உணவு விதிமுறைகள்

உணவு விதிமுறைகள் என்பது நாம் உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் பற்றிக் குறிப்பிடுவதாகும்.

 
உணவின் அளவு

நாம் எப்பொழுதுமே அளவறிந்து உணவை உட்கொள்ள வேண்டும். இந்த அளவு இரண்டு விஷயங்களை சார்ந்தது. ஒன்று உடலின் சீரண சக்தி மற்றொன்று உண்ணும் உணவின் தன்மை.

அதாவது உணவை உட்கொள்ளும் பொழுது சீரண சக்தி சரியாக இருக்கிறதா அல்லது குறைவாக உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு எளிதானதாக அல்லது கடினமானதா என்பதைப் பொறுத்தும் உணவின் அளவு மாறுபடும்.

எளிதில் சீரணமாகாத உணவுப் பொருட்களை வயிற்றில் அரைப்பங்குக்கு மேல் உட்கொள்ளக் கூடாது. உதாரணமாக இனிப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்கள், நெய்யில் சமைத்த பொருட்கள் இப்படிப்பட்ட உணவு வகைகள் அரை வயிற்றுக்கு அதிகமாக உண்பது நல்லதல்ல.

ஆனால் இலகுவான சீரணத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளும் போது மனநிறைவும், திருப்தியும் ஏற்படும் அளவிற்கு உட்கொள்ளலாம். ஆனாலும் வயிறு நிரம்பும் வரை உண்ணக் கூடாது.

உணவை உண்ணும் போது வயிற்றில் இரண்டு பங்கு உணவும், ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு காலியாகவும் இருக்கும்படி உண்ண வேண்டும்.

 

உணவு உண்பதற்கு ஏற்ற காலம்

உணவு அருந்தவதற்கு சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனைக் கூர்ந்து நோக்க வேண்டும். அதாவது பசி ஏற்படும் போது நாம் சாப்பிடுவது அவசியம்.

பசி எடுக்காமல் உணவு உண்பது உடலுக்கு மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். இதே போல் உண்ட உணவு செரிக்கும் முன்பு வேறு உணவினை உட்கொள்ளக் கூடாது. அப்படி உண்டால் ‘ஆமம்’ எனும் நஞ்சு வயிற்றில் உருவாகி உடலெங்கும் பரவி பல நோய்களை உருவாக்கிவிடும்.

உணவு செரிக்காத நிலையில் உணவின் சுவை, மணம் இவைகளுடன் கலந்து ஏப்பம் வெளிவரும். ஏப்பம் சுத்தமாக ஒரு சுவையும் இல்லாமல் வந்த பிறகே உண்ண வேண்டும்.

உண்ணும் வேளையில் இருதயம், முகம், புலன்கள் இவை தெளிவுற்று இருக்க வேண்டும். சிறுநீர், மலம் இவைகளை கழித்திருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு உண்ணும் உணவு ஆயுள், பலம், நிறம் ஆகியவற்றை வளர்க்கின்றது.

 

உணவு விதிமுறைகள்

எப்பொழுதும் எண்ணெய்ப் பசை உள்ளதும், எளிதில் சீரணமாகக் கூடியதும், சூடானதுமான உள்ள உணவை உண்ண வேண்டும்.

உணவில் முதலில் சீரணத்திற்குக் கடினமானதும், இனிப்புச் சுவை உள்ளதும், எண்ணெய்பசை உள்ளதுமான உணவுகளை உண்ண வேண்டும்.

புளிப்பு, உப்பு சுவை கொண்ட உணவுகளை இடையிலும், வறட்சியானதும் (எண்ணெய்ப் பசையற்றது), திரவமானதும், காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகள் உள்ளதுமான உணவை இறுதியிலும் உண்ண வேண்டும்.

குறைந்த சீரணசக்தி உள்ளவர்கள் முதலில் சூடான திரவப் பொருட்களை அருந்துவது மிகவும் பயனளிக்கும். இதனால் சீரணசக்தி வளர்ச்சி பெற்று உணவை நன்கு செரிக்கும்.

உணவை தாமதமாகவோ, மிகவிரைவாகவோ, பேசிக்கொண்டோ, சிரித்துக் கொண்டோ, மனதை வேறிடத்தில் செலுத்தியபடியோ உண்ணக் கூடாது. இப்படி உண்பதால் உணவு சரியாக செரிக்கப்படுவதில்லை. இதனால் உடலில் தாதுக்கள் சரியாக வளர்ச்சி பெறுவதில்லை.

உணவு விதிமுறைகள் பற்றி அறிந்து அவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.