இளையான்குடி மாற நாயனார் – வறுமையிலும் பக்தி

இளையான்குடி மாற நாயனார் வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு, சிவனடியாருக்கு அமுதளிக்க முற்பட்ட வேளாளர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் உழவுத் தொழில் செய்து வந்தார். உழவுத் தொழிலைச் செய்பவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.

மாறானாரும் அவருடைய மனைவியும் சிவனாரின் மீது அதிதீவிர பக்தி கொண்டிருந்தனர். சிவனடியார்களுக்கு தொண்டு செய்வது சிவனாருக்கு தொண்டுசெய்வதற்கு ஒப்பாகும் என்பதை எண்ணியே, சிவனடியார்களுக்கு திருவமுது படைத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அத்தம்பதியர்.

இளையான்குடியில் பிறந்த மாறனார் ஊரின் பெயரினைக் கொண்டே இளையான்குடி மாற நாயனார் என்று அறியப்படுகிறார்.

மாறனார் தம்முடைய வீட்டிற்கு வரும் சிவனடியவர்களை மனமுவந்து வரவேற்பார். பாதங்களை கழுவி, மலர்களால் வழிபாடு நடத்தி, உரிய ஆசனத்தில் அமரச் செய்வார். பின்னர் அவர்களுக்கு அறுசுவை விருந்து அளிப்பார். இம்முறைமை மகேசுவர பூசை என்று அழைக்கப்படும்.

மகேசுவரப் பூசையாலும், சிவனருளாலும் இளையான்குடி மாற நாயனார் உழவுத் தொழிலில் சிறப்புற்று செல்வந்தராக விளங்கினார். இதனால் சிவனடியாருக்கு திருவமுது படைக்கும் பணி அவருக்கு தொய்வில்லாமல் இனிதே நடைபெற்று வந்தது.

செல்வ‌வளத்தினால் மட்டுமின்றி வறுமை காலத்திலும், சிவனடியாருக்கு திருவமுது செய்விக்கும் மாறனாரின் உயர்ந்த உள்ளத்தை, உலகுக்கு வெளிப்படுத்த சிவபெருமான் எண்ணம் கொண்டார். ஆதலால் மாறனாரின் செல்வ வளத்தை படிப்படியாகக் குறைத்தார்.

இளையான்குடி மாற நாயனார் செல்வம் குறைந்த போதிலும், தன்னுடைய நிலபுலன்களை விற்று சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தார்.

மாறனாரின் செல்வ வளம் எல்லாம் குறைந்து வறுமை முற்றியது. தன்னுடைய உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களிடத்து கடன் பெற்று ,அடியவர்களுக்கு திருவமுது செய்வதைத் தொடர்ந்தார் இளையான்குடி மாற நாயனார்.

அப்போது ஒருநாள் குத்தகை வயலில் நெல்லை விதைத்திருந்தார் மாறனார். அவரிடம் உணவு சமைக்க அரிசி, பருப்பு உட்பட எந்தப் பொருளும் இல்லை. அவரும் மனைவியும் பட்டினியுடன் இருக்க வேண்டிய நிலை. நல்லவேளையாக அன்று சிவனடியார் யாரும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இரவு வந்தது. ஊர் அடங்கியது; திடீரென‌ இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் சிவனடியாராக வேடமிட்டு மாறனார் வீட்டினைத் தட்டினார்.

கதவைத் திறந்த மாறனார் சிவனடியாரைப் பார்த்ததும் மகிழ்சியடைந்தார். அவரை இன்முகத்தோடு வரவேற்று துடைக்கத் துண்டும், மாற்று உடையும் கொடுத்தார். அன்போடு ஆசனத்தில் அமரச் செய்தார்.

“ஐயா, சற்று பொறுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் சூடாக திருவமுது செய்கிறோம்” என்று சிவனடியாரிடம் வேண்டுகோள் விடுத்தார் மாறனார்.

“சரி, நானும் இங்கேயே சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன்.” என்றபடி அங்கேயே படுத்தார் சிவனடியார்.

அடியவருக்கு திருவமுது செய்விக்க என் செய்வது எண்ணிவாறு மனைவியிடம் சென்று அதனை தெரிவித்தார்.

