‘ஒரு பெரிய வேலையில் கை நிறைய சம்பளத்தோடு வேலை பார்க்க வேண்டும் என்ற பேராவலில் இளமையின் பெரும்பான்மையை படிப்பதிலே செலவழிக்கிறோம்.
நான் ஒரு நபர், படிக்க வேண்டும் என்பதற்காக நமது நேரம், பெற்றோர்களின் பணம், அவர்களின் தியாகம், யோசிக்க தெரிந்த, தெரியாத பல காரணிகளும் நம்மை படிக்க வைத்ததின் பின்னணியில் இருக்கும்.
15 ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டு படித்து மனதிற்குப் பிடித்த ஒரு நல்ல வேலை கிடைப்பது அல்லது குறைவான தொகை சம்பளம் வாங்கும் நிலை சமீப காலத்தில் ஏன் அதிகரித்து வருகிறது என்ற ஆய்வை மேற்கொண்டேன்.
யோசிக்க வைத்து சிந்தனையை தூண்டிய கேள்விகளில் சில:
முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த, படிக்கின்ற பெரும்பாலான மாணவர்கள் அவரவர்களின் படிப்பு காலங்களில் ஆசிரியர்கள் பாராட்டியது, போட்டிகளில் வெற்றி பெற்றது என அவரவர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்தியதற்காக அல்லது திறமைகள் வெளிப்பட்டதற்காக பாராட்டுகள் பெற்றிருப்பார்கள்.
அதே மாணவர்கள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் போது பாராட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.
உதாரணத்திற்கு முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் போது 10 பாராட்டுகள் வாங்கி இருந்தால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் போது பாராட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.
வயதும் வகுப்புகளின் எண்களும் அதிகரிக்கும் போது பாராட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பது தான் யதார்த்தம். ஆனால் பெரும்பாலும் குறைவாக இருந்திருக்கிறது. அது ஏன்?
ஏறக்குறைய சம வயதுடைய, ஒரே கல்வித் தகுதியுடைய அல்லது சம பாட கல்வி தகுதியுடைய ஒருவன் லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கும் போது அதே வயதுடைய, அதே கல்வித் தகுதியுடைய ஒரு மாணவன் மாத சம்பளம் ரூபாய் 20,000ற்கும் குறைவாக வாங்குவது ஏன்?
இது போன்ற கேள்விகளுக்கான பதிலை பெறுவதற்காக கீழ்வரும் ஆராய்ச்சி முறையை மேற்கொண்டேன்
ஆராய்ச்சியின் நோக்கம்
மாணவர்களுக்குள் மறைந்திருக்கும் உண்மையான யதார்த்தமான திறமைகளை கண்டுபித்து அவரவர் குணங்களின் அடிப்படையில் இருந்த திறமைகளை கண்டுபிடித்து அவர்களை ஆளுமைகளாக மாற்றுவதற்கான ஆரம்ப புள்ளியை கண்டறிவது
ஆராய்ச்சி முறை
• மூன்றாம் ஆண்டு படிக்கும் 46 மாணவர்களை தேர்ந்தெடுத்தேன்.
• சென்னையில் 03.01.2024 முதல் 21.01.2024 வரை நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு சென்று உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்து அந்த கடைக்கு முன்னால் உங்களை ஒரு செல்பி எடுத்து எனக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தேன்.
• நான் சொல்கின்ற வரை யாரும் புத்தகத்தை படிக்க கூடாது.
மாணவர்களின் செயல்பாடுகள்
• 46 மாணவர்களும் புத்தக கண்காட்சிக்கு சென்றார்கள்.
• ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து கண்காட்சியினுடைய ஏதேனும் ஒரு கடைக்கு முன்னால் நின்று போட்டோ எடுத்து அவர்கள் செல்ஃபி எடுக்கவில்லை. மாறாக புத்தக கண்காட்சிக்கு உள்ளே பல கடைகளுக்கு சென்று அவரவர்களுக்கு வேண்டிய புத்தகத்தை தேடி எடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
• இரண்டு இரண்டாக, மூன்றாக நண்பர்களாக சென்றாலும் இரண்டு மாணவர்களை தவிர ஒரே புத்தகத்தை யாரும் எடுக்கவில்லை.
• அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை தனித்தனியாக எடுத்து இருக்கிறார்கள்.
சிறுவயதில் ஒன்றாம் வகுப்பு வரை ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் காலங்களை சற்று நினைவுபடுத்துங்கள்.
மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது ஜாமென்ட்ரி பாக்ஸை திறந்து பென்சில் அல்லது ஏதேனும் பொருள்களை எடுக்கும் போது கைத்தவறி கீழே விழுந்திருக்கும். கூட்ட நெரிசலாக இருந்தாலும், ஏய்! தள்ளு என்று பிறரை கொஞ்சம் தள்ளிவிட்டு நமது பென்சிலை அல்லது கீழே விழுந்த பொருட்களை எடுத்திருப்போம்.
அதே சூழல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் போதும் ஏற்பட்டிருக்கும். என்ன செய்திருப்போம் தெரியுமா?
அறிவை கொண்டு யோசிக்காமல் அனுபவத்தின் வழியாக உணருங்கள்.
பேனா அல்லது பென்சில் கீழே விழுந்தவுடன் சற்று திரும்பி பார்த்திருப்போம். யாரும் இல்லை என்றால் நாம் குனிந்து எடுத்திருப்போம். கூட்ட நெரிசலாகவோ அல்லது மனிதர்கள் நடமாட்டம் இருந்திருந்தால் அதை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றிருப்போம்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்முடைய செயலின் அணுகுமுறை மாறுகிறது என்றால் அந்த மாற்றத்தின் பின்னணியில் இருப்பது என்ன?
சிறுவயதில் நமக்காக நமக்கு பிடித்ததை செய்கின்ற நாம், விபரம் தெரிந்த பின் மற்றவர்களுக்காக நமது செயலை வடிவமைக்கிறோம். ஏன்?
இன்றும் நாம் நமக்காக வாழ்வதைவிட, பிறருக்காகவே வாழ்ந்து, நம்முடைய வாழ்க்கையை வாழாமலேயே கழித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி எனில் உண்மையான வாழ்கை என்பது என்ன?
(தொடரும்)
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408