மனித‌ உடலில் உள்ள உலோகங்கள்

மனித உடலில், சுமார் தொன்னூற்று ஒன்பது சதவிகித நிறையானது, ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆறு தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளது.

சுமார் 0.85 சதவிகித நிறையானது, பொட்டசியம், கந்தகம், சோடியம், குளோரின், மெக்னீசியம் முதலிய தனிமங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.

மிகமிக குறைந்த அளவே, வேறு பலவகையான தனிமங்கள் நமது உடலில் உள்ளன.

மிககுறைந்த அளவாயினும், அவற்றின் பங்கு அளப்பறியது. இம்மிக்குறைந்த அளவு தனிமங்களில் உலோக அயனிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றை பற்றிய தகவல்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

மனித உடலில் இருக்கும் உலோக அயனிகளை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 

கால்சியம்

உறுதியான கால்சியம்

கால்சியம் தனிமமானது, பற்கள் மற்றும் எலும்புகளில் கால்சியம் ஹைட்ராக்ஸி அபடைட் எனும் சேர்மமாக இருக்கிறது. எலும்புகள் நமக்கு உடல் அமைப்பையும், பற்கள், உண்ணும் உணவினை அரைப்பதற்கும் பயன்படுகிறது.

நரம்பு செல்களின் வளர்ச்சியிலும், கால்சியம் அயனிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

 

மெக்னீசியம்

எலும்பு

உடலில் நிகழும் பல்வேறு வேதிவினைகளை, மெக்னீசியம் அயனிகள் கட்டுபடுத்துகின்றன. உடல் செல்களின் ஆற்றல் மூலமான அடினோசின் ட்ரை பாஸ்பேட் உற்பத்தி மற்றும் பயன்பட்டிலும் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலும்பு மற்றும் உடல் கட்டமைப்பிலும் மெக்னீசியம் அயனிகள் முக்கியமானவையாக இருக்கின்றன.

 

சோடியம்

சோடியம் உப்பு

இரத்தம் மற்றும் செல் திரவங்களில் சோடியம் அயனிகள் இருக்கின்றன. இவைகள், உடலின் pH (அமில தன்மை) மதிப்பையும், அழுத்த சமநிலையினையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

 

பொட்டாசியம்

பொட்டாசியம்

சோடியம் அயனிகளை போன்றே, பொட்டாசியம் அயனிகளும், செல் திரவங்களிலும், இரத்தத்திலும் இருக்கிறது. அமில தன்மை மற்றும் அயனி அழுத்தத்தையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

 

இரும்பு

இரும்புச் சத்து

அத்தியாவசியமான உலோகங்களில் இரும்பு அயனிகளும் ஒன்று. இரத்த சிவப்பு நிறமியான ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் முதலிய மூலக்கூறுகளில் இருக்கும் இரும்பு அயனிகள், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு காரணமாக திகழ்கின்றன.

சைட்டோகுரோம் பி-450 வகை நொதிகளில் முக்கிய பகுதி பொருளாக இரும்பு அயனிகள் இருக்கின்றன.

 

காப்பர் (செம்பு)

செம்புச் சத்து

காப்பர் அயனிகள், புரதங்களிலும், நொதிகளிலும் இணைந்து இருக்கின்றன. உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களிலும், உடல் உறுப்புகளின் முறையான செயல்பாட்டிற்கும் காப்பர் அவசியமான தனிமமாகும்.

தவிர இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி, கொழுப்பு மற்றும் சர்க்கரை வளர்ச்சிதை மாற்றம், புரத உற்பத்தி உள்ளிட்ட முக்கிய உடற்செயலியல் வினைகளில் காப்பர் பங்கு கொள்கிறது.

மேலும், நோய் எதிர்ப்பு திறனை அளிப்பதிலும், காயப்பட்ட திசுக்கள் சீரமைக்கப்படுவதிலும், காப்பர் அயனிகளின் பங்கு முக்கியமானது.

 

மாங்கனீசு

மாங்கனீசு

சில நொதிகளில் மாங்கனீசு அயனிகள் இருக்கின்றன. குறிப்பாக, சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் எனும் நொதியில் மாங்கனீசு இருக்கிறது.

கார்போஹைட்ரேட்டு, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்திலும் மாங்கனீசை கொண்ட நொதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

ஜிங்க் (துத்தநாகம்)

பலவித செயல்பாடுகள்
பலவித செயல்பாடுகள்

உடலில் இருக்கும் முக்கிய ஹார்மோன்களில் ஜிங்க் உள்ளது. டிஹைட்ரோஜெனேஸ், லாக்டிக் டிஹைட்ரோஜெனெஸ், கார்பானிக் அன்ஹைட்ரேஸ், டி.என்.ஏ பாலிமரேஸ், சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் உள்ளிட்ட முக்கிய நொதிகளிலும் ஜிங்க் அயனிகள் இருக்கின்றன.

பல்வேறு உடற்செயல்களை நிகழ்துவதற்கும் ஜிங்க் அயனிகளை கொண்ட நொதிகள் தேவைப்படுகிறது.

 

கோபால்ட்

கோபால்ட்

வைட்டமின் B12அல்லது கோபாலமைன் எனும் நீரில் கரையக்கூடிய வைட்டமினில் கோபால்ட் அயனி இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கட்டுபடுத்துவதில் வைட்டமின் B12-ன் பங்கு முக்கியமானது. செல்லின் வளர்ச்சிதை மாற்றம், கொழுப்பு மற்றும் அமினோ அமில வளர்ச்சிதை மாற்றத்திலும் வைட்டமின் B12 பங்கேற்கிறது.

 

மாலிப்டினம்

 

மாலிப்டினம்

சாந்தீன் ஆக்சிடேஸ் நொதியில் மாலிப்டினம் அயனி இருக்கிறது. உடலில் யூரிக் அமில உற்பத்தியில் சாந்தீன் ஆக்சிடேஸ் நொதி வினையூக்கியாக செயல்படுகிறது.
மனித‌ உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்து கொண்டோம்.

உடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. எனவே, இவற்றின் அளவு சமநிலையில் இருத்தல் மிக அவசியம்.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.