இயற்கை விளையாட்டு பானம் இளநீர்

சுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா?. இல்லை என்பதே பதிலாகும்.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம்.

இளநீரானது மனிதஇரத்த பிளாஸ்மாவை ஒத்துஇருப்பதால் இது இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்களுக்கு குளுக்கோசு தட்டுப்பாட்டின் காரணமாக நரம்புகளின் வழியாக இளநீரானது நேரடியாக ஏற்றப்பட்டது. ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை.

இளநீர் என்பது பச்சை நிற இளமையான தேங்காயிலிருந்து பெறப்படும் தெளிவான நீரினைக் குறிக்கும். பொதுவாக தேங்காயானது தோன்றிய ஒருவருடத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

இளநீர்க் காயானது தோன்றிய 5-7 மாதங்களில் வெட்டப்படுகிறது. அப்போதுதான் இக்காயானது அதிக நீரினைக் கொண்டிருக்கும்.

இளமையான தேங்காயிலிருந்து பெறப்படும் நீரானாது இளம்தேங்காய்நீர் என்றழைக்கப்பட்டு பின் மருவி இளநீர் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாகத்தினை நீக்கும் தன்மை ஆகியவற்றால் இது இயற்கை விளையாட்டு பானம், வாழ்க்கை மேம்பாட்டாளர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இளநீரானது தென்னை மரத்திலிருந்து பெறப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் கோகோஸ் நியூசிபெரா என்பதாகும். தென்னை ஆர்க்காசியேயி என்ற பனை தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இளநீரின் வரலாறு

இளநீரானது தென்னை மரத்திலிருந்து பெறப்படுகிறது. தென்னையின் தாயகம் இந்தியா மற்றும் மலேசிய கடற்கரைப்பகுதிகள் ஆகும். 15-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது ஆப்பிரிக்க பகுதிகளுக்கு பரவியது.

பின் அங்கிருந்து இது ஐரோப்பாவிற்கு சென்றது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இளநீர் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

இந்தியாவில் இளநீரானது புனிதமாகக் கருதப்படுகிறது. தென்னை மரத்தினை கற்பகத் தரு என்றும் இந்தியாவில் அழைக்கின்றனர். (கற்பகத் தரு என்பது நமது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் மரம் என்பது பொருளாகும்).

தென்னையின் எல்லா பாகங்களும் பயன்படுவதால் இதனை நித்திய மரம் என்றும் அழைக்கின்றனர்.

வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரும் இயல்பினைக் கொண்டுள்ள தென்னையானது தற்போது இந்திய, பசிபிக் கடற்கரையோரங்களில் அதிகளவு காணப்படுகிறது.

ஹவாய் தீவுகள், மேற்கு இந்திய தீவுகள், ஜமைக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மியான்மார், மசேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்பு நியூகினிவா உள்ளிட்ட நாடுகளில் தென்னை காணப்படுகிறது.

இளநீரின் அமைப்பு

இளநீரானது ரக்ஃபி பந்தினை போல தோற்றத்தினைக் கொண்டது. இது 20-30 செமீ நீளத்தில் கடினமான மூன்று மேற்பக்கங்களைக் கொண்டுள்ளது.

 

இளநீரின் அமைப்பு
இளநீரின் அமைப்பு

 

இளநீரானது நடுவில் கடிமான தண்ணீர் உட்புகாத ஓட்டுப்பகுதிக்குள் காணப்படுகிறது. இவ்வோட்டு பகுதியானது சற்று கடிமான நார்ப்பகுதியினுள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இளநீரில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃ;ப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), கோலைன், ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புகளான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவைகள் உள்ளன.

இதில் குறைந்த எரிசக்தி, புரோடீன், நார்ச்சத்து, இயற்கை இனிப்புச் சத்து முதலியவைகள் இருக்கின்றன. இளநீரானது 95 சதவீதம் நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது.

இளநீரானது உருளைக்கிழங்கு, வாழைப்பழம் ஆகியவற்றைவிட அதிகளவு பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது.

இளநீரின் மருத்துவப் பண்புகள்

நீர்ச்சத்தினை உடலுக்கு அளித்தல்

இளநீரானது உடனடியாக உட்கிரக்கிக்கப்படும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே இது எளிதில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கிவிடும்.

மேலும் இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்றவை மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன.

வெயில் சென்றுவிட்டு நாம் இளநீரினை அருந்தும்போது நம்மைவிட்டு நீங்கிய தாதுஉப்புக்கள், விட்டமின்கள் ஆகியவற்றை நாம் திரும்பப் பெற்று புத்துணர்ச்சியை உணர்கிறோம்.

எனவே நீர்இழப்பினால் அவதிப்படுபவர்கள் இளநீரினை உண்டு நல்ல தீர்வினைப் பெறலாம்.

வளர்ச்சிதை மாற்றத்தினை மேம்படுத்த

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின்போது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளிலிருந்து முழுமையான ஆற்றலைப் பெற மாங்கனீசு என்ற தாதுஉப்பு தேவை.

இளநீரில் மாங்கனீசு காணப்படுவதால் இதனை அருந்தும்போது நாம் முழுமையான ஆற்றலைப் பெற்று வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெறுகிறது.

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அதிக சோடியமும், குறைந்த பொட்டாசியமும் இருக்கிறது. சோடியமானது சிறுநீரகத்தில் நீரினை தேக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இதனால் சிறுநீரினை வெளியேற்றுதலில் சிறுநீரகத்தின் செயல்பாடானது அதிகரிக்கிறது. பொட்டாசியம் சிறுநீரினை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

மேலும் பொட்டாசியம் உடலில் உள்ள நச்சினை சிறுநீர் மூலம் வெளியேற்றி சிறுநீரகக்கற்கள் உருவாவதைத் தடை செய்து சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது.

இளநீரில் குறைந்தளவு சோடியமும், அதிகளவு பொட்டாசியமும் காணப்படுகிறது. எனவே இதனை குடிக்கும்போது சிறுநீரகம் சீராக செயல்பட்டு சிறுநீரகக்கற்கள் உருவாது தடைசெய்யப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க

இளநீரில் உள்ள பொட்டாசியமானது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீராக வெளியேற்றி இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

மேலும் இதில் உள்ள அர்ஜினைன் என்ற அமினோ அமிலமானது இரத்த நாளங்களை சீராக்கி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இதனால் இரத்த அழுத்தம் சீராகிறது. எனவே இளநீரினை உண்டு இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

நல்ல செரிமானத்திற்கு

இளநீரில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இளநீரினை அருந்தலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் இதில் உள்ள தாதுஉப்புக்கள் செரிமான வியாதிகளால் உண்டாகும் நீர் இழப்பினை சரிசெய்கின்றன. மேலும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை இதில் உள்ள பெப்டிடைட்ஸ் தடைசெய்கிறது.

இளறீரானது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.

தசைப்பிடிப்பிற்கு

மக்னீசியமானது தளர்வு தாதுஉப்பு என்று அழைக்கப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அழுத்தத்திலிருந்து தளர்வு செய்கிறது. மேலும் இது செரோடோனின் என்ற நல்ல ஹார்மோன் சுரப்பினைத் தூண்டுகிறது.

கால்சியமானது சீரான தசை தளர்வினை உருவாக்குகிறது. போதுமான அளவு கால்சியம் உள்ள உணவினை உண்ணும்போது இதய தசைகள் உள்ளிட்ட உடலில் உள்ள எல்லா தசைகளும் பிடிப்புகள் இல்லாமல் தளர்வாக இருக்கின்றன.

எனவே கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள இளநீரினை அருந்தும்போது அவை தசையினை பிடிப்புகள் ஏதுமின்றி தளர்வாக வைப்பதுடன் மனதிற்கும் அமைதியை வழங்குகின்றன.

கல்லீரலைப் பாதுகாக்க

இளநீரில் கல்லீரலினைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கல்லீரலைப் பாதுகாக்கின்றன.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

இளநீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சருமப் பராமரிப்பிற்கு

இளநீரில் சைட்டோகைனின் என்ற தாவர ஹார்மோன் உள்ளது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும் சருமச்சுருக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

சைட்டோகைனின் புற்றுச்செல்கள் உருவாவதையும் தடை செய்கிறது. மேலும் பருக்கள், வடுகள் மீது இளநீரினை மேற்பூச்சாகப் பூசும்போது அவை விரைந்து ஆறி மறைந்து விடுகின்றன.

இளநீரானது சருமத்தை வறண்டுவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் படியவிடாமலும் பாதுகாக்கிறது.

இளநீரினைப் பற்றிய எச்சரிக்கை

கொட்டைகள் மற்றும் விதைகள் ஒவ்வாமை உள்ளவர்கள் இளநீரினைத் தவிர்க்கவும்.

அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் அறுவைசிகிச்சைக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்து இளநீரினைத் தவிர்த்துவிட வேண்டும்.

ஏனெனில் இளநீரின் செயல்பாடானது இரத்த அழுத்தத்தில் வேறுபாட்டினை உண்டாக்கி விடக்கூடும்.

சிறுநீரக செயலிழப்பு கொண்டவர்கள் மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்து இளநீரை அருந்தவும்.

இளநீரானது அப்படியேவோ, சர்ப்பதாகவோ, பழச்சாறுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது. இளநீரினை வாங்கும்போது கனமானதாகவும், புதியதாகவும், கையில் குலுக்கினால் குலுங்காமலும் இருப்பதை வாங்க வேண்டும்.

இயற்கையின் அற்புத பானமான இளநீரினை அடிக்கடி உணவில் உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.