மாறனாரின் மனைவியார் “திருவமுது செய்விக்க உணவுப் பொருட்கள் ஏதும் நம்மிடத்தில் இல்லை. இந்த மழை நேர இரவில் சுற்றதார்களிடம் உணவுப் பொருட்களை சென்று வாங்கி வரவும் இயலாது. நான் வேண்டுமானால் ஒரு யோசனை சொல்கிறேன். இன்று காலையில் விதைத்த நெல் மழைநீரில் மிதந்து கொண்டு இருக்கும். அதனைத் தாங்கள் எடுத்து வந்தால் நான் அதனை பதமான சோறாக மாற்றித் தருகிறேன்.” என்றார்.

விதை நெல் என்பது உழவுக்கு மூலாதாரம். அதனை அரித்து எடுத்து விட்டால் நெற்பயிர் எவ்வாறு முளைத்து பலன் கொடுக்கும்? என்பதையெல்லாம் மாறனார் யோசிக்கவில்லை.

மனைவியின் திட்டத்தைக் கேட்டதும் “எங்கே நம்மால் சிவனடியாருக்கு திருவமுது படைக்க முடியாமல் போய் விடுமோ? என்ற அச்சம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. நீயோ சரியான யோசனை சொன்னாய். நீ சொன்னபடியே விதை நெல்லை எடுத்து வருகிறேன்.” என்றபடி கையில் கூடையுடன் கிளம்பிச் சென்றார் மாறனார்.

மழைநீரானது வயலுக்கு செல்லும் வழியெங்கும் சூழ்ந்திருந்தது. பழகிய பாதையானாலும் மாறனார் காலால் தடவியவாறே தடுமாறியபடியே வயலைச் சென்றடைந்தார்.

தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த நெல் விதைகளை அரித்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதற்குள் மாறனாரின் மனைவியார் கொல்லைப்புறத்தில் இருந்த கீரைகளைப் பறித்து சுத்தம் செய்து வைத்திருந்தார்.

அரிசிக்கு நெல் கிடைத்தாயிற்று. ஆனால் உணவு சமைக்க விறகு இல்லை என்று மனைவியார் கூறினார்.

வெளியே மழை விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. எல்லா விறகும் நனைந்து இருக்குமே என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது வீட்டைத் தாங்கி நிற்கும் தாங்கு கட்டைகள் கண்ணில் பட்டது. உடனே அவற்றை உருவித் தந்தார் மாறனார்.

விதை நெல்லை சமைக்க எடுத்து விட்டதால் அடுத்த வருடம் உணவுக்கு என்ன செய்வது என்ற நிலை. இப்போது தாங்கு கட்டையைப் பிடுங்கியதால் வீடும் இடிந்து விழுமோ என்ற நிலை.

மாறனார் அதைப் பற்றி எல்லாம் நினைக்கவில்லை. மழையில் நனைந்து வந்திருக்கும் அடியாருக்குச் சூடாக உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணமே, அவர் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.‌

மனைவியாரும் இன்முகத்தோடு நெல்லை வறுத்து, குத்தி அரிசியாக்கி சோறு சமைத்தார். கீரையைப் பயன்படுத்தி கறியமுது படைத்தார்.

பின்னர் மாறனாரும், மனைவியாரும் சிவனடியாரை திருவமுது உண்ணபதற்காக எழுப்பினர்.

தனது சோதனையில் மாறனார் வெற்றி பெற்றதால் மகிழ்ந்த சிவபெருமான் உமையம்மையுடன் இடப வாகனத்தில், விண்ணில் பேரொளி வெள்ளமாகக் காட்சி அளித்தார்.

அதனைக் கண்டதும் இளையான்குடி மாற நாயனார் மற்றும் மனைவியார் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

“மாறனாரே, வறுமையிலும் செம்மையாய் அடியவர்களுக்கு அமுதூட்டிய அன்பரே, நீர் மீண்டும் செல்வசெழிப்போடு வாழ்ந்து, நீண்டகாலம் அடியவர்களுக்கு திருவமுது படைத்து, இறுதியில் எம்மை வந்து சேர்வீர்களாக.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

மாறனாரும், மனைவியாரும் நெடுங்காலம் மகேசுவர பூசையைத் தொடர்ந்து இறுதியில் சிவபாதத்தை அடைந்து இன்புற்றிருந்தனர்.

இளையான்குடி மாற நாயனார் குருபூசை ஆவணி மகத்தில் கொண்டாடப்படுகிறது.

இவ்வடியாரை இளையான்றன் குடிமாறன் அடியாருக்கும் அடியேன் என்று சுந்தரர் திருத்தொண்டர் தொகையில் புகழ்கிறார்.