இலையில்லா இலையுதிர் மரம் என்ன சொல்கிறது?

வானுயர வளர்ந்த
எட்டிப் பார்க்க
எட்ட முடியாத
உயர்ந்த மரம்
இலையுதிர்ந்த மரம்
என்ன சொல்கின்றது?

தானுயர்ந்து
இலையாய்
தலையாய்
பூத்து குலுங்கினாலும்
இலை இழந்து
தலை உதிர்ந்து
தாழ்த்தி நின்றாக வேண்டும்தான்.

அகங்காரம்,
ஆணவம்,
பதவி,
எல்லாம் தெரிந்தாய்
நினைக்க வைக்கும் கல்வி,
இல்லாதோரை இழி கூரும்
இழிந்த மனப்பாங்கு,
எல்லாம் போய்
எல்லோரையும்
ஒன்றாய் பார்க்கும்
மனப்பாங்கு.

கனிவு
தான் இழந்தாலும்
தலை இழந்தாலும்
எல்லோரும் நன்றாயிருக்க
வேண்டுமென்ற
உயர்ந்த உள்ளம்.

இலையுதிரா
பசுமை மரமாய்
இருக்க கூடாதா?
அதற்கு இடம்
தடம் பாங்குடனே
இருந்திருந்தால்,
ஒரே நேரத்தில்
எல்லாம் உதிரா
மரமாய் இருந்திடலமே?
இல்லை இல்லை
எம்மரமாய்
இருந்திடினும்
பசுமை மாறாமல்
இருந்திடுனும்
தலையுதிர
இலையுதிர
இலைவிழாமல்
இயலாது
உயரே, உயரே
வளரும்போதுதான்
இழந்து இழந்துதான்.
வெல்வது மட்டும்தான் வாழ்வன்று.
இழப்பதுவும்தான்.
இலை உதிர்வோம்
தலை உதிர்வோம்
சிரம் தாழ்த்தி
தான் இழந்து
மரம் உயர்ந்து
மறம் உயர்ந்து
அறம் உயர்ந்து
அறம் உயர்த்தி
நீண்ட நெடுமரமாய்
சிரம் தாழ்த்தி
நிற்போம்.

Dr.இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி 110016

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.