ஒருவரைப் பற்றி அவருடன் பேசாமலே அவரின் கண், கை அசைவுகள், முகபாவனைகள் ஆகியவற்றின் மூலம் அவர் கருத்தை அறிந்து கொள்வதை உடல் மொழி என்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் எல்லா விலங்குகள் மற்றும் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுகிறது.
உடல் மொழி மூலம் ஒருவருடைய குணநலன்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறைந்த கால அளவில் கண்டறியலாம்.
உடல் மொழியை வெளிப்படுத்துவதற்கு எந்த வித திறமையும் தனியாக தேவைப்படுவதில்லை. ஏனெனில் நாம் குழந்தைகளாக இருந்தது முதல் அதனை வெளிப்படுத்த தொடங்குகிறோம். தாய் தனது குழந்தையின் உடல் மொழி மூலமே குழந்தையைப் பற்றி நன்கு அறிந்து கொள்கிறாள்.
அளவுக்கு அதிகமாக பேசுபவர், குறைந்த அளவு பேசுபவர், வம்பளப்பவர் ஆகியோரை உடல் மொழி மூலம் சமாளிக்கலாம்.
உடல் மொழியை கொண்டு எதிராளியின் மனதில் நினைப்பவற்றைத் துல்லியமாக கணக்கிடலாம். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிடாமல் இருக்கவும், அடுத்தவரைப் பற்றி தவறாக எடை போடாமல் இருக்கவும் உடல் மொழி பயன்படுகிறது.
பெரும்பாலும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் உடலசைவின் மூலம்தான் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால் உடல் மொழியின் மூலம் ஒருவரின் மனநிலையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி, கவலை, சிந்தனை, சலிப்பு ஆகியவற்றை கூறலாம். சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என எல்லா வேறுபாடுகளையும் கடந்து எல்லோரும் உடல் மொழியை வெளிப்படுத்துகின்றனர். எனவே இதனை உலகப் பொது மொழி என்றும் கூறலாம்.
ஒருவர் தனது எண்ணங்களை சராசரியாக 60% உடல் மொழி மூலமும் 40% வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர். உடல்மொழி பற்றி ஆண்களை விட பெண்களே நன்கு அறிந்தவர்கள். ஏனெனில் சிசுவின் அசைவிற்கு காரணமும், அதற்கான தீர்வையும் கண்டுபிடித்து பழகியவர்கள் பெண்களே ஆவர்.
ஆனால் உலகில் 90% ஆண்களும், 50% பெண்களும் தாங்கள் வெளிப்படுத்தும் உடல் மொழி பற்றி சரிவர தெரிந்து வைத்திருப்பதில்லை என்கின்ற செய்தி ஆச்சரியப்படும் ஒரு விசயம் ஆகும்.
உடல் மொழியை புரிந்து கொள்ளுதல்
உடல்மொழியைப் புரிந்து கொள்ளும் நுட்பம் நம்மிடம் பேசாத மனிதரையும் ஒரு புத்தகம் போல படித்துவிடும் அளவுக்கு பயன்படும். வாயால் பேசக்கூடிய மொழியை மௌன விரதத்தால் கட்டுப்படுத்தலாம். ஆனால் உடல் மொழிக்கு மௌன விரதம் என்று எதுவும் கிடையாது.
உடல் மொழியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தலாமே ஒழிய அதனை அடக்கமுடியாது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நமது எண்ணங்களை அது வெளிப்படுத்திவிடும். அசந்து தூங்கும்போது கூட நம்மை அறியாமல் நமது உள் மனதின் எண்ணங்களை உடல் மொழியானது வெளிப்படுத்திவிடுகிறது.
உடல் மொழி என்பது அடிப்படையில் மிக இயல்பான விசயம். இதில் பாசாங்கு செய்வதோ, அல்லது தயார் செய்து கொண்டு செயல்படுவதோ ஓரளவிற்குத்தான் பலன் தரும். அதாவது நமது நோக்கத்தில் உண்மை, நேர்மை இருந்தால் அது உடல் வழியே சரியானபடி வெளிப்படும். ஒரு வேளை அப்படி வெளிப்படாவிட்டால் அதைக் கற்றுக் கொள்ளலாம்.
மற்றபடி உடம்பை ஏமாற்றி வேறு விதமாக செயல்படச் செய்வது அத்தனை சுலபம் இல்லை. உடல் மொழியை முகபாவனை மற்றும் உடல் பாவனைகள் என இரு வகைகளாக பிரிக்கலாம்.
