ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித பருவகாலங்கள் காணப்படுகின்றன.
இக்காடுகளில் உள்ள மரங்கள் அகன்ற இலைகளுடன் குறிப்பிட்ட பருவத்தில் இலையை உதிர்த்து விடுவதால் இவை அகன்ற இலை இலையுதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்காடுகளில் சில பருவகாலங்கள் வறட்சியாக இருப்பதால் இவை உலர்காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை பொதுவாக புவியின் மிதமான மண்டலங்களில் அமைந்துள்ளன.
இக்காடுகளில் வெப்பநிலையானது மழைக்காடுகளைவிடக் குறைவாகவும், கூம்புவடிவ காடுகளைவிட அதிகமாகவும் இருக்கும்.
இக்காடுகளில் உள்ள உயிரினங்கள் இங்கு நிலவும் வெப்பநிலை மாறுபாட்டினை தாங்கி வாழக்கூடிய தகவமைப்பினைக் கொண்டுள்ளன.
இங்குள்ள தாவரங்கள் நீராவிப் போக்கினைக் குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.
இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளில் சில குறிப்பிட்ட பருவங்களில் வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றன.
வேறு சில இங்கு நிலவும் பருவ மாற்றங்களை தாங்கி வாழக்கூடிய தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.
இலையுதிர் காடுகளின் வகைகள்
இலையுதிர் காடுகளில் நிலவும் காலநிலையைப் பொறுத்து இக்காடுகள் மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள், வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள், வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள்
அமைவிடம்
மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள் புவியின் வடஅரைக்கோளத்தில் பெருமளவு காணப்படுகின்றன.
தென்அரைக்கோளத்தில் தென்அமெரிக்கா, நியூலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படுகின்றன.
இக்காடுகள் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப்பகுதி, கிரேட்லேக் பகுதி, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய பகுதிகள், ரஷ்யாவின் சில பகுதிகள், சீனா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
காலநிலை
இக்காடுகளில் மிதமான காலநிலை நிலவுகிறது. இங்கு குளிர்காலம் மிகவும் குளிராகவும், கோடைகாலம் வெப்பமாகவும் இருக்கும்.
இக்காடுகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் நிலவும் வெப்பநிலைகளில் அதிகளவு வேறுபாடுகள் இருக்கும்.
ஆகவே இங்கு ஆண்டின் சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.
இக்காடுகளில் மழைப்பொழிவானது 76 முதல் 152 செமீ வரை இருக்கும். மழைப்பொழிவு இங்கு ஆண்டுமுழுவதும் இருக்கும்.
இக்காடுகளில் கோடைகாலம், இலையுதிர் காலம், வசந்த காலம், குளிர்காலம் என நான்கு பருவநிலைகளைக் கொண்டுள்ளன.
இங்கு வெப்பநிலை வசந்தத்தில் தொடங்கி கோடைகாலத்தில் உச்சநிலையை அடைகிறது. மேலும் இங்கு இலையுதிர் காலத்தில் குளிர் ஆரம்பித்து குளிர்காலத்தில் உச்சமாகிறது.
இக்காடுகளில் உள்ள மரங்களின் இலைகள் இலையுதிர் காலத்தில் நிறம் மாறி உதிர ஆரம்பிக்கின்றன. குளிர்காலத்தில் இக்காட்டு மரங்கள் இலைகளை முற்றிலும் உதிர்த்து விடுகின்றன.
புவியியல் கூறுகள்
இவ்வகைக் காடுகள் மலைகள், பள்ளத்தாக்குகள், மலைச்சரிவுகள், பீடபூமிகள் ஆகிய இடங்களில் வளர்கின்றன.
இங்கு காணப்படும் மண்ணானது வளமிக்கதாக இருக்கிறது. தாவர மற்றும் விலங்கினங்கள் இறந்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களால் மட்கப்பட்டு மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.
