற்பொடி, வாசனைப் புகையிலை ஆகியவற்றிலும் சேர்க்கிறார்கள்.

இந்தியாவிலும், இலங்கையிலும், இலவங்கத்தின் மருத்துவ மற்றும் உணவு உபயோகங்களுக்காக பயிர் செய்யப்படுகின்றது. அஞ்சுகம், உறகடம், கருவாய், வராங்கம் போன்ற பெயர்களும் இலவங்கத்திற்கு உண்டு.

பல் வலியுள்ள இடத்தில் இலவங்கம் பொடியை வைத்துப் தேய்க்க பல்வலி, ஈறு வீக்கம் குணமாகும்.இலவங்க எண்ணெயை பஞ்சில் தோய்த்து பல் வலியுள்ள இடத்தில் வைக்கலாம்.

இலவங்கத்தை நன்கு காய வைத்து, சூரணம் செய்து ¼ தேக்கரண்டி அளவு தேனில் மூன்று வேளைகள் சாப்பிட்டு வர தேள்கொட்டு விஷம் முறியும்.

இரண்டு கிராம் இலவங்கப் பொடியை சம அளவு பனை வெல்லத்தில் கலந்து மாதவிடாய் காலத்தில் 3 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து, நெற்றியிலும் மூக்கின் மீதும் பற்றாகப் போட்டு வர மண்டைகுத்தல், நீரேற்றம் கட்டுப்படும்.

4கிராம்பும், 10 நிலவேம்பு இலைகளும் எடுத்து, நசுக்கி நீரில் இட்டு குடிநீர் செய்து 1 டம்ளர் அளவாக குடிக்க காய்ச்சலுக்குப் பிறகு ஏற்படும் களைப்பு நீங்கும்.