உணவு – சிறுவர் கதை

காளியப்பன் உணவு விடுதியில் அன்று கூட்டம் அலை மோதியது. மீன் வறுக்கும் ‘ஷ்..ஷ்..ஷ்..’ சத்தம் ஒருபுறம், இறால் பொரியல் ஒருபுறம், சிக்கன் வறுவல் ஒருபுறம் என களை கட்டியது.

அவ்வூரில் காளியப்பன் அசைவ ஹோட்டல் என்றால் பிரபலம். பரோட்டா, மீன் குழம்பு சாப்பாடு, கறி குழம்பு சாப்பாடு என அனைத்தும் சுடசுட சுவையாகக் கிடைக்கும். மதியம் முதல் இரவு வரை அசைவ மணம் வீசும்.

எட்டாம் வகுப்பு படிக்கும் சண்முகத்திற்கு பள்ளி செல்லும் வழியில் உள்ள காளியப்பன் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை இருந்து வந்தது. ஒருநாள் தன் அம்மாவிடம் தனது ஆசையைக் கூறினான்.

அவனுடைய அம்மாவும் அவனை ஒருநாள் கட்டாயம் அழைத்துச் செல்வதாகக் கூறினார். அந்த நாளும் வந்தது. சண்முகமும் அவனுடைய தந்தையும் காளியப்பன் ஹோட்டலுக்குச் சென்றனர்.

 

உள்ளே நுழையும் முன்பே வாசனை மூக்கைத் துளைத்தது. ஆளக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர். பக்கத்து மேசையை எட்டிப் பார்த்தான் சண்முகம்.

ஒருவர் வாழை இலை நிறைய மீன் வறுவல், சிக்கன் வறுவல், முட்டை, சாப்பாடு என வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்பா சண்முகத்திடம் “என்ன வேண்டும்?” என்றார்.

“சாப்பாடு வேண்டும்” என்றான்.

இலை வந்தது. அனைத்து வகைகளும் வந்தன.

சண்முகத்தின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது. ஒருபாதி சாப்பாட்டிற்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை.

“அப்பா, போதும்” என்றான்.

“உணவை வீணடிக்கக் கூடாது” என்று சண்முகத்தின் அப்பா கூறினார்.

சண்முகத்தால் சாப்பிட முடியவில்லை. ஆதலால் மீதமுள்ள சாப்பாட்டை இலையோடு குப்பைத் தொட்டியில் போட்டான் சண்முகம்.

ஹோட்டலை விட்டு அப்பாவுடன் வெளியே வந்த சண்முகம் கண்ட காட்சி அவன் மனதை நெருடியது.

 

கிழிந்த சட்டையோடும், கிழிந்த கால்சட்டையோடும் ஒரு சிறுவன் எச்சில் இலையில் ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப் பருக்கைகளை தேடித்தேடி எடுத்துத் தின்றான்.

சண்முகத்தின் மனதில் சிந்தனை ஓடியது.

“அவ்வளவு சாப்பாட்டை சாப்பிடாமல் நான் வீணடித்து விட்டேனே” என்று அப்பாவிடம் கூறினான்.

அப்பா அவனைத் தேற்றினார்.

“உணவில்லாமல் நாட்டில் பலபேர் வாழ்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் உணவை வீணடிக்காமல் தேவைக்கு உண்டால் பிறருக்கு உணவு தானாகச் சென்றடையும். வறுமை ஒழியும்” என சண்முகத்திடம் அப்பா கூறினார்.

“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்றான் சண்முகம் தழுதழுத்த குரலில்.

 

“அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. உடையில்லாமல் வாழ்பவன்கூட உண்டு. உறைவிடம் இல்லாமல் வாழ்பவர்கள் பலருண்டு.

உணவில்லாமல் வாழ்வது என்பது முடியாது. எனவேதான் உணவு, உடை, உறைவிடம் என மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடம் பெறுகின்றனர்.

தேவைக்கு ஏற்ப உண்ணுவோம், உணவை வீணடிக்காமல் வாழ்வோம். உணவு கிடைக்காதவர்க்கு உதவுவோம். வறுமையை ஒழிப்போம்.” என்றார் அப்பா.

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

One Reply to “உணவு – சிறுவர் கதை”

Comments are closed.