இந்திய நாட்டின் இளைஞர் கையில்
இருக்குது இந்த உலகு
சிந்தையில் மனித நேயம் வளர்த்து
சிறப்புடன் நீயும் விளங்கு (இந்திய)
விந்தை இதுவென பலரும் உலகில்
வியந்து போற்ற வளரு
பந்தயம் செல்லும் குதிரையை போலவே
பாய்ந்து செல்லப் பழகு (இந்திய)
அழிவினுக் கென்றே குண்டுக ளாகவே
ஆக்கிய அணுவை எடுத்து
எழிலுரு வென்றே உலகை மாற்றி
எங்குமே இன்பத்தைப் புகுத்து (இந்திய)
தட்டு தடுமாறி முன்னோர் தந்த
தமிழ் இலக்கியம் உணர்ந்து
எட்டுத் திக்கிலும் பரப்பிட வென்றே
எழுந்து செல்ல துவங்கு (இந்திய)
எட்டினை வைத்தே நடந்து சென்று
எட்டிட இயலாது உலகை
பட்டுச் சிறகினை போர்த்தி நீயும்
பறந்து செல்லப் பழகு (இந்திய)
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!