முகபாவனை
ஒவ்வொரு தனிமனிதனின் மனநிலைக்கு (மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், கோபம்) தக்கவாறு முகத்தின் பாகங்களான கண்கள், புருவங்கள், கன்னங்கள், உதடுகள், மூக்கு ஆகியவற்றின் மூலம் தனித்தனியே உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனையே முகபாவனை என்கிறோம்.
முக பாவனையே உடல் மொழியில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஒருவரின் உணர்ச்சிகள் முகபாவனை கொண்டே பெரும்பாலும் அறியப்படுகிறது.
உடல் பாவனைகள்
முகத்தின் பாகங்களைத் தவிர்த்து ஏனைய உடலின் உறுப்புக்களான கை, கால், விரல்கள் மூலம் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் வெளிப்படுத்துதலை உடல் பாவனைகள் என்கிறோம். எடுத்துக்காட்டாக கையசைவு, தொடுதல், சுட்டுதல், கூன் விழுந்த உடல் நிலை ஆகியவற்றைக் கூறலாம்.
உடல் மொழி அம்சங்கள்
முடி
ஆண்கள், பெண்கள், மிருகங்கள் என எல்லோருக்கும் தலைமுடியின் அழகு முக்கியம். இதன் மூலமே நாம் எதிராளியின் மனதில் சட்டென்று இடம் பிடிக்க விரும்புகிறோம். தலைமுடியை சரியாகப் பராமரிப்பதன் மூலம் அழகு, கண்ணியம், கம்பீரம், உள்ளிட்ட பல அர்த்தங்களை உடல் மொழியால் வெளிப்படுத்த முடியும். அதனால் தான் பெரும்பாலான வயசு பையன்கள், பெண்கள் கையில் சீப்பு இருக்கிறது.
தலை
தலை, கை, ஆகிய உடல் பாகங்களின் மூலம் விருப்பம் மற்றும் மறுப்பு ஆகிய இரண்டையும் அழுத்தமாக வெளிப்படுத்தலாம். தலையை மேலும் கீழும் அசைப்பதன் மூலம் விருப்பமும் இடவலமாக அசைப்பதன் மூலம் மறுப்பையும் வெளிப்படுத்தப்படுகிறது.
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது லேசாக தலையைச் சாய்த்தால் அதில் அவருக்கு ஆர்வம் உள்ளது என்று அறியலாம். எதிர்பார்த்திருக்காத நிகழ்ச்சி ஏதேனும் நடக்கும் போது தலையில் கை வைத்துக் கொள்வதும் உடல் மொழிக்கான வெளிப்பாட்டில் ஒன்றே.
கண்
பொதுவாக நாம் யாரிடம் பேசினாலும் கண்களைப் பார்த்து பேசுவது நல்லது. ஐந்து நிமிடம் பேசினால் மூன்று நிமிடமாவது எதிராளியின் கண்களைப் பார்த்து பேசவேண்டும். நேருக்கு நேர் கண்களைப் பார்த்து பேசுவதால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே சுமூகமான நட்பு உருவாகும்; மன நெருக்கம் ஏற்படும். தனிப்பட்ட உறவுகளில், நட்புகளில் தொடங்கி பிஸினஸ் உறவுகள் வரை எல்லாவற்றுக்கும் இந்த மன நெருக்கம் அவசியமானது.
புருவங்கள்
ஒரே நேரத்தில் இரண்டு புருவங்களும் உயர்ந்தால் அதனை ஆச்சரியம், நிச்சயமின்மை, நம்பிக்கையின்மை ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் உடல் மொழியாகும்.
கண்ணிமைகள்
கண்ணிமைகள் படபடத்தால் ஆச்சரியம். இது மேலும் அதிகரித்தால் பதற்றம். கண்ணிமைகள் சுருங்கினால் அது பயத்தின் வெளிப்பாடகவோ அல்லது எதிராளி சொல்கிற விசயத்தில் அவருக்கு சம்மதம் இல்லை என்றோ அறியலாம்.
மீசை
இதனை ஆண்களுக்கான விசிட்டிங் கார்ட் என்றே கூறலாம். ஹிட்லரின் சதுர மீசை தொடங்கி இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் ஹ்யூமர் மீசை வரை பல பிரபலங்கள் அவர்களின் மீசையைக் கொண்டே அடையாளம் காணப்படுகின்றனர்.
வாய்
ஆச்சரியம், சந்தோசம், புதிர்தன்மை, நிச்சயமின்மை ஆகிய நிகழ்வுகளின் போது வாய் பிளத்தல் என்ற உடல் மொழியானது வெளிப்படுத்தப்படுகிறது. வெறுமை, சோகம், நிச்சயமின்மை, குழப்பம் போன்றவற்றின் போது உதடுகளை நாம் பிதுக்குகின்றோம். ஏமாற்றம், சோகம், நிச்சயமின்மை ஆகியவற்றின் போது உதடுகளை நாம் உள்ளிழுத்துக் கொள்கிறோம்.
