உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

பன்னிரெண்டாம் பொதுத்தேர்வை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மே முதல் வாரத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கை முறையின் அமைப்பு கல்வியை வைத்து தீர்மானிக்கப்படுவதால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற முடிவு, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாக அமையும். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வும் தீர்மானிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடிந்ததற்கு பின் மதிப்பெண்கள் அடிப்படையில் நீங்கள் எடுத்த COURSEக்கான சாதக பாதக விஷயங்களை ஓரளவிற்கு நீங்கள் புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

+2 முடிந்த பின் உங்கள் நண்பர்களோடு நீங்கள் இருக்க வேண்டும் என்ற சூழலில் உங்கள் Courseஐ தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு, பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் கோர்ஸை தேர்ந்தெடுப்பது போன்ற பல காரணிகள் உங்களை ஆட்கொள்ளும்.

+2 ரிசல்ட் வருவதற்கு இன்னும் 10 – 15 நாட்கள் இருக்கிறது; பார்த்துக் கொள்ளலாம்! என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை, உங்கள் வாழ்க்கையின் போக்கை வேறு திசை நோக்கி நகர்த்தி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தேர்வு முடிவுகள் தேதி இறுதியான பின் உங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வாரம் செல்வது போல் இருக்கும்.

இந்த சூழலில் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்.

மதிப்பெண்கள் உங்கள் திறமையின் அளவுகோல் அல்ல

மதிப்பெண்களை மட்டுமே வைத்து உங்கள் திறமைகளை எடை போடும் இந்த கலாச்சாரத்தில் இருந்து கொஞ்சம் விடுபடுங்கள்.

மதிப்பெண்கள் என்பது நீங்கள் மனனம் செய்யும் உங்கள் திறமைக்கான வெகுமதியே தவிர, உங்கள் திறமைக்கான வெகுமதி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்தபின், இதுபோன்று தேர்வு முடிவுகளை எதிர்பார்த்த போது உங்கள் மனம் பட்ட பதைபதைப்பு, நீங்கள் எதிர்பார்த்தது, அங்கு நடந்தது, தற்போது நடந்து கொண்டிருப்பது என அனைத்தையும் யோசித்துப் பாருங்கள்..

ச்சே..இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று உங்கள் நிலைமைகளை நீங்களே வெதும்பிக் கொள்வீர்கள்.

இது போன்று தான். ஓரிரு வருடங்கள் கழித்து பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நிலையும் இருக்கும்.

நீங்கள் விடைத்தாள்களில் எழுதி இருக்கும் விடைகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வரும். இனிமேல் அதை கூட்டவோ குறைக்கவோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா.

எந்த மதிப்பெண்கள் வந்தாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்!

இது உங்கள் வாழ்வையின் முடிவல்ல; இதுவே ஆரம்பம் என்று மன தைரியத்தோடு பழகிக் கொள்ளுங்கள்!

கல்லூரி படிப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்

பொதுவாகவே +2 முடித்ததற்கு பின் நான் இந்த COURSE தான் படிக்க போகிறேன் என்ற ஒரு மனோபாவம் எல்லோரிடமும் இருக்கும். அதற்கான காரணம் நமக்கு தெரியாது.

ஆனால் அதற்கு முன் +2வில் நீங்கள் படித்த நான்கு பாடங்களின் அடிப்படையில் என்னென்ன COURSE கள் எடுக்க முடியும் என்ற புரிதலை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் +2 வில் ARTS GROUP தேர்ந்தெடுத்தால் HISTORY, ECONOMICS, COMMERCE, ACCOUNTANCY படித்திருப்பீர்கள்.

SCIENCE GROUP படித்திருந்தால் MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, COMPUTER SCIENCE படித்து இருப்பீர்கள்.

+2 வில் நீங்கள் படித்த இந்த 4 படிப்புகளில் B.COM, BA ECONOMICS, BA HISTORY BA ENGLISH, B.Sc MATHS, B.SC PHYSICS B.Sc CHEMISTRY, B.Sc ZOOLOGY, B.Sc COMPUTER SCIENCE, NEET தேர்வு எழுதி எடுக்கப்படும் மருத்துவ படிப்புகள், NEET தேர்வு எழுதாமல் படிக்கும் PARA MEDICAL COUSES, ENGINEERING ARCHITECTURE போன்ற கோர்ஸ்களில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை Google ல் தேடி தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்தந்த கல்லூரிகளில் நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான COURSEகள் குறித்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலோசனை – முடிவு

நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் எதிர்காலம் குறித்து அக்கறைப்படுகின்ற என் போன்ற ஆயிரம் ஆயிரம் நபர்கள் பேசுவது அனைத்தும் ஆலோசனை மட்டும்தான்.

இதுபோன்று எல்லா கருத்துக்களையும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வழிகாட்டுதல்தான் இவைகள்.

ஆனால் இக்கட்டுரைகளில் படிக்கும் உங்கள் ஒவ்வொருவரின் குடும்ப பின்புலம், உங்கள் கனவு, எதிர்கால திட்டம் ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும்.

எனவே அனைத்து கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் மட்டுமே உண்டு.

உங்கள் எதிர்காலத்தை உங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நம்புங்கள்!

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர்
பொருளாதாரத் துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408