நெய் நம்முடைய பண்பாட்டில், பயன்பாட்டில் ஒன்றிப் போன முக்கியமான பொருளாகும். இதனை மற்ற பொருள்களுடன் சேர்க்கும்போது அப்பொருள்கள் கெட்டுப் போவதில்லை.
மேலும் இதனை மருந்துப் பொருட்களுடன் சேர்க்கும்போது அவை எளிதில் ஊடுருவிச் சென்று மருந்தின் பயனை முழுமையடையச் செய்வதால் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நெய்யானது தனிப்பட்ட மணத்தினையும், சுவையினையும் உடையது. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணவாகக் கொடுக்க ஏற்றது.
வெண்ணெயை உருக்கி நெய்யானது தயார் செய்யப்படுகிறது. நெய்யானது உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், வழிபாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நெய்யானது வெண்மை முதல் அடர் மஞ்சள் வரை உள்ள நிறங்களில் காணப்படுகிறது.
மற்ற பால் பொருட்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நெய்யானது விரைவில் கெட்டுப்போவதில்லை.
இது அதிகளவு கொழுப்பினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் நெய்யானது ஆரோக்கியமான மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பாலில் தயார் செய்யப்பட்ட வெண்ணெயிலிருந்து பெறப்பட்டதாகும்.
நெய்யின் வரலாறு
நெய்யானது இந்தியாவிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது.
இன்றைக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகம் எங்கும் நெய்யானது பழக்கத்தில் உள்ளது.
பாலிலிருந்து பெறப்படும் வெண்ணெயானது எளிதில் கெட்டுவிடும் தன்மை உடையது. ஆனால் வெண்ணெயை உருக்கிப் பெறப்படும் நெய்யானது எளிதில் கெடாது. எனவே இதனை எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
இந்தியாவில் பெரும்பாலும் பசுவின் பாலிலிருந்து தயார் செய்யப்படும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. எகிப்தில் முதன்முதலில் நீர்எருமையின் பாலிலிருந்து நெய் தயார் செய்யப்பட்டது.
நெய்யினை தயார் செய்யும் முறை
நம் வீட்டில் பாலினைக் காய்ச்சி ஆற வைத்து அதில் ஏற்கனவே உள்ள தயிரினையோ, மோரினையோ ஊற்றி உறையிடுவார்கள். கிட்டத்தட்ட 8-12 மணி நேரத்தில் தயிரானது தயாராகிவிடும்.
பின் அதனை மத்தினால் கடையும்போது பாலில் உள்ள திடப்பொருட்கள் திரண்டு மேலே வரும். அதனை தனியே பிரித்து எடுத்து சிறிதளவு நீரில் மிதக்க விடுவர்.சிறிது நேரத்தில் வெண்ணெயைப் பிரித்து எடுத்து தனியே சேகரித்து வைப்பர்.
இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சேகரிக்கப்படும் வெண்ணெயை சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது வெண்ணெயில் உள்ள நீரானது ஆவியாகி கொழுப்பு அமிலங்கள் மட்டும் தனியே பிரிந்து நிற்கும். இதனையே நாம் நெய் என்கிறோம்.
இந்நெய்யினை ஆறவைக்கும் போது கெட்டிப்பட்டுவிடும். இதனைத் தொடும்போது சற்று நெருநெருப்பை உணரலாம். இவ்வகையில் தயார் செய்யப்படும் நெய்யானது தனிப்பட்ட மணம், சுவையினைக் கொண்டிருக்கிறது.
வெண்ணையை உருக்கும்போது அதனுடன் முருங்கை இலை அல்லது கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. பால் பொருட்களில் அதிக சுவையையும் மணத்தினையும் உடையது நெய்யாகும்.
நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நெய்யானது அதிகளவு கொழுப்புச் சத்தினைக் கொண்டுள்ளது. இதில் விட்டமின் ஏ,இ,கே போன்ற கொழுப்பில் கரையும் விட்டமின்கள் காணப்படுகின்றன.
லினோயிக் அமிலம், பியூட்ரிக் அமிலம், ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தையும் இது கொண்டுள்ளது.
நெய்யின் மருத்துவப் பண்புகள்
நெய் என்றாலே இன்றைக்கு பலரும் பயந்து பின்வாங்கும் நிலையில் இருக்கின்றனர். ஆனால் சுத்தமான நெய்யானது மனிதனின் உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது.
உடனடி ஆற்றலினைப் பெற
நெய்யானது அதிகளவு நடுத்தர சங்கிலி அமைப்பினைக் கொண்ட கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இந்த அமிலங்கள் கல்லீரலால் நேராடியாக சக்தியாக மாற்றப்படுகின்றன.