அரை மாதக் குழந்தைகளில் தொடங்கி பல் போன தாத்தாக்கள் வரை எல்லோருக்கும் பொதுவான உடல் மொழி சிரிப்பு. சிரிப்பு என்றாலே சந்தோஷம் என்றே பொதுவாக அறியப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கிண்டல், கேலி, கோபம், விரக்தி, வருத்தம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் சிரிப்பு என்ற உடல் மொழியானது பயன்படுத்தப்படுகிறது.
பற்கள்
கோபத்தின் உடல்மொழி வெளிப்பாடே பற்களை நறநறப்பது. இந்த பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே மனிதனிடமிருந்து வருகிறது. அடுத்தவர் மீது பாய்ந்து பிடுங்க வேண்டும் என்ற ஆவேசம் பற்களை கடிப்பதன் மூலம் குறைகிறது.
நாக்கு
நாக்கை வெளிக்காட்டுவது என்பது ஒரு விசயத்தின் விருப்பமின்மை, சம்மதமின்மை, அருவருப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கோபம், மிரட்டல் போன்றவற்றின் போதும் நாம் நாக்கை பற்களால் அழுந்தக் கடிக்கிறோம். ஒப்புக்கொண்ட ஏதேனும் விசயத்தை செய்ய மறந்தவர்களும் நுனி நாக்கை லேசாகக் கடிப்பதுண்டு.
முகம்
நாம் அதிகமாக உணர்ச்சி வயப்படும்போது நம்முடைய முகத்துக்கு கீழே உள்ள நாளங்களில் ரத்தம் அதிகமாகப் பாய்கிறது. இதனால் முகம் சிவக்கிறது. உடல் ரீதியான அல்லது மன ரீதியான வலியை அனுபவிக்கும்போது நம்முடைய முகம் சுருங்குகிறது. இது நெடு நேரத்துக்கு நீடிப்பதில்லை. யாரும் கவனித்து விடாதபடி சட்டென்று மறைத்து விட முடியும்.
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது எதிராளிக்கு ஆர்வமின்மையால் கொட்டாவி வருகிறது. தனி மனித உறவுகளை முறித்துப் போடக் கூடிய வல்லமை கொட்டாவிக்கு உண்டு.
கழுத்து
ஆபத்து, பதற்றம், நெருக்கடியான நேரம் போன்றவைகளின் போது எச்சில் விழுங்குதல் என்ற உடல்மொழிக் கூறு வெளிப்படுகின்றது. எச்சில் விழுங்குதல் என்பது மன அழுத்தத்தில் சிக்கியிருப்பதைக் குறிப்பிடுகிறது. அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யப்படும் உடல் மொழிக் கூறு தொண்டை செருமல் ஆகும்.
தோள்கள்
தோள்கள் என்பவை வெளிப்படையான பார்வையில் படுபவைகளாக இருப்பதால் உடல் மொழியில் நிறைய விஷயங்களை சொல்வதற்கு பயன்படுத்துகிறோம். பேச்சின் நடுவே தோள்களைக் குலுக்குகிறவர் ஏதோ குழப்பத்தில் சிக்கிவிட்டார் என்றே அர்த்தம் கொள்ளலாம். அடுத்து என்ன என்று தெரியாத நிச்சயமின்மையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
எனவே முக்கியமான விசயங்கள் பேசுகையில் தோள் குலுக்குகிற எண்ணத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த உடல்மொழியானது நமது பேச்சின் உறுதி தன்மையைக் குறைத்துவிடும்.
கைகள்
நாம் மறைக்க விரும்புகின்ற மனக் கருத்துக்களைக் கூட பளிச்சென்று வெளிச்சம் போட்டு காட்டிவிடும் உடல் மொழியின் வெளிப்பாடு கைகள் ஆகும். எதிராளியின் பார்வையில் படும்படி நன்கு விரித்து காண்பிப்பது நேர்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதிகாரத் தோரணையை காண்பிப்பதற்காக ஒரு சிலர் கைகளை பின்புறம் கட்டிக் கொள்வதும் உண்டு. ஆதிக்கம் செலுத்தும்போது கைகள் உயர்ந்தும், பணிந்து போகும் போது கைகள் தாழ்ந்தும் இருக்கின்றன. நம்முடைய கைகள் மூளை நரம்பு மண்டலத்தோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே மனதின் எண்ணத்திற்கு ஏற்ப கைகள் உடல் மொழியை உடனே வெளிப்படுத்தி விடுகின்றன.
