இளைஞனே எழுந்து வா
நீ சாகப் பிறந்தவன் அல்ல
சாதிக்கப் பிறந்தவன்!
உட்கார்ந்து அழிந்து போகாமல்
உயர் இலட்சியத்திற்காய்
உழைத்துத் தேய்ந்து போ!
பாதையில்லை எனப் பதறாதே
உன் பாதம் தேய்த்துப்
புதிய பாதை உருவாக்கு!
சிகரம் தொட்டு விட
சிந்தையைத் சீர்தூக்கு!
பெண்ணின் இடர்களையும்
நாட்டின் அவலங்களையும்
ஏழைகளின் கொடுமைகளையும்
களைந்து விட
உன்னால் முடியுமென
உளமார நம்பி வா!
குட்டிச் சுவரில்
அமர்ந்து வெட்டிப்
பேச்சு பேசியது போதும்!
விடியும் விடியல்
உனக்கானது என்றே
இளைஞனே எழுந்து வா!
பெற்றோரைப் பேணிட
இளைஞனே எழுந்து வா!
தமிழைக் காக்க
தலை நிமிர்ந்து வா!
மண்ணில் பயிர் செய்ய
உன்னில் உயிர் கொண்டு
இளைஞனே எழுந்து வா!
ஊக்கத்தை உரமாக்கி
மாற்றத்தைக் கொண்டு வர
இளைஞனே எழுந்து வா!
ஞா.கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!