ஆறு சுவைகள் கொண்டு இயற்கையில் கிடைக்கும் எல்லா உணவுப் பொருட்களின் சுவைகளையும் வகைப்படுத்தலாம்.
ஆறு சுவைகள் என்பவை
இனிப்பு
புளிப்பு
உப்பு
கசப்பு
காரம்
துவர்ப்பு.
இதற்கு மேலாக ஏழாவது ஒரு சுவை இயற்கையில் கிடையாது.
நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களும், வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோசங்களைச் சமநிலையிலிருந்து குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்கின்றன.வாயு, பித்தம், கபம் மூன்று தோஷங்களின் சமநிலை ஆரோக்கியத்தையும், அந்த தோசங்கள் நோயையும் உருவாக்குகின்றன.
இனிப்பு, புளிப்பு, உப்பு உடலில் கபத்தை வளர்க்கும், வாயுவைக் குறைக்கும்.
கசப்பு, காரம், துவர்ப்பு பித்தத்தைக் குறைக்கும்.
புளிப்பு, உப்பு, காரம் பித்தத்தை வளர்க்கும்.
இந்த அடிப்படையில் நோய்களின் அந்தந்த தோசங்களுக்கேற்ப பத்தியமான உணவு உட்கொள்ள ஆயுர்வேதம் மருத்துவம் உதவுகிறது.
உணவுப் பொருட்களின் மற்றொரு முக்கியமான குணம் வீரியம் எனப்படும். வீரியம் இரண்டு வகைப்படும். எல்லா பொருட்களும் உஷ்ணம் (சூடு) அல்லது சீதம் (குளிர்ச்சி) என்ற இரண்டில் ஏதாவது ஒரு வீரியம் உடையதாக இருக்கும்.
உடலின் தோசங்களான வாயுவும் கபமும் குளிர்ச்சி தன்மை உடையவை. பித்தம் உஷ்ண குணமுடையது.
அகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உட்கொண்டால் உடலில் வாதமும் கபமும் வளரும். பித்தம் தணியும்.
அதே போல உஷ்ண குணமுடைய உணவுகள் கபம், வாயு இவைகளைக் குறைக்கும். பித்தத்தை வளர்க்கும். எனவே உணவைப் பொறுத்த வரையில் சுவை, வீரியம் இந்த இரண்டு குணங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சீரண சக்தி
நோயற்ற வாழ்க்கைக்கு சீரண சக்தி இன்றியமையாதது. உடலில் சீரண சக்தி குன்றினால் எல்லா வியாதியும் நம்மைத் தாக்கும். பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலநோய், வயிற்றில் காற்று, உப்புசம், வயிற்று வலி, வயிற்று எரிச்சல், ஏப்பம் இப்படி நாள் தோறும் நாம் எதிர் கொள்ளும் நோய்கள் சீரணக் கோளாறினால் ஏற்படுபவை.
மிக அதிகமாகவோ, குறைவாகவோ உணவை உட்கொள்வது,
கால தாமதமாக உணவை உண்பது,
உடலுக்கு ஒவ்வாத அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணவுப்பொருட்களை உண்பது,
மலம், சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குவது,
அளவுக்கு மீறி நீர் அருந்துவது,
இரவில் கண் விழிப்பது,
பகலில் உறங்குவது,
கோபம், அச்சம், சோகம் போன்ற உணர்ச்சிகளின் வசப்படுவது இவையெல்லாம் சீரண சக்தியைக் கெடுக்கும்.