குமிழ்மய உலகம்
நாம் ஒவ்வொருவருக்கும் நம்மைச் சுற்றிலும் ஒரு குமிழ் வடிவ உலகத்தை உருவாக்கியுள்ளோம். அதனுள் மற்றவர்கள் பிரவேசிப்பதை நாம் விரும்புவதில்லை. இந்த குமிழ்களுக்கு இடையே உள்ள இடைவெளி எதிராளியின் உறவு நிலையைப் பொறுத்து வேறுபடுகிறது.
நண்பர்கள், தம்பதியர், உறவினர்கள் என்று வரும்போது இடைவெளி குறைவாகவும், வேலையாட்கள், அந்நியர்கள் என்று வரும்போது இடைவெளி அதிகமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
எனவே தான் பொது இடங்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் போது மிகச் சங்கடமாக உணர்கிறோம். இதற்கு காரணம் நமது குமிழ் உலகத்திற்குள் நுழைய முயன்ற அத்து மீறல் உணர்வு தான்.
ஒருவர் நம்மை நோக்கி கையை (விரலை) நீட்டி பேசினால் நமக்கு கோபம் வருகிறது. ஏனெனில் நமது குமிழ் உலகத்தை குத்துகின்ற உணர்வை நாம் பெறுகிறோம். நமக்கு இணையாக அல்லது மேலாக உள்ளவர்களிடம் விரல் நீட்டிப் பேசாமல் இருப்பது நல்லது. அலுவலக உறவுகளில் இந்த விதியை வேதம் போல பின்பற்றினால் நல்லது.
கைகுலுக்கல்
கைகுலுக்கலில் ஆதிக்கம், பணிவு, சமநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். கைகுலுக்கலில் மேலே உள்ள கைக்குரிய நபர் ஆதிக்கம் செலுத்துபவராகவும், கீழே உள்ள கைக்குரிய நபர் பணிந்து செல்பவராகவும் கருதப்படுகிறார்.
கை குலுக்கும் இரு நபர்களின் கைகளும் சமநிலையாக இருக்கும் பட்சத்தில் இருவரும் இணையாகப் பழக விரும்புகிறார்கள் என்ற அர்த்தம் வெளிப்படுகிறது.
எதிராளியை ஒரு கையால் கையை குலுக்கியபடி இன்னொரு கையால் அவரது தோளைத் தொடுவது அவருக்கு நம்பிக்கை மற்றும் தெம்பு தருவதற்காக வெளிப்படும் உடல் மொழியாகும்.
கால்கள்
கால்களைப் பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்த பொதுவான உடல் மொழி கால் மேல் கால்போட்டு அமர்வது. இதற்கான அர்த்தம் பயந்து போய், உடம்பை குறுக்கிக் கொண்டு உட்கார்கிறார்கள் என்பதாகும்.
கால் மேல் கால் போட்டு ஆட்டுகிறவர்கள் அலட்சியமானவர்கள், அதீத தன்னம்பிக்கை கொண்டவர்கள், அடுத்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவர்கள் என்றெல்லாம் கருதப்படுகிறது.
இருவர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது இருவருடைய கால்களும் ஒரே கோணத்தில் இருந்தால் பேசுகிற விசயத்தில் இருவரும் ஈடுபாடு உள்ளது என்றும் இருவருடைய கால்களும் வேறு வேறு கோணத்தில் இருக்கும் போது பேசுகிற விசயத்தில் ஈடுபாடு இல்லை என்றும் உடல் மொழியில் குறிப்பிடப்படுகின்றது.
நிற்பது போலவே நடப்பதிலும் உடல்மொழி அம்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. தரையில் அழுத்தமாகக் கால் பதித்து நடக்கிறவர்கள், விறைப்பாக நடக்கிறவர்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். எப்போதும் வேகமாக நடக்கிறவர்கள், பொறுமையற்றவர்கள், எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர்கள் ஆவேசமானவர்கள் இருப்பர்.
உடல் பாகங்கள் சொல்லும் கதைகளை எல்லாம் தனித்தனியே படிப்பதைவிட மற்றவற்றோடு சேர்த்துப் படித்துப் பழகுவது நல்லது. உடல் மொழி என்பது பிறரை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.
மேலாண்மை நிறுவனங்களில் தொடங்கி மேடைப் பேச்சாளர்கள் வரை உள்ள எல்லோருக்கும் உடல் மொழியானது இன்றியமையாததாகும். தனிப்பட்ட வணிக, வர்த்தக, சமூக உறவுகள் மேம்பட உடல் மொழியினைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்பது மிகவும் அவசியமானதாகும்.
– வ.முனீஸ்வரன்
உங்களின் இந்த பதிவிற்கு நன்றி.
உடல் மொழியைப் பற்றிய தெளிவான கட்டுரை! நன்றி!