நெற்களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவுக் களஞ்சியம் என்று கூறுவார்கள். இவை எண்ண முடியாதவை; கணித்துக் கூற முடியாதவை. அளவில், ஆற்றலில், சிறப்பில் அதிகமான அளவில் இருக்கக்கூடியவற்றை நாம் ”களஞ்சியம்” என்று கூறுகிறோம்.
இணையதளங்களில், அனைத்தும் கலந்த மாபெரும் களஞ்சியமாக வெளிப்பட்டு நிற்பது ” ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்” எனும் இணையதளம் ஆகும்.
அனைவருக்குமான, அனைத்துச் செய்திகளும் கிடைக்கும் ஒரே இடம் என இதைக் கூறி விடலாம். அனைத்துத் துறை சார்ந்த தேடல்களின் சங்கமமாக இந்த இணையதளம் விளங்குகிறது.
ஒரு கட்டுரைக்குள் அடக்கமுடியாத செய்திகளை, தன்மைகளைப் பெற்றிருக்கிற ஒரே இணையதளமாக இந்த இணையதளம் விளங்குவதாக கூறலாம்.
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற பொன்மொழியைச் சுமந்திருக்கிற இந்த இணையதளம், உண்மையிலேயே உலகத்தில் வாழ்கின்ற, தமிழ் மேல் நேசம் கொண்டிருக்கிற அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்குகிறது எனக் கூறலாம்.
இந்த இணையதளத்தில்,
முகப்பு
கேள்வி பதில்
தேடல்
உறுப்பினர்கள்
பயனர் தகவல்
புதிய தனிமடல்
என்பவை பெரும் தலைப்புக்களாகக் காணப்படுகின்றன.
உறுப்பினர்கள் அறிமுகம் செய்யும் பகுதி வரவேற்பறை எனும் பகுதியில் காணப்படுகிறது.
இந்த இணையதளத்தில் படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள், கருத்துக்களை வெளியிட விரும்புகிறவர்கள், உறுப்பினர் ஆக ஆவது மிக முக்கியமாகும்.
மிக எளிய வழியில் உறுப்பினராக, அதற்கான வாய்ப்புகளை இந்த இணைய தளம் தருகிறது. உறுப்பினர் ஆகிவிட்டால், பிறகு எந்த ஒரு படைப்பை வெளியிடவோ அல்லது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்பாக அமையும்.
உறுப்பினர்கள் குறித்தும், இங்கு புதிதாக வரும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
அதற்கடுத்துக் கேள்வி பதில் பகுதி, இதில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்குத் தெரிந்த பதில்களைப் பிற உறுப்பினர்கள் தரலாம். பலர் கலந்துரையாடுகிற முறையை இப்பகுதியில் காணலாம். இது ஒரு மாபெரும் இணைப்புப் பாலமாகவும், அறிவுக்குத் தீனி தருகிற பகுதியாகவும் காணப்படுகிறது.
அடுத்து அறிவிப்புகள். இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டிகள், கலந்துரையாடல்கள், நடத்தைகள் போன்றவைகள் இப்பகுதியில் அறிவிக்கப்படுகின்றன.
ஒரு ராஜாங்க அணுகுமுறையைப் போல், இங்கு அனைத்தும் மக்களாகிய வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்கு உரித்தான இடமாக இது காணப்படுகிறது.
மக்கள் அரங்கம் எனும் பகுதியில் திண்ணைப் பேச்சு எனும் பகுதி காணப்படுகிறது. இங்கு, உலக விஷயங்கள், அரட்டை அடிப்பதற்காக இந்தப் பகுதி விளங்குகிறது.
அடுத்ததாக நட்பு எனும் பகுதி காணப்படுகிறது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற இடமாக, வேலைவாய்ப்பைக் கூறுகிற இடமாக, சுற்றுலா மற்றும் அனுபவங்களைக் கூறுகிற இடமாக, பிரார்த்தனை கூடங்களைக் கூறுகிற இடமாக, வாழ்வாதாரப் பகுதியைக் கூறுகிற இடமாக, விவாத மேடையாக இப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த நட்பு என்கிற இப்பகுதி ஒரு சிறப்பு வாய்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது.
சுற்றுப்புறச்சூழல் பகுதி மிகச் சிறப்பான மற்றொரு பகுதியாகும். சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பற்றிய கண்ணோட்டத்தைக் குறித்த கட்டுரைகளை விவாதங்களை இப்பகுதியில் நாம் காணலாம்
விளையாட்டு என்ற பகுதியில் தமிழ் சார்ந்த, கணிதம் சார்ந்த, அறிவு சார்ந்த, பல புதிர் கணக்குகள், விளையாட்டுப் போன்றவைகள் இங்கு அறிவை மையம் வைத்துக்கொண்டு வெளியிடப்படுகின்றன அல்லது விளையாடப்படுகின்றன.
வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் எனும் பகுதியில் பிற வலைப்பூக்களில் அல்லது இணையதளங்களில் காணப்படுகின்ற, மிக மிக முக்கியமான படைப்புகள் அத்தனையும் இங்கு உறுப்பினர்களினால் இந்த இணையதளத்தை விரும்புகிறவர்களுக்குத் தரப்படுகிறது.
எனவே வேறு இணைய தளங்களில் காணப்படுகிற சிறந்த கட்டுரைகளை, நாம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வாசிப்பதற்கு இந்தப் பகுதி நமக்குப் பயன்படுகிறது.
அடுத்து இலக்கியப் பகுதியாகக் கவிதைக் களஞ்சியம் அமைந்திருக்கிறது. இதில் கவிதைகள், சொந்தக் கவிதைகள், இரசித்த கவிதைகள், சங்க இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனும் தலைப்புகளில் அமைந்து, பலதரப்பட்ட, பலவகையான கவிதைகள் அந்தந்தப் பகுதியில் வெளியிடப்படுகின்றன.
உறுப்பினர்கள் வெளியிடுகிற கவிதை என்பதனால், அதைத் திறனாய்வு செய்கிற நிர்வாகிகள் மிகச்சரியாக வழிநடத்தி, இந்தக் கவிதைகளை விமர்சித்துப், பன்முக நிலையிலேயே சென்று விடாமல் ஒருமுகப்படுத்துதல் நிலையை நாம் இங்கு பார்க்கிறோம்.
செய்திக் களஞ்சியம் எனும் பகுதி தினசரி செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், உலகத்தமிழ் நிகழ்வுகள் எனும் துணைத் தலைப்புகளில், உலகளாவிய, மாவட்ட ரீதியாக இருக்கிற அனைத்துச் செய்திகளும் உடனுக்குடன் பல்வேறு உறுப்பினர்களினால் பகிரப்படுகின்றன.
அடுத்துத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எனும் பகுதியில் கணினித் தகவல்கள், தரவிரக்கம், கைத்தொலைபேசி உலகம், மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் என்னும் பகுதிகள் காணப்படுகிறன.
கணினி சார்ந்த, பல விஷயங்கள், செய்திகள் இங்கு அலசி ஆராயப்படுகின்றன. மின்னூல்கள் கிட்டத்தட்ட 3331 நூல்கள் இங்கு காணப்படுகிறன. நகைச்சுவை, சினிமாக் கதைகள், மாணவர் சோலை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.
பெண்கள் பகுதி இதில் மகளிர் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், பெண்களுக்கான படைப்புகளாக இங்கு வெளியிடப்படுகின்றன.
ஆன்மீகம் என்னும் தலைப்பில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜோதிடம் ஆகிய தனித்தனித் தலைப்புகளில் அந்தந்த மதம் சார்ந்த கட்டுரைகள் இங்கு வெளியிடப்படுகின்றன.
மருத்துவக் களஞ்சியம் எனும் பகுதியில் மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இங்கு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இங்கு வெளியிடப்படுகின்றன.
தகவல் களஞ்சியம் பகுதியில் கட்டுரைகள், பொது அறிவு, விஞ்ஞானம், புகழ்பெற்றவர்கள், பண்டைய வரலாறு, தமிழகம் எனும் துணைத் தலைப்புகளில் பல்வேறு விதமான செய்திகள் அலசி ஆராயப்படுகிறன.
பாலியல் பகுதி மன்மத ரகசியம் எனும் தலைப்பில் பல்வேறு குடும்ப உடலியல் சார்ந்த மனம் சார்ந்த பாலியல் செய்திகள் பல நூறு கட்டுரைகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன
ஈகரை இணையதளம், கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 760 நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கிறது. 12,94,774 பதிவுகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதைப்போலத் தமிழ் எழுதி, எழுத்துரு மாற்றி, ஈகரை ஓடை, தேடுபொறி, ஈகரை முகநூல், ஈகரை ட்விட்டர் போன்றவைகளும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளன. தனித்தனி நிலைகளில் இணையதளமாக அவைகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேடுபொறியில் இந்த இணையதளத்தில் பதிவாகி இருக்கிற வார்த்தைகளை ஒரு நொடிக்குள் நாம் தேடி, அந்தக் கட்டுரையையும் படித்துவிடலாம். அந்த வசதியும் இந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ளது சிறப்பாகும்.
அதுபோல உறுப்பினர்களுக்கான விதிமுறைகளும் மிகத்தெளிவாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மீறுபவர்கள் உடனடியாக நிர்வாகிகளின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இது ஒரு கட்டுக்கோப்பான இணைய தளமாக விளங்குகிறது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.
மிகச்சரியான கட்டமைப்போடு இயங்குகிற ஒரு தளத்தை இங்கு நாம் காண்கிறோம். காரணம் தலைமை நடத்துனர், நிர்வாகி, ஆலோசகர், சிறப்புக் கவிஞர், சிறப்புப் பதிவாளர், கல்வியாளர் என இணையதளத்தை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட படைப்பை எத்தனை பேர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் பதிவிடப்படுவதால் தளத்தின் ஒரு பக்க அளவில், தற்போதைய படைப்புகள் எனும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக வருகிற படைப்புகளை இங்கு பட்டியலிட்டு காண்பிக்கின்றனர்.
எனவே புதிதாக வந்திருக்கிற படைப்புகளை, வாசகர்கள் உடனடியாகக் கண்டு அந்தப் பகுதியைப் பகுதியைப்படித்து இலக்கியத்தை நுகர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் இணையதளங்களின் படைப்புக் களஞ்சியமாக விளங்குகிறது இந்த இணையதளம்.அதனைக் காண https://eegarai.darkbb.com/ எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
இக்கட்டுரையில் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் பற்றிய எல்லா விபரங்களும் இரத்தின சுருக்கமாக அடங்கியுள்ளன. ஈகரையை இக்கரைக்கு கொண்டு வந்த அய்யாவுக்கும், இனிதுக்கும் நன்றியும் அன்பும்.