உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.
ஒரு காட்டில் வாத்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.
ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து, அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது.
அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.
உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
“நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாகப் பிறந்தேன்? முட்டையிலேயே உடைஞ்சு இறந்து போயிருக்கலாமே!”
என்று வேதனையுடன் பல நாட்கள் அழுது கதறியது.
நாட்கள் ஓடின.
மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின.
இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது.
தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு கொண்டை முடிகள் வேறு வளர்ந்து, அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.
தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையிலே வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் அம்மாவையும், சகோதரர்களையும் நெருங்கும், ஆனால், சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டி விடும்.
மேலும் கொஞ்ச நாட்கள் சென்றன.
அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள், பிரகாசிக்கும் பளிச்சென்ற வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன.
தலையில் நீண்டிருந்த முடிகள், அழகான கொண்டையாக மாறிற்று.
இறக்கைகள் பலமடைந்து நீளமாகவும் மாறி விட்டன.
இப்போது அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு, கண்கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்பவே ஆச்சரியமாகப் போனது.
அதன் அருகில் நெருங்கக் கூட கூச்சமடைந்து, வெட்கப்பட்டன.
நடந்தது என்ன வென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டத்தில் முட்டையிட்டுச் சென்று விட்டது.
இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடை காத்து, குஞ்சும் பொறித்து விட்டது.
அது தான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.
ஒரு நாள் வந்தது.
அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது.
படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது.
கேலி செய்தவர்கள், வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள, அன்னப்பறவை கம்பீரமாய் வானத்தை நோக்கி உயர உயரப் பறந்து, ஒரு புள்ளியாக மறைந்து போனது.
எவர் கண்டார்..
உங்களைத் தூற்றபவர்கள் யாவரும் வாத்துக் கூட்டங்களாகக் கூட இருக்கலாம்.
உங்களது அபாரமான திறமையான சிறகுகள் வளர்ந்து, உங்களது காலம் கனிந்து, அன்னப் பறவையாய்
மாறும் காலத்தை நீங்கள் மிக அருகில் நெருங்கி விட்டீர்கள்,
ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
தையும் பிறந்து விட்டது, நம்பிக்கையோடு களத்தில் இறங்குங்கள்.
உங்களுக்கான நேரம் துவங்கி விட்டது.
அன்னப் பறவை போன்றே இந்த ஆண்டிலிந்து பிரகாசிக்கப் போகிறீர்கள்.
கடந்த காலக் கசப்பான நிகழ்வுகளை மறந்து உதறித் தள்ளிப்,
புது மனிதனாக வலம் வாருங்கள்,
உங்களுக்கான நேரத்தை, இறைவன் கண்டிப்பாக ஒதுக்கிக் கொடுப்பான்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!