நாம் உண்மையானவர்களா? போலியானவர்களா? – பாகம் 2

மாணவர்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் கொண்டு வந்த புத்தகம் என்னை மட்டுமல்ல சம்பத்தப்பட்ட மாணவர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது.

“ஏன் இந்த புத்தகத்தை எடுத்தாய்?” என்ற எனது கேள்விக்கு,

மாணவர்கள் எடுத்த புத்தகத்தையும், அவர்கள் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் போது உள்ள குணத்தையும் ஒப்பீடு செய்து பார்க்க சொன்ன போது, கன கச்சிதமாக அப்படியே பொருந்தியது.

சமீப காலங்களில் நீங்கள் பெற்ற பாராட்டுகளின் இயல்புகளை யோசிக்க சொன்ன போதும், சிறு வயதின் