உயிர் உடலை விட்டுப் பிரியும் நேரம் அநேகமாக முதுமையில்தான் வரும். எனவே இப்போதிலிருந்தே இறைவனை வணங்குவதை விட, முதுமையில் வணங்கலாம் என்று பலர் நினைக்கின்றனர்.
ஒரு இருட்டறையில் மின்சார விளக்குடன் இருந்துவிட்டு, திடீரென்று மின்சாரம் நின்று விட்டால், ஒளியில்லாத அந்த இருட்டறையில் நம்மால் இருக்க முடிகிறதா?
உயிர் உடலை விட்டுப் போகும் போது கண்களில் ஒளியின்றிக் காட்சிகள் மறையும்; வாய் பேச முடியாமல் போகும்; தொண்டையும் அடைக்கும். இந்த மாதிரி நேரத்தில் ஒருவன் இறைவனைக் குறித்து துதிக்க முடியுமா என்ற நினைத்துப் பாருங்கள்.
இளமையிலிருந்தே இறைவனைக் குறித்து வாய் திறந்து பாடியிருந்தால், இறக்கும் சமயத்தில் தன்னையும் அறியாமல் இறைவன் நாமத்தை மனம் சொல்லிக் கொண்டிருக்கும். எனவே இளமையிலிருந்தே இறை தொண்டு அவசியம்.
‘ஐயோ’ என்று கூறவே கூடாது. ஏன்?
திடீரென்று நம் வாழ்க்கையில் ஏதாவது நடந்தால் நாம் என்ன சொல்கிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக கையில் உள்ள பொருள் தவறிக் கீழே விழுந்தால் அல்லது வேறு யாராவது தடுக்கி விழுந்தால் என்ன செய்கிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
‘அடா, அடா, ஸ்…ஸ்….ஆ…’ என்று குரல் எழுப்புகிறோம்.
பெரும்பாலும் ‘ஐயோ’ என்று கூவுகிறோம். இது தவறாகும் ஏன்? இதனால் என்ன துன்பம் வருகிறது?
‘ஐயோ’ என்பது எமனுடைய மனைவியின் பெயர்.
ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் கணவனின் நற்செயல்களுக்கு உறுதுணையாய் இருப்பதுதான் அவளுடைய தலையாய கடமையாகும்.
அதுபோல் எமதர்மன் அனைத்து உயிர்களையும் எடுக்கும் கடமையைச் செய்வதற்கு அவன் மனைவி உறுதுணையாய் இருக்கிறாள்.
மற்றவர்கள் உயிரை எடுக்கும் போது எமதர்மனுக்கு ஒருசட்டம் உள்ளது. கடவுள் நாமத்தை யாரொருவர் அவர்கள் இறக்கும்போது கூறுகிறார்களோ அல்லது நினைக்கிறார்களோ, அவர்களின் உயிரை எமதர்மராஜன் எடுத்துச் செல்ல சக்தியற்றவனாகி விடுகிறான்.
மரணப் படுக்கையில் ஒருவர் இருக்கும் போது அவரைச் சுற்றி இருக்கின்றவர்கள் ‘ஐயோ.. ஐயோ’ என்று அழுவார்கள்.
அந்த ஒலியைத்தான் இறக்கப் போகின்றவர் கேட்பார். அதனால் அவரின் வாயிலும் எண்ணத்திலும் இந்த சொல்லே நிற்கும்.
இதனால் கூடியிருப்பவர்கள் எமனின் தொழிலுக்கு உதவுகிறார்களே தவிர, பயனுள்ளதாக எதையும் இறப்பவருக்குச் செய்வதில்லை. எனவேதான் ‘ஐயோ’ என்ற சொல் எப்போதும் நம் வாயில் வரக்கூடாது என்கிறார்கள் பெரியோர்கள்.
இப்போது சிந்தியுங்கள்!
நம் நினைவிற்கு அப்பாற்பட்டுச் செயல்கள் திடீரென்று நடக்கும்போது நம் உள்ளமும், நாவும் எப்பொழுதும் இறைவன் நாமம் ‘சிவ சிவ’ என்றோ ‘நாராயணா’ என்றோ கூறி பழகி இருக்க வேண்டும்.
அப்போதுதான் இறக்கும் தருவாயில் மற்றவர் எது கூறினாலும், நம் உள்ளமும் நாவும் இறைவன் நாமத்தை கூறிக் கொண்டிருக்கும்.
ஒருவருடைய வாழ்வு மிகவும் சொற்ப காலமே. எனவே இளமையிலேயே இப்பழக்கத்தைக் கொண்டு வந்தால்தான் முதுமையில் மனம் இறைவன் நாமம் ஜபிக்கும்.
நேரம் கிடைக்கவில்லை
இறை வழிபாட்டிற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
எது எதற்கோ எவ்வளவோ நேரம் செலவு செய்கின்றோம். ஆனால் நம்மையும் பரந்த இவ்வுலகையும் படைத்து காக்கும் பரம்பொருளை வழிபட மட்டும் நேரமில்லை என்றால் அது விந்தையில்லையா?
மேலும் பலர் காலையிலும், மாலையிலும்தான் இறைவனை வழிபட வேண்டும் என்று வைத்துக் கொண்டுள்ளனர். வேறு முக்கியமான வேலை வந்துவிட்டால் வழிபாட்டை முதலில் விட்டு விடுகின்றனர்.
வீட்டில் குழந்தை பிறந்தாலோ அல்லது யாராவது இறந்தாலோ குறிப்பிட்ட சில நாட்களுக்குக் கோவிலுக்கும் போகக் கூடாது என்றும், தெய்வீகச் சின்னங்களை நெற்றிலும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் அந்நாட்களில் உணவு உண்ணாமலும், மற்ற காரியங்களை செய்யாமலும் இருக்கிறார்களா? இவைகள் இறை நம்பிக்கையைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகள்.
நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஒருசமயம் ஓர் ஊருக்குச் சென்றார்.
எங்கும் தன் பெயரில் தண்ணீர் பந்தல், சுமை தாங்கி, நிழல் தரும் இடங்கள் வைத்துத் தொண்டு செய்து வந்த ஓர் அன்பரைக் கண்டு உளமார வாழ்த்தினார்.
அவர் வீட்டில் அமுதுண்ணவும் இசைந்தார். அவ்வன்பரின் மனைவி அமுது தயார் செய்தபின், தன்னுடைய மகன் மூத்த திருநாவுக்கரசனை அழைத்து (நாயன்மார் பெயரையே தம் குழந்தைகளுக்கு வைத்திருந்தனர்) வாழை இலை பறித்து வர அனுப்பினாள்.
வாழையிலை பறிக்கையில் நாகத்தால் தீண்டப்பட்டாலும் வாழையிலையினைக் கொண்டு வந்து கொடுத்த பின்னரே மூத்த திருநாவுக்கரசனின் உயிர் பிரிந்தது.
வெளியில் இதைச் சொல்ல வேண்டாமென வாழையிலையில் அச்சிறுவனின் உடலைச் சுருட்டி ஓரம் வைத்த அந்தத்தாய் அடியாருக்கு உணவு பரிமாற வந்தாள்.
திருநீறு கொடுக்க சிறுவனை அழைத்த திருநாவுக்கரசர், உண்மை தெரிந்து இறைவனை வேண்டி அச்சிறுவனை உயிர்ப்பித்தார்.
இறந்த வீட்டில் அடியார்க்கு உணவு படைக்கலாமா என்று அந்தத் தாய் சிறிதும் கலங்கவில்லை. மாறாகத் தன் மகன் இறந்ததற்கு கலங்கவில்லை. விஷயம் அறிந்த திருநாவுக்கரசரும் ‘இறந்த வீட்டில் உண்பதா?’ என்று அவ்விடம் விட்டு விலகவில்லை.
இறந்த வீடு, குழந்தை பிறந்த வீடு என்று கோவிலுக்கு போவதைத் தடுப்பதெல்லாம் இடையில் வந்த குதர்க்கங்கள்தான்.
இறப்பு என்பது ஆன்மா பெறும் விடுதலை. அதற்காக இறை வழிபாட்டை நிறுத்துவது என்பது மூடநம்பிக்கை.
இறைவனை நாம் காலையில் எழுந்திருப்பது முதல் இரவு நாம் தூங்கும்வரை (படுக்கையில் படுக்கும் வரை அல்ல, தூக்கம் வரும் வரை), இறை நாமம் அல்லது இறைவனைப் பற்றி பாட்டுச் சொல்லித் துதிக்க வேண்டும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனைக் குறித்துப் பேசினால்தான், இறுதிக் காலத்தில் நாம் நினைக்கும் போது இறைவனைத் தொழ முடியும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!