உலக மகாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாடில் கூறிய கிரேக்கக் கதைதான், வீரத்தையும் விவேகத்தையும் கொடுத்தது. அதனால்தான், அவன் உலகை வலம் வந்தான். அலெக்சாண்டரின் உள்ளம் கவர்ந்த மகாகாவியம் தான், இலியட்.
கிரேக்க மொழி தமிழ், சமஸ்கிருதம் போல மிகவும் பழமை வாய்ந்த மொழி. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் “ஹோமர்” என்று ஒரு கவிஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரு கண்களிலும் பார்வை இல்லை.
இரவு நேரங்களில் கிரேக்க மக்கள் இறைவனுக்கு வழிபாடு நடத்தி விட்டுக் கூடியிருப்பார்கள். இந்தக் குருட்டுக் கவிஞன் ஹோமரை ஓர் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்து, கதை கூறக் கேட்பார்கள். ஹோமர் தனது கற்பனை வளத்தையும் கவிதை நயத்தையும் கலந்து அம்மக்களுக்குக் கதை கூறுவார்.
அக்கதைகளைப் பின்வந்தோர்களும் தலைமுறை தலைமுறையாகக் கேட்டுப் பாடம் சொல்லிச் சொல்லி இன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற மிகப்பெரிய காவியங்களாக இலியட் மற்றும் ஒடிசி விளங்குகின்றன.
அந்த இரு காவியங்களின் தாக்கம் இல்லாமல், எந்த ஒரு கவிஞனும் உலகில் கவிதை படைக்கவில்லை என்று கூறலாம். உலகக் கவிதையை, உலகச் சிந்தனையைப் பாதித்தவை அந்தக் காவியங்கள்.
இந்தியாவிற்கு இராமாயணமும் மகாபாரதமும் என்றால், உலகிற்கு இலியட் மற்றும் ஒடிசி என்று கூறலாம். உலக அளவில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியவை இந்த மகா காவியங்கள்.
இலியட் காவியம்
இலியட் ஹோமரின் முதல் படைப்பாகும். இது கி.மு. 3200 ஆண்டிற்கு முன்னைய கிரேக்க வரலாற்றையும், வாழ்வியலையும், பண்பாட்டையும் விளக்கும் மாபெரும் காவியம்.
ஸ்பாட்டா நகர் மன்னன் மெனிலேயஸ். அவனுடைய மனைவி ஹெலன், உலக மகா அழகி. ஒரு நாள் ட்ரோஜன் நாட்டு இளவரசன் பாரீஸ் என்பவன் அவளைப் பார்த்து விட்டான்; அழகி ஹெலன் மீது பாரீஸ் மோகம் கொண்டான்; அவளைத் திட்டமிட்டுக் கவர்ந்து சென்று தனது நகர் டிராய் பட்டணத்திலுள்ள கோட்டைக்குள் வைத்துக் கொண்டான்.
இதைக் கேள்விப்பட்ட கிரேக்கச் சிற்றரசர்கள் அனைவரும் ஒன்று கூடினர். ஹெலனை மீட்க வேண்டுமென்று ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர்.
மெனிலேயஸின் சகோதரன் அருகிலுள்ள மைசினேய் என்ற நகரத்தை ஆண்டு வந்த மன்னன். அவன் பெயர் அகமெம்னன். அவன் 12 கப்பல்களுடன் ஹெலன் சிறைப்பட்டிருக்கும் டிராய் நகர் நோக்கிப் படையெடுத்தான். மேலும், மாவீரன் அக்கிலஸ் தனது பங்கிற்குப் படையெடுத்து டிராய் நகர் சென்றான்.
டிராய் நாட்டு மக்களோ, மாவீரன் அக்கிலஸ் யுத்தம் செய்ய வருகிறானென்று அறிந்ததும் அச்சத்துடன் தங்கள் நாட்டுக் கோட்டையினுள் புகுந்து கொண்டனர்.
அக்கிலசு, அகமெம்னான் என்ற இரு மாவீரர்கள், தத்தம் படைகள் புடைசூழ, டிராய் நகரை முற்றுகையிட்டனர். இருந்தபோதிலும், இந்த இரு மாவீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்தக் கிரேக்க அணிக்குள்ளாகச் சின்னச் சின்னப் பூசல்கள் தொடர்ந்தன.
