இல்லாள் இனி இல்லாள்

அழுத்தமான அமைதியில்

அமிழ்ந்து போன என்னை

உன்னால் மட்டுமே

ஒலிப்படுத்த முடியும் என்பது

காலம் கடந்த பின் அல்ல

என்னை விட்டு

நீ அகன்ற பின்

நான் உணர்ந்த வேதம்!

ஆர்ப்பரித்துச் சென்ற

நம் வாழ்க்கைச் சுழலில்

அற்புதமாய் இல்லறம் பேணி

ஏற்ற இறக்கங்களில்

உடனிருந்து உயிர்ப்பு தந்த

உனது பாங்கும்

நம்மோடு பயணித்த

சண்டைகளும் சரசங்களும்

ஏழு பிறவிக்கும்

மறதி பெறாது!

இல்லாள் இனி

இல்லாள் ஆனதால்

இவன் யாரிடமும் பேசாத

சித்தனாகிப் போனான் என்று

ஊர் சொல்கிறது!

உனக்கு மட்டுமே தெரியும்

உள்ளோடு உன்னோடு மட்டுமே

உரையாடிக் கொண்டிருக்கும்

பித்தன் இவன் என்று!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.