சதுரங்க காய்களை நகர்த்தும்
ஆபத்தை அறிந்தவனாகப்
புரியாமைக்கும் புரிதலுக்கும்
நடுவே இருக்கிறான் அவன்
வழக்கமான பாதையில்
நடந்து போகும்
வழிப் போக்கனைப் போல்
புரிந்தது சலித்துப் போக
புரியாமையினால் தேடுகிறான் அவன்
காலையில் சூரியன்
உதிப்பது போலவா
மாலையில் மறைகிறது
இனி வரும் நாட்கள்
இருட்டிலிருந்து
வெளிச்சத்திற்கு வருகிறது
காலத்தின் வேலை
அது தான் என
அது ஏற்கனவே இருந்த
பொருட்களின் மீதும்
மனிதர்களின் மீதும் படிகிறது
இருப்பதால் தானே காணாமல் போகிறது
மாறியது எல்லாம் மறைகிறது
ஓடாத கடிகாரம் தான்
சரியான நேரத்தைக் காட்டுகிறது
இயங்குவதின் ஓசை
இயற்கையைப் போல்
யாருக்கும் கேட்பதில்லை
ஓசையற்ற இசையை
கேட்காதவனின் காது
மகத்தான இசையை
படைத்தது போல்
எல்லாவற்றையும் நுட்பமாய் அறிய
வெறுமை என
வடித்த எண்ணங்களை
அப்படி அப்படியே
விட்டு விட்டுப் போனான்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!