இளைய பாரதமே எழுந்திரு!

இளைய பாரதமே எழுந்திரு என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியது.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு; மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு.

ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

நண்பர்களுக்கிடையில் கணவன் மனைவிக்கிடையில் குடும்பச் சூழ்நிலையில், கடை வீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளுமன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளர வேண்டும்.

சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்க வேண்டும். ஜனநாயக வடிவம் போதாது. ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.

எல்லோருக்கும் மதிப்புத் தரவேண்டும்

ஒரு சாதாரண பாத்திரம் கூனி. அவளை அலட்சியப்படுத்தியதால் இராம காதையின் திசையே மாறிவிட்டது.

சிறுவர்களை, சின்னஞ்சிறு மனிதர்களை அலட்சியப்படுத்துகிற மனப்போக்கு கூடாது.

எல்லோருக்கும் மதிப்புத் தரவேண்டும். பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும்.

அரசியல் என்பது ஒரு ஞானம். அது ஒரு அறிவியல். அரசியல் அறிவு மக்களாட்சி முறையில் வாழுகின்ற நாட்டு மக்களுக்குத் தவிர்க்க முடியாத‌து.

அரசியல் அறிவு, அரசியல் போராட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கே சொந்தமானவை அல்ல.

நம்முடைய நாட்டில் அரசியலை, அரசியல் கட்சிகளிடமே ஒப்படைத்து விடுகிறார்கள்.

படித்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் இவர்கள்கூட அரசியலைப் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள். தப்பித் தவறி பேசிவிட்டால் கட்சிக்காரர்களுக்குக் கடுஞ்சினம் ஏற்படுகிறது.

அன்பு கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

அரசியல் சிந்தனை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்கே மக்களாட்சி முறை வளரும். 

 

கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோது மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோது அழுதார்கள்.

அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்குகிறார்களா? இல்லையில்லை.

நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா? அழுகிறார்களா?

நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா?

சாப்பாட்டைத் தியாகம் செய்ய வேண்டாம். ஒரு தேநீரைத் தியாகம் செய்வார்களா?

அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.

மக்களை அரசு காப்பாற்றக்கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகம் என்பது ஒருமுறை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறை. அது உணர்வு செறிந்தது. ஒழுங்கு செறிந்தது. ஒழுக்கம் செறிந்தது.

இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள்!

தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்!

இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக் கூட பெருமை தேடுவார்கள் போலத் தெரிகிறது.

இலட்சியம் பெரிது. இலட்சியம் தூய்மையானது. இலட்சிய வாழ்க்கை உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம்- போகலாம்.

இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேட வேண்டாம். பெருமைகளைத் தேட வேண்டாம்.

இளைய பாரதமே எழுந்திரு

இளைய பாரதமே! எழுந்திரு! புதிய பாரதமே! எழுந்து வா!

உனக்குத் தேவையான கல்வி எது என்று நிர்ணயம் செய்!

தற்சார்பான கல்வியைப் பெறு!

வேலையைத் தேடாதே! வேலையை உருவாக்கு!

கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு!

நோம்பு நோற்று உழைத்து வாழ்க!

புதிய வரலாறு படைத்திடுக!

வரலாற்றுப் போக்கோடு ஓடிவிடலாம் என்று நினைக்காதே!

நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்!

உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரவலாற்றில் பொன்னேடாக அமைய வேண்டும்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

எங்குப் பார்த்தாலும் வன்முறைகள்!

மொழிச் சண்டைகள்!

சாதிச் சண்டைகள்!

மதச் சண்டைகள்!

ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

யாருக்கும் திருப்தியில்லை.

எங்கும் அதிருப்தி!

இதற்கென்ன மாற்று?

இதற்கென்ன வழி?

இதற்கு யார் வழி சொல்ல முடியும்?

வேறுயாறும் சொல்ல முடியாது.

 

இளைய பாரதம் ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் எழுந்தால், எழுந்து நடந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு வெற்றி வாய்ப்புக்களை குவிக்க முடியும்.

புதிய வரலாற்றைப் படைக்க முடியும்.

புதிய பாரதம் பொலிவோடு விளங்கும்.

அதை நினைத்து, எண்ணிப் பார்த்து, முடிவு செய்வதற்காக எங்கே போகின்றோம் என்று சிந்தனை செய்யுங்கள்!

படைப்பாளிகளை உருவாக்குவோம்

எங்கே போக வேண்டும். என்று முடிவு செய்யுங்கள்!

போக வேண்டிய இடத்திற்கு, போகவேண்டிய வழி முறை தொலைவு ஆகியவற்றையும் முடிவு செய்யுங்கள்.

தைரியமாக, துணிவாக, நடைபோடுங்கள்! வெற்றி பெறலாம்.

எங்கே போகின்றோம் என்ற கேள்விக்குப் பதிலாக நாம் எங்கே போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். ஆம்! மனிதனை முதலில் உருவாக்க வேண்டும்.

படிப்பாளிகளை உருவாக்கி இருக்கிறோம்.

ஆனால் படைப்பாளிகளை உருவாக்குகின்ற கல்வி, படைப்பாளிகளை உருவாக்குகின்ற அறிவு, திசைநோக்கி நாம் இனி போகவேண்டும்.

உழைப்பு என்பது உயர்ந்தது. மதிப்பில் உயர்ந்தது. தவமனையது. அந்த உழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது.

ஒரு நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தால் அந்த நாடு வளரும்! வாழும்!

எந்த ஒரு நாட்டிலும் எளிதாக மாற்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது.

எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கின்ற இடத்தில் வளர்ச்சி இருக்கும். இவற்றை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.

இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வேளாண்மையில் சிறந்து விளங்கிய நாடு. ‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பான் பாரதி.

ஆனால் இந்த நாட்டில் கோடிக்கணக்கான கிராமப்புறங்களில் பெண் சிரித்தால், பலருக்கு, ஆண்களுக்குக் கோபம் வரும். பெண் சிரித்துவிட்டாளே என்று கோபப்படுவார்கள்.

ஆனால் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு பெண் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். அதிலும் பரிகாசமாக நம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் யார்? நிலமகளாகிய பூமி தேவி.

‘இலம் என்றசை இருப்பாரைக காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்’ என்றார் திருவள்ளுவர். இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள்.

நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்!

நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி நடக்க வேண்டும்.

நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார்.

இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்கமுடிகிறது. அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால்நடைகள் வளர வேண்டும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.