உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வெவ்வேறான விலங்குகள் வெவ்வேறு வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளன.
உணவிற்காக உயிரினங்கள் பற்கள், நகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை சிறப்பாகக் கொண்டுள்ளன. இதனையே நாம் உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள் என்கிறோம்.
உண்ணும் உணவிற்கு ஏற்ப விலங்குகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை
1.தாவரஉண்ணிகள்,
2.ஊண்உண்ணிகள்,
3.அனைத்துண்ணிகள்,
4.ஒட்டுண்ணிகள்,
5.துப்புறவாளர்கள் ஆகியவை ஆகும்.
உண்ணும் உணவிற்கு ஏற்ப விலங்குகள் பல்வேறு தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தாவரஉண்ணிகள்
தாவரங்களை மட்டும் உணவாக உட்கொள்பவை தாவரஉண்ணிகள் என்றழைக்கப்படுகின்றன.
இவ்வகை விலங்குகள் தாவரங்களை வெட்ட கூர்மையான முன்பற்களையும், தாவர பாகங்களை அரைப்பதற்காக தட்டையான, உறுதியான அரைக்கும் பற்களை பின்பற்களையும் கொண்டுள்ளன.
மாடுகள், குதிரைகள், வரிக்குதிரைகள் மற்றும் முயல்கள் தாவரஉண்ணிகள் ஆகும்.
ஊன்உண்ணிகள்
உணவிற்காக பிற உயிரினங்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்பவை ஊன்உண்ணிகள் ஆகும்.
சிங்கம், புலி, ஓநாய் போன்றவை தங்களின் இரையைக் கிழித்து உண்பதற்காக மிகவும் கூரிய பற்களைக் கொண்டுள்ளன.
கழுகு, பறந்து போன்ற ஊன்உண்ணிப் பறவைகள் கூரிய நகங்களால் இரையைப் பற்றிக் கொள்ளவும், வளைந்த அலகால் இரையை கிழித்து உண்ணவும் செய்கின்றன.
பாம்புகள் தங்களின் விசத்தினால் இரையை முடங்கச் செய்து பின்னர் இரையை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.
அனைத்துண்ணிகள்
தாவரம் மற்றும் விலங்குகளின் இறைச்சியை உணவாக உட்கொள்பவை அனைத்துண்ணிகள் எனப்படுகின்றன.
கரடிகள், மனிதர்கள் அனைத்துண்ணிகளுக்கு உதாரணமாகும். பறவைகளில் சில அனைத்துண்ணிகளாக உள்ளன.
நெருப்புக்கோழி, காகம், ராபின் போன்ற பறவைகள் தாவர மற்றும் பூச்சியினங்களை உணவாக உட்கொள்கின்றன. சிலவகை மீன்கள் மற்றும் பூச்சியினங்களும் அனைத்துண்ணிகளாக உள்ளன.
ஒட்டுண்ணிகள்
ஒட்டுண்ணிகள் பொதுவாக பிற உயிரினங்களின் உடலுக்கு வெளியேயும், உள்ளேயும் காணப்படுகின்றன. இப்பிற உயிரினங்கள் ஓம்புயிரிகள் எனப்படுகின்றன.
ஒட்டுண்ணிகள் ஓம்புரிகளிடமிருந்து தங்களுக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்கின்றன.
பேன், உண்ணி, மூட்டைப்பூச்சி போன்றவை உடலுக்கு வெளியே காணப்படும் ஒட்டுண்ணிகள் ஆகும்.
கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை உடலுக்கு உள்ளே காணப்படும் ஒட்டுண்ணிகள் ஆகும். ஒட்டுண்ணிகள் ஓம்புயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
துப்புறவாளர்கள்
துப்புறவாளர்கள் என்பவை இறந்த விலங்குகளின் உடலினை உண்ணுகின்றன.
வல்லூறுகள், கழுதைப்புலிகள் ஆகியவை துப்புறவாளர்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
துப்புறவாளர்கள் மிகச்சிறந்த பார்வைத் திறனையும், மோப்பசக்தியையும் பெற்றுள்ளன. இதனால் இவைகளால் தூரத்தில் இருந்தே இறந்த உடல்களைக் கண்டறிய முடியும்.