அக்கிலஸின் படையைச் சேர்ந்த அடிமைவீரன் ஒருவனை அகமென்னான் கைப்பற்றினான். அதனால், சினமுற்ற அக்கிலஸ் போரிலிருந்து விலகிக் கடற்கரையில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தான். அதனை அறிந்த டிராய் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் பதுங்கியிருந்த கோட்டையை விட்டு வெளிவர, மீண்டும் சண்டை துவங்கியது.
அக்கிலஸ் இல்லாமல், கடுமையான போரில் கிரேக்கம் வெற்றி பெற முடியாது என அறிந்த அக்கிலஸின் நண்பன் பெட்ரோகிளாஸ் அக்கிலஸின் ஆயதங்களையும் பெற்றுப் போரிட்டான்.
அப்போலோ என்ற தெய்வம் ஏற்கனவே கொடுத்திருந்த சாபத்தால் பெட்ரோகிலாஸ் போர்க் களத்தில் மயக்கமடைந்து வீழ்ந்து விட்டான். இதனைப் பயன்படுத்தி ட்ரோஜன் நாட்டு இளவரசன் ஹேக்டர் பெட்ரோகிளாஸைக் கொன்று விட்டான்.
கடற்கரையிலிருந்த அக்கிலஸிற்குச் செய்தி எட்டியது. சினத்துடன் பழி வாங்கப் போரில் கலந்து கொண்டான். போர்க்களத்தில் நண்பனைக் கொன்ற ஹெக்டரைக் கொன்று சடலத்தைத் தனது இரதத்தில் கட்டி இழுத்துச் சென்றான். அதனைக் கண்ட ட்ரோஜன் மன்னன் கோட்டையிலிருந்து வெளியே வந்து சமாதானம் பேசிக் கெஞ்சி உடலைப் பெற்று முறைப்படி அடக்கம் செய்தான்.
ஜீனோ, மினர்வா ஆகிய தெய்வங்களின் அருளால், மாபெரும் வெற்றியடைந்தான், ஆக்கிலஸ். அக்கிலஸின் நண்பன் ஒடிசியஸ், தக்க ஆலோசனை கூறி, வெற்றிக்குப் பாடுபட்டான். ஹெலன் மீட்கப்பட்டாள். இக்கதையே, இலியட் காவியம்.
இலியட்டும் இராமாயணமும்
இக்கதையின் பிற்பகுதி ஒடிசி என்று தனிக் காவியமாக விளங்குகிறது. இக்கதையில் வரும் ஹெலன் – சீதையையும்; இளவரசன் பாரீஸ் – இராவணனையும், டிராய் நகர் – இலங்கையையும் நம் நினைவிற்குக் கொண்டு வரும்.
மிகப் பழங்காலத்தில் மத்திய ஆசியாவில் வாழ்ந்த மக்களின் ஒரு பிரிவினர் கிரேக்கம் நோக்கியும், மற்றொரு பிரிவினர் ஹைபர், போலன் கணவாய் வழியாகப் பாரசீகத்தைக் கடந்து, இந்தியா நோக்கியும் வந்தனர் என்கின்றனர்.
அவர் மொழியினை (கிரேக்கம் – சமஸ்கிருதம்) ஆய்வு செய்த பொழுது, ஒற்றுமையைக் கண்டு மொழியியலாளர் வியப்படைகின்றார்கள். இரு பிரிவினரும் பிரிந்து செல்லும் முன், மூலக் கதை மத்திய ஆசியாவில் உருவாக்கியிருக்கலாம்.
‘ஒரு மாவீரன், அவளின் அழகிய மனைவியை வேறு ஒருவன் கவர்ந்தான்; போரிட்டு மீட்டான் என்பது மூலக்கதை.
சீதை ஹெலனாகவும், டிராய் நகர் இலங்கை நாடாகவும் கற்பனை வளத்திற்கேற்ப, பண்பாட்டு மரபிற்கேற்ப, ஏன் இராமாயணமாகவும் இலியட்டாகவும் உருமாறியிருக்கக் கூடாது? ஆம், அப்படித்தான். இது உங்கள் தெளிவான சிந்தனைக்குரியது.
– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்