இலவு காத்த கிளி போல

கிளி

இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது.

பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது.

கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருத்தி “இப்பழமொழி எதனைப் பற்றிக் கூறுகிறது?. யாராவது சற்று விளக்கினால் எனக்கு புரியும” என்று கூறினாள்.

அதனைக் கேட்ட மற்றொரு பெண் “இப்பழமொழியின் பொருளை ஏறத்தாழ எல்லோரும் அறிந்திருக்க முடியும். இருந்தாலும் சிறுபிள்ளையான உனக்கு ஒரு கதை மூலம் பழமொழியின் பொருளை விளக்கிக் கூறுகிறேன் கேள்” என்றாள். 

ஒரு பெரிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டில் மரங்கள் அடர்ந்து இருந்தன. அடர்ந்த மரங்களில் கிளிக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்களையும் கொட்டைகளையும் தின்று அவை வாழ்க்கை நடத்தின.

ஒரு சமயம் காட்டில் மழை பொய்த்து விட்டது. அதனால் காட்டில் இருந்த மரங்கள் பட்டு போக ஆரம்பித்தன.

காட்டிலிருந்த கிளிக்கூட்டத்திற்கு உணவு கிடைக்கவில்லை. எனவே கூட்டத்திலிருந்த கிளிகள் ஒவ்வொன்றும் அக்காட்டை விட்டு பல திசைகளை நோக்கிப் பறந்தன.

ஒரு கிளி மட்டும் அக்காட்டில் நன்கு வளர்ந்த இலவ மரத்தில் காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தது.

“ஆகா! எவ்வளவு காய்கள் இந்த மரத்தில் இருக்கின்றன. இவை பழுத்தால் நமக்கு பல மாதங்களுக்கு உணவாகும்” என்று எண்ணியது கிளி.

அந்த இலவ மரத்திலேயே கிளி தங்கியது. இலவங்காய்கள் எப்போது பழுக்கும், எப்போது நமக்கு வயிறு நிறையும் என்ற ஏக்கத்துடன் கிளி காத்திருந்தது.

ஆனால் காலந்தான் கடந்தது. இலவ மரத்தின் காய்கள் பழுக்கவில்லை. மாறாக இலவ மரத்தின் காய்கள் காய்ந்து உடைந்து பஞ்சாக பறந்தது. இதைப் பார்த்த அக்கிளி ஏக்கத்துடன் உயிரை விட்டது.

இக்கதையே “இலவு காத்த கிளி” என்று பழமொழி உருவாகக் காரணமாக அமைந்து விட்டது.

“நம்மில் ஒருவர் ஆகாத காரியத்தை எண்ணி முடங்கி கிடக்கும் போதும் தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளும் போதும் பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறுவதுண்டு” என்று அந்தப் பெண் கூறினாள்.

இதனைக் கேட்ட சிறுமி “எனக்கு பழமொழிக்கான பொருள் நன்கு புரிந்து விட்டது” என்றாள்.

பழமொழி மற்றும் அதற்கான விளக்கத்தை அறிந்தவுடன் கொக்குக்குஞ்சு கோதை அவ்விடத்தை விட்டு காட்டை நோக்கிப் பறந்தது.

வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர். காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குழந்தைகளே இன்றைக்கு உங்களில் யார் பழமொழியை கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

வேகமாக அங்கு பறந்து வந்த கொக்குக்குஞ்சு கோதை “நான் இன்றைக்கான பழமொழியையும் அதன் விளக்கத்தையும் கூறுகிறேன்.” என்று கூறியது.

காக்கை கருங்காலன் “சரி சொல். என்ன பழமொழியைப் பற்றிக் கூறப்போகிறாய்?” என்றது.

“நான் இன்றைக்கு இலவு காத்த கிளி பற்றிக் கூறுகிறேன்” என்று கூறி தான் கேட்டத்தை விளக்கியது கொக்குக்குஞ்சு கோதை.

அதனைக் கேட்ட நரி நல்லதம்பி “கிளிக்குஞ்சு பரஞ்சோதி பார்த்தாயா?. உன் இனத்தாரைப் போல நீயும் ஏமாந்து விடாதே” என்று கேலியாகக் கூறியது.

அதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “யாரோ ஒருவர் ஏமாந்ததற்காக அந்த இனத்தைச் சார்ந்த மற்றவர்களை கேலி செய்வது தவறு. இனி நீ இவ்வாறு யாரையும் கேலி செய்யக்கூடாது” என்றது. 

“குழந்தைகளே கொக்குக்குஞ்சின் பழமொழி மற்றும் அதன் பொருள் எல்லோருக்கும் புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழியைப் பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லொரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“இலவு காத்த கிளி போல” அதற்கு 3 மறுமொழிகள்

  1. S.செல்வராஜ்

    மிகவும் அருமையாக இருக்கிறது விளக்கம்.
    வாழ்த்துக்கள்.

  2. Devan Venkataraman

    Super story

  3. J. கிருஷ்ண குமார்

    கதை அருமை , சகோ . பள்ளிகளில் பாட புத்தகங்களாக வைக்கலாம் . பாராட்டுகள் .