அலுவலகம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் காந்தி மார்கெட்டில் காட்சியளித்த பச்சைக் காய்கறிகளைப் பார்த்தபோது வாங்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.
‘ஆனால் எப்படி எடுத்துப் போவது? பை எதுவும் எடுத்து வரவில்லையே?’
‘போனால் போகிறது சின்னதாக ஒரு பை புதிதாக வாங்கி விடுவோம். மிஞ்சிப் போனால் இரண்டு ரூபாய் இருக்கும்!’- யோசித்தவாறே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு விதவிதமாகப் பைகள் தொங்கிக் கொண்டிருந்த அங்கிருந்த ஒரு கடையில் போய் விசாரித்தேன்.
“இந்த பை என்ன விலை?”
“இருபது ரூபா சார்!”
“அது?”
“பத்து ரூபாய்!”
“அவ்வளவு விலையில் எல்லாம் வேண்டாம். சும்மா சாதாரணப் பையே போதும்.”
“இதப்பாருங்க. ஆறு ரூபாதான்”
நகரின் பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் பெயர் பொறித்த மஞ்சள் நிறத் துணிப்பையை எடுத்துக் காண்பித்தார் கடைக்காரர்.
“என்னங்க, இந்த பைக்குப் போய் ஆறு ரூபாயா? அந்த ஜவுளிக்கடைக்குப் போனா இலவசமாகவே கொடுப்பாங்க!” என்றேன்.
“உங்களை மாதிரி இருக்கிறவங்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதான்னே தெரியலை சார்?” என்றார்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“பின்னே என்ன சார்? விவரம் புரியாமப் பேசறீங்களே? வாடிக்கையாளர்கள் இருநூறுக்கும், முன்னூறுக்கும் ஜவுளி எடுக்கிறாங்க. பையை இலவசம்ங்கிற பேர்ல தர்றாங்க.
மொத்த பைகளுக்கு ஆகும் செலவையெல்லாம் ஜவுளி விலையிலேயே ஏற்றி வாடிக்கையாளர்களிடமே பணத்தைக் கறந்துறாங்க.
‘இலவசம்’-ங்கிற முலாம் பூசினதும் எல்லோரும் மயங்கிடறாங்க. இன்றைய நாள்ல இலவசமா கிடைக்கிறது காற்று ஒன்றுதான் சார்.
விழாக்காலம் முடிஞ்சதும் தேங்கிக் கிடக்கும் பைகளை எங்களைப் போல வியாபாரிகளிடம் தள்ளிடறாங்க. விளம்பரத்துக்கு விளம்பரம். காசுக்கு காசு.
அவங்க கிட்டேயிருந்து ஐந்து ரூபாய்க்கு வாங்கி ஆறு ரூபாய்க்கு நாங்க விற்கிறோம். ஒருபை வித்தா ஒரு ரூபாய் லாபம் கிடைக்கும்.!”
கடைக்காரரின் விலாவாரியான விளக்கம் கேட்டு அசந்து போனேன். ‘இலவசம்’ங்கிற சொல்லுக்கு பின்னணி இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
Nice