உணவுப் பயிர் – கோதுமை

உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படும் தானியமாக கோதுமை உள்ளது. இது ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். இது மித வெப்ப மண்டலப் பகுதி மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளது. உலகின் 25% நிலப்பகுதி கோதுமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது.

பரந்தளவில் இலகுவாய் பயிர் செய்யக்கூடிய தன்மையும், நீண்ட காலத்துக்கு சேமிக்கும் தன்மையும் இருப்பதால் தான் அதிக அளவு பயிர் செய்யப்படும் தானியமாக  இது உள்ளது.

 

வளர்ச்சிக்கு தேவையான காரணிகள்:

இப்பயிர் செழித்து வளர ஆரம்ப கால கட்டத்தில் மிதமான வெப்பமும், ஈரப்பதமும் தேவை. வளர்ச்சியின் பிற்பகுதியில் சூரிய வெப்பமும், உலர்ந்த நிலையும் தேவைப்படுகிறது.

இப்பயிருக்கு 15C லிருந்து 20C வரை உள்ள தட்ப வெப்பநிலையே சரியானது. 50-60 செ.மீ. சராசரி மழையளவு தேவைப்படுகிறது. களிமண் அல்லது வண்டல் கலந்த களிமண் இப்பயிர் வளர உகந்த மண்வகையாகும்.

உலகின் சிறந்த வகை கோதுமை மித வெப்ப மண்டல புல்வெளிகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஏனெனில் அங்குள்ள மண்ணில் அதிக அளவு உயிர்ச் சத்து காணப்படுகிறது.

இப்பயிரானது பெரிய சமனற்ற மேல்கீழ் நிலப்பகுதிகளிலும் விளைக்கப்படுகிறது. இப்பயிர் வளர்ப்புக்கு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, யுக்ரன், கனடா, அர்ஜெண்டைனா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இடங்கிளல் அதிக அளவு பயிர் செய்யப்படுகின்றது.

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும்.