ஆறுகள், நீரோடைகள், நீரூற்றுக்கள், ஏரிகள், குளங்கள் ஆகிய நீராதாரங்கள் இக்காட்டினை வளப்படுத்துகின்றன.
உயிரினங்கள்
இவ்வகைக் காடானது ஐந்து வகை அடுக்குகளைக் கொண்டுள்ளது. இக்காடுகளில் உள்ள அடுக்கிற்கு ஏற்றவாறு உயிரினங்கள் அந்தந்த அடுக்குகளில் காணப்படுகின்றன.
இவ்வகைக் காட்டின் முதல் அடுக்கு மரஅடுக்கு என்றழைக்கப்படுகிறது. இங்கு 60-100 அடிஉயரம் உள்ள ஓக், மேப்பிள், கிக்கோரி, பீச் உள்ளிட்ட மரங்கள் காணப்படுகின்றன.
அடுத்த அடுக்கு சிறுமரஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது. இங்கு டாக்வுட், ரெட்பட்ஸ் உள்ளிட்ட மரங்கள் காணப்படுகின்றன.
மூன்றாவது அடுக்கு புதர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது. இவ்வடுக்கில் அஜீலாஸ், ரோடொடென்ரான் போன்றவை காணப்படுகின்றன.
நான்காவது அடுக்கு மூலிகை அடுக்கு என்பதாகும். இதில் காட்டுப்பூக்கள், ஃபெர்ன்ஸ் போன்றவை காணப்படுகின்றன.
கடைசி அடுக்கு காட்டுத்தரை ஆகும். இதில் லிச்சன்சுகள், மோசஸ் போன்றவை உள்ளன.
கருப்பு கரடிகள், கயோடிகள், ஓநாய்கள், எலிகள், முயல்கள், மான்கள், ஓட்டர்கள், இருவாழ்விகள், பாம்புகள், பெரிய கொம்பு ஆந்தை, பாடும் பறவை, மரங்கொத்திகள், வல்லூறுகள், பருந்துகள், நீலக்குருவி போன்றவை இங்கு உள்ளன.
வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள்
அமைவிடம்
வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள் வடகிழக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு இந்தியா, மியான்மாரின் ஒரு சில பகுதிகள், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலநிலை
இங்கு வெப்பநிலை அதிகமாகவும், மழைப்பொழிவு சீராகவும் இருக்கும். இக்காடுகளில் கோடை காலம் வெப்பமாக இருக்கும். இக்காடுகளில் வறட்சியானது குறுகிய காலஅளவினைக் கொண்டிருக்கும்.
கோடையின் ஆரம்பத்தில் இக்காடுகள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. மழை தொடங்கியதும் இலைகள் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கின்றன.
புவியியல் கூறுகள்
இவ்வகைக் காடுகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் காணப்படும் மண்ணானது அவ்வளவு வளமானதாக இருப்பதில்லை.
ஏனெனில் சத்துமிக்க மேற்புற மண்ணானது
மழையில் அடித்து செல்லப்பட்டு வளம் குறைந்ததாக மாறிவிடுகிறது. மேலும் இவ்வகைக் காட்டின் தரைப்பகுதிக்கு போதிய வெளிச்சம் கிடைக்காதல் மண்வளம் குறைந்ததாக உள்ளது.
ஆறுகள், பருவகால ஓடைகள், மழை ஆகியவை இக்காட்டினை வளப்படுத்துகின்றன.
உயிரினங்கள்
இவ்வகைக் காடுகளின் மரங்கள் மரப்பட்டைகளைப் பெற்றுள்ளன. தேக்கு, செம்மரம், எபினி, அரசமரம் உள்ளிட்ட மரங்கள் இவ்வகைக் காடுகளில் காணப்படுகின்றன.
கங்காருகள், யானைகள், குரங்குகள், புலிகள், நீர்எருமைகள், பாடும் பறவைகள், குராவங் பறவைகள், இருவாழ்விகள், மலைப்பாம்புகள், கலோட் பல்லிகள் காணப்படுகின்றன.
வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள்
அமைவிடம்
வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள் மத்திய இந்தியா, பிரேசிலின் சில பகுதிகள், அங்கோலா, தான்சானியா, சூடானின் வடக்குப்பகுதி, மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன.
காலநிலை
இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும். அதிக வெப்பத்தின் காரணமாக இங்கு மழைப்பொழிவு நிகழ்கின்றது. இக்காடுகளில் கோடை மிகவும் வறட்சியாகவும், நீண்டதாகவும் இருக்கிறது.
தான்சானியாவில் உள்ள இவ்வகைக் காடுகளில் வறட்சியானது ஏழு மாதங்கள் வரை நீடிக்கும்.
புவியியல் கூறுகள்
இவ்வகைக் காடுகள் குறைந்த காலத்தில் அதிக மழைப்பொழிவினைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள இவ்வகைக் காடுகள் 24 மணிநேரத்தில் 89 செமீ மழைப்பொழிவினைப் பெற்றிருக்கின்றன.
கோடையின் ஆரம்பத்தில் இக்காடுகள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. மழை தொடங்கியதும் இலைகள் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கின்றன.
இவ்வகைக் காடுகள் பெரும்பாலும் புல்வெளிகளை சமவெளிகளிலும், சரிவுப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகளில் மண்ணானது சற்று வளம் குறைந்ததாக உள்ளது. இக்காடுகளில் நிலவும் நீண்ட வறண்ட காலநிலை மண்ணின் வளத்தினைக் குறைக்கின்றன.
பருவகால ஓடைகள், பருவகால ஆறுகள், மழை ஆகியவை இவ்வகைக் காட்டிற்கு வளம் சேர்க்கின்றன.
உயிரினங்கள்
இவ்வகைக் காடுகளின் மரங்கள் தடித்த மரப்பட்டைகளைப் பெற்றுள்ளன. சிலவகை மரங்கள் தண்டுகளில் தண்ணீரை சேமித்துக் கொள்கின்றன.
சிலவகை மரங்கள் இலைகளுக்குப் பதிலாக முட்களைக் கொண்டுள்ளன. வாட்டில், பனை, தேக்கு, அகாசியா, போபாப் உள்ளிட்ட மரங்கள் இவ்வகைக் காடுகளில் காணப்படுகின்றன.
வரிக்குதிரை, வெளிமான்கள், யானைகள், புலிகள், குரங்குகள், சிங்கங்கள், ஒட்டகசிவிங்கிகள் போன்ற விலங்கினங்களும் தூக்கணாங்குருவி, வெர்ன், ஃபால்கான்ஸ் பறவைகள், இருவாழ்விகள், பாம்புகள், அகாமா பல்லிகள் போன்ற பறவையினங்களும் இக்காடுகளில் காணப்படுகின்றன.
இலையுதிர் காடுகளின் முக்கியத்துவம்
இக்காடுகளில் காணப்படும் தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் சுற்றுசூழலை சமநிலைப்படுத்தி மனித வாழ்வை வளமாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக ஆக்ஸிஜன் சுழற்சி, கார்பன் சுழற்சி, நீர் சுழற்சி, ஊட்டச்சத்துக்கள் சுழற்சி போன்றவற்றைக் கூறலாம்.
இவை மனிதனுக்கு உணவு, உறைவிடம், பொருளாதாரம் போன்றவற்றை வழங்குகின்றன.
மனிதனுக்குத் தேவையான மரங்கள், பேப்பர்கள் போன்றவற்றிற்கான மூலப்பொருட்கள் இக்காட்டுகளிலிருந்து பெறப்படுகின்றன.
ஆகவே காடுகளை கண் எனப்போற்றிப் பாதுகாத்து நாம் சிறந்த சுற்றுசூழலில் வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் அதனை பரிசாகக் கொடுப்போம்.