ஈகோ…

மதுரை அனுப்பனடி.

காலை ஒன்பது மணி.

நண்பன் முருகனின் வீட்டு வாசலின் முன், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஹாரன் சப்தம் கொடுத்தான் மீனாட்சி சுந்தரம்.

நண்பன் முருகனின் இருசக்கர வாகனம் பழுதடைந்ததால், அவனை இரு தினங்களாக அலுவலகம் அழைத்து செல்ல வேண்டிய கடமை மீனாட்சி சுந்தரத்திக்கு இருந்தது.

நேற்று காலை முருகனின் வீட்டுக்கு அழைக்கச் சென்றபோது, முருகனுக்கும் அவன் மனைவி வள்ளிக்கும் பெரிய வாக்குவாதம் போய் கொண்டு இருந்தது. பின் வாக்குவாதம் சண்டையில் முடிந்தது.

வீட்டில் அமர்ந்திருந்த மீனாட்சிசுந்தரம் சங்கடத்தில் அங்கிருந்து வெளியில் சென்றான். அதன்பின் வண்டியில் வரும்போதும் அலுவலகத்திலும் முருகன் யாரிடமும் சரியாக பேசவில்லை.

இன்றைக்கு ஹாரன் சப்தம் கொடுத்த்தும் நேற்றைய சண்டை ஞாபகம் வர, தன் வண்டியை சற்று தள்ளி நிறுத்தினான் மீனாட்சி சுந்தரம்.

முருகன் குரல் கேட்டது. திரும்பி பார்த்த மீனாட்சி சுந்தரத்திற்கு அதிர்ச்சி.

முருகனை – வள்ளி சிரித்தபடி வழி அனுப்பி வைத்து கொண்டு இருந்தாள்.

முருகன் சிரித்தபடி தன் வண்டியில் வந்து அமர்ந்த்தை அதிர்ச்சியாக பார்த்தான் மீனாட்சி சுந்தரம்.

“என்னடா! அப்படி அதிர்ச்சியா பார்க்குற? “ என்று முருகன் கேட்டான்.

“இல்லடா! நேத்து ரெண்டு பேரும் பிரிஞ்சு போற மாதிரி சண்ட போட்டிங்க. இப்போ என்னன்னா புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி கொஞ்சி, கொஞ்சி வழி அனுப்பி வைக்கிறா வள்ளி!“ என்று ஆச்சரியாமாக கேட்டான் மீனாட்சி சுந்தரம்.

“அதுவா மீனாட்சி! அது ஒன்னும் இல்ல. கல்யாணம் ஆகி 5 வருஷத்தில் எண்ணிக்கை வைக்க முடியாத அளவு சண்டை போட்ருக்கோம். சின்ன சின்ன விசயங்களுக்கு தேவை இல்லாமல் சண்டை போட்டு, பேசாம இருப்போம். அந்த ஒருநாள் முடியிறதுக்குள்ள எப்படியாவது பேசி சமாதானம் ஆகிருவோம்.” என்ற முருகனின் பேச்சு மீனாட்சி சுந்தரத்திற்கு எரிச்சலை உண்டாக்கியது.

“வள்ளி அவளா வந்து பேசுவாளா? இல்ல நீ போய் பேசுவியா?” என்று எரிச்சலுடன் கேட்டான் மீனாட்சி சுந்தரம்.

“யாராவது ஒருத்தர் பேசிருவோம். ஒருதடவ நான் பேசுவேன், ஒருதடவ அவ பேசுவா. இதுல என்னடா இருக்கு புருஷன் பொண்டடிக்குள்ள ஈகோ தேவை இல்லை. நான் பெருசா, நீ பெருசா அப்டின்னு பார்த்தா ஒன்னும் செய்ய முடியாது. நாலு சுவத்திற்குள் நடக்குற பிரச்சன வெளியில தெரியாம, நாமலே பேசி தீர்த்து போய்ரனும்” என்று முருகன் கூறினான்.

“இருந்தாலும் நாம ஆம்பள சிங்கம்டா. நாம இறங்கி போறது எனக்கு பிடிக்கல!” என்று மீனாட்சி சுந்தரம் கூறினான்.

அதற்கு சிரித்தபடியே, “ஆம்பள சிங்கம் – பொம்பள சிங்கம் என்று ஏன்டா இப்படி பேசியே வாழ்க்கைய வீணாக்குறீங்க. விட்டு கொடுத்து போறதால பிரச்னை முடியும்னா, விட்டு கொடுக்கிறது ஒண்ணும் தப்பே இல்ல” என்று முருகன் கூறினான்.

“சரிவிடு முருகா! பார்த்துக்குவோம், உன் பேச்சை எல்லாம் இப்போ என் மனசுல பதிச்சி வச்சிருக்கேன். நான் கல்யாணம் பண்ணதுக்கு பிறகு அத பயன்படுத்தி பார்ப்பேன். சரிவரலைன்னா அப்புறம் என் வழியில போயிருவேன்!” என்று மீனாட்சி சுந்தரம் கூறியபடி வண்டியை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.

கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து போவதினால் வாழ்க்கை சிறப்பாகும் மற்றும் அழகாகும்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104

Comments

“ஈகோ…” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] ஈகோ… பணம் பத்தும் செய்யும்! […]

  2. […] நான் இருக்கேன்பா… ஈகோ… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.