17.01.2025 அன்று இரண்டாவது முறையாக இசைஞானியின் இசை மழையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் 07.04.2014 அன்று மதுரையில் நடந்த ராஜாவின் சங்கீத திருநாள். இப்போது நெல்லையில்.
நேர்த்தியான விழா ஏற்பாடு. நிறைவான கூட்டம். அழகான மேடை. ஒளி வெள்ளத்தில் நனைந்து கொண்டு இருந்த எங்கள் உள்ளத்தில் இசை வெள்ளம் பாய்ச்சினார் இசைஞானி ராஜா.
கிட்ட தட்ட 18,000 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனைவரையும் கட்டிப் போட்டது இசைஞானியின் ‘ராஜ இசை’.
சரியாக மாலை 6.15 மணிக்கு ராஜா சாரின் ஆர்மோனிய பெட்டி மேடைக்கு வந்தது. “பெட்டி வந்தாச்சு! பெட்டி வந்தாச்சு!” என ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
“ராஜா சார் சென்னையில் நீங்க இருந்தாலும் உங்கள் எண்ணத்தில் எங்கள் நெல்லைச் சீமை இருப்பது எங்களுக்கு பெருமை!” என ஆர்ப்பரித்தது கூட்டம் முழுவதும்.
அடுத்து ஒளி வெள்ளத்தில் தகதகத்த மேடையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அந்நேரம் ராஜா சாரின் அனைத்து சாதனைகளையும் மூன்று நிமிடங்களுக்குள் சுருக்கி அழகாக விளக்கும் ஒரு அற்புதமான ஒலி ஒளி காட்சி நடத்தப்பட்டது.
அந்த காட்சியின் ஒலி அதிர்வு அனைவர் மனதிலும் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பினை மேலும் எகிறச் செய்தது.
ஒலி ஒளி காட்சி முடிந்ததும் ராஜா சார் மேடையில் வந்து, அவரின் ஆத்மார்த்தமான பாடலாகிய “ஜனனி! ஜனனி!” பாடலை ஆர்மோனியத்தினை வாசித்தபடியே பாடி இசை வேள்வி நிகழ்த்தி ரசிகர்களாகிய எங்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தி தன் வசப்படுத்திக் கொண்டார்.
அடுத்ததாக ‘நான் கடவுள்’ பட பாடல். பின்னணி பாடகர் ஹரி சரண் “ஹர ஹர மகாதேவ்” எனும் கோஷம் முழங்க “ஓம் சிபோகம்” என முழங்கிய பாடல் அனைவரையும் வேறு லோகத்துக்கு அழைத்துச் சென்று மென்மேலும் பரவசப்படுத்தியது.
அடுத்தடுத்து S.P.B.சரண், யுகேந்திரன், மது பாலகிருஷ்ணன், கார்த்திக், அனன்யா பட், ஸ்வேதா மேனன் இன்னும் பல இசை பிரபலங்கள், இப்படி ஒவ்வொரு பாடகராக அழைத்து பாட வைத்தார்; எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆட வைத்தார்.
பின் பகுதியில் கூட்டம் நடுவே இருந்த காலி இடத்தில் பலர் பரவசத்தில் ஆட்டம் ஆடி கொண்டாடினர். இவர்களில் பலர் 50 வயதைத் தாண்டிய பெரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடல் முடிந்ததும் கை கொட்டி தங்கள் பாராட்டுகளை இசைக் கலைஞர்களுக்கு அர்பணித்தனர் ரசிகர்கள் அனைவரும்.
இடை இடையே ராஜா சார் சொன்ன கதைகள் மிகவும் சுவாரசியமாக அமைந்தன. எனக்கு மிகவும் பிடித்தது, “நெல்லை எனக்கு புதிதல்ல. நெல்லையில் எனது காலடி படாத இடங்கள் இல்லை. ஆனால் நான் அப்போ பார்த்த நெல்லை இப்போது இல்லை” எனக்கூறினார்.
‘படித்தால் மட்டும் போதுமா?’ என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜியும் குணச்சித்திர நடிகர் பாலாஜியும் பாடுவதாக அமைந்த ‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கே இல்லை’ என்ற பாடலின் மெட்டில் நெல்லை குறித்து இவ்வாறு பாடினார்
“நான் பார்த்த நெல்லை நீ பார்க்கவில்லை
நீ பார்க்கும் நெல்லை
நிலையானதில்லை….” அரங்கமே அதிர்ந்தது.
இப்படியே பாடலைப் பற்றியும் பாடியவர்களை செல்லமாக கலாய்த்தும் நிகழ்ச்சி முழுவதையும் கலகலப்பாக கொண்டு சென்றார் ராஜா சார்.
மாலை 6.30 முதல் 10. 00 மணி வரை ஒரு மூன்றரை மணி நேரம் நொடிப்பொழுதெனக் கரைந்து போனது.
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றிற்கும் ஈயப் படும்”
எனும் திருக்குறளின் அர்த்தம் இன்றுதான் அனுபவ ரீதியாக முழுமையாகப் புரிந்தது.
இரவு பத்து மணிக்குள் நிகழ்ச்சியினை முடிக்க வேண்டும் எனும் கட்டாயத்தில் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ பாடலை முழுமையாக பாடி முடிக்காமல், ‘என்ஜோடி மஞ்சக் குருவி’ பாடலை அதிரடியாக இசைக்குழுவினர் பாட ஆரம்பிக்க அரங்கமே எழுந்து நின்று ஆர்ப்பரித்து ஆட கச்சேரியை முடித்தார் ராஜா சார்.
யாருக்கும் அரங்கை விட்டு நகர மனசு இல்லை; ஏன் அவருக்கும்தான். இப்படி ஒரு ஒழுக்கமான ரசனையான பாசமான ரசிகர் கூட்டத்தை நெல்லையை தவிர அவரால் வேறு எங்கும் கண்டிருக்க முடியாது.
எல்லோரும் “இன்னும் ஒரு பாடல்! இன்னும் ஒரு பாடல்!” எனக் கையை உயர்த்திக் கேட்க,
“தென் பாண்டி (நெல்லை) சீமையிலே
(நெல்லையப்பர்) தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடித்தாரோ!
யார் அடித்தாரோ!
வளரும் பிறையே தேயாதே!
இனியும் அழுது தேம்பாதே!
அழுதால் மனசு தாங்காதே!
அழுதால் மனசு தாங்காதே!!”
எனப் பாடி அனைவருக்கும் பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார் இசைஞானி.
எல்லோரும் செல்லும் போது சொன்ன வார்த்தை இதுதான் “ராஜா ராஜாதான்”.
இசைஞானியே, எங்களை எப்போதும் உற்சாகமா உயிர்ப்போட வச்சுக்கிற மாமருந்து நீங்கதான். எப்போதும் எங்க ராசா நீங்கதான். உங்களுக்கு சிறு வேண்டுகோள்,
நீங்க மனசு வச்சு இறங்கி வந்து இது போல நிறைய கச்சேரி பண்ணனும். புதுசு புதுசா இன்னும் நிறைய படம் பண்ணனும்.
“வழி நெடுக காட்டுமல்லி, தினம் தினமும் உன் நெனப்பு மற்றும் மனசுல மனசுல” போன்ற பாடல்கள் இன்னும் நிறைய தரணும்.
பண்ணைபுரத்து ராசைய்யா
நீங்கதான் எங்க தங்க ராசய்யா!
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!