இவை அடிப்போஸ் திசுக்களில் சேகரித்து வைக்கப்படுவதில்லை. இதனால் உடல் எடையும் கூடுவதில்லை. விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட உடனடி ஆற்றலை வேண்டுபவர்கள் தேவையான நேரங்களில் நெய்யினை உண்டு ஆற்றலினைப் பெறலாம்.
இதய நலத்திற்கு
நெய்யானது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒமேகா-3 அமிலத்தைக் கொண்டுள்ளது. ஒமேகா-3 அமிலமானது நல்ல கொழுப்பினைச் சார்ந்தது. எனவே நல்ல கொழுப்பினைக் கொண்டுள்ள கலப்படமில்லாத நெய்யினை அளவோடு உண்டு இதய நலத்தினைப் பேணலாம்.
அழற்சி எதிர்ப்பினைப் பெற
நெய்யானது குறுகிய சங்கிலி அமைப்பினைக் கொண்ட ப்யூட்ரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. ப்யூட்ரிக் அமிலமானது அழற்சி எதிர்ப்பு பண்பினை உடலுக்கு குறிப்பாக இரைப்பை, குடல் உள்ளிட்டவைகளுக்கு வழங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆதலால் பெருங்குடலில் புண்ணால் அவதிப்படுபவர்கள் நெய்யினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தற்போது பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களாகவே நெய்யானது அழற்சி எதிர்ப்புப் பொருளாக நம் நாட்டு மருத்துவமான சித்தம் மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு பண்பினைப் பெற
நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலமானது உடலில் டி செல்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த டி செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு பண்பினை அதிகரிக்கச் செய்கின்றன.
மேலும் இதில் உள்ள கொழுப்பில் கரையும் விட்டமின்களான ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நாம் உண்ணும் ஏனைய உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி நம் உடலின் நோய் எதிர்ப்பு பண்பினை அதிகரிக்கின்றன.
கண்களின் பாதுகாப்பிற்கு
நெய்யில் விட்டமின் ஏ-வானது அதிகளவு உள்ளது. இது கண்களின் பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாகும். மேலும் நெய்யில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் கண்களில் நோயினை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடை செய்கின்றன. இதனால் கண்அழற்சி நோய், கண்புரை நோய் ஆகியவற்றிலிருந்து கண்களை நெய்யானது பாதுகாக்கிறது.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு
நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலமானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு ஆரோக்கியமான செரிமானத்திற்கும் வழிவகை செய்கிறது.
நெய்யானது செரிமானத்திற்குத் தேவையான பொருட்களை எளிதில் சுரக்கச் செய்வது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. ஏனைய எண்ணெய் பொருட்களைப் போல் நெய்யானது செரிமானத்தை தாமதப்படுத்துவதில்லை. எனவே நெய்யினை அளவோடு உண்டு ஆரோக்கியமான செரிமானத்தைப் பெறலாம்.
அதிக வெப்பநிலையில் உருகுதிறன்
நெய்யானது அதிக வெப்பநிலையில் உருகுதிறனைப் பெற்றுள்ளது. எனவே இதனை சமையலில் பயன்படுத்தும்போது ஏனைய கொழுப்புப் பொருட்களைப் போல் எளிதில் சிதைவடைந்து ப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதில்லை.
எனவே உணவுப்பொருட்ளில் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. நெய்யானது 500 டிகிரி பாரன்கீட் உருகுநிலையைக் கொண்டுள்ளது.
சருமத்தினைப் பொலிவு பெறச் செய்ய
நெய்யானது சிறந்த மாஸ்டரைஸராகச் செயல்படுகிறது. பனிகாலங்களில் சிறிதளவு நெய்யினை சருமத்தில் தடவி பளபளப்பான, வழவழப்பான சருமத்தைப் பெறலாம்.
உதடுகளில் நெய்யினைப் பூசும்போது உதடுகளில் வெடிப்புகள் மறைவதோடு பளபளக்கவும் செய்கின்றன.
கண்களைச் சுற்றிலும் இருக்கும் கருவளையங்களில் தூங்கச் செல்லும் முன்பு நெய்யினை பூசிவர கருவளையங்கள் மறையும்.
மூளையின் புத்துணர்ச்சிக்கு
நெய்யினை உண்ணும்போது அது உள்ளத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. நெய்யானது மூளை மற்றும் நரம்புகளில் நேர்மறையான உணர்வுகளை உண்டாக்குகிறது.
நெய்யானது தன்னுடைய சுவையால் மட்டுமல்லாது அதில் உள்ள நுண்ஊட்டச்சத்துகளாலும் மூளைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
நெய்யினைப் பற்றிய எச்சரிக்கை
நெய்யானது அதிகளவு கொழுப்பினைக் கொண்டுள்ளதால் இதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதோடு பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
நெய்யானது அப்படியேவோ, உணவுப் பொருட்களில் சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய வளமான நெய்யினை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!