ஈரல் வறுவல் என்பது ஆட்டு ஈரலைக் கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். இது சத்தானதும், சுவைமிக்கதும் ஆகும்.
இது உண்ண மென்மையாக இருப்பதால், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற சத்துமிக்க உணவுவாக உள்ளது.
ஆட்டு ஈரலில் மண்ணீரல் (சுவரொட்டி) என்றொரு வகை உள்ளது. இதனை ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் உண்பதால் இரத்த உற்பத்தியை உடனடியாக பெறலாம்.
இனி சுவையான ஈரல் வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு ஈரல் – ¼ கிலோ கிராம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (மீடியம் சைஸ்)
மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 6 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கீற்று
செய்முறை
முதலில் ஈரலை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, அலசி உருவிய கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் அலசி துண்டுகளாக்கிய ஈரல் துண்டுகளைச் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து நேராக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பின் தணலை மீடியமாக வைக்கவும். மூடி போட்டு வாணலியை மூடவும்.
அவ்வப்போது கலவையைக் கிளறி விடவும்.
ஈரல் கலவையை கிளறிய பின்பு
ஈரல் நன்கு வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி தணலை உடனே அணைத்து விடவும்.
சுவையான ஈரல் வறுவல் தயார்.
இதனை மட்டன் குழம்பிற்கு சைடிஷ்சாக பயன்படுத்தலாம். ரசம் சாதத்திற்கும் மிகவும் பொருத்தமாக இவ்வறுவல் இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாயை பயன்படுத்தி ஈரல் வறுவல் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மிளகைப் பொடித்து தேங்காய் துருவல் சேர்க்கும் முன்பு வறுவலில் சேர்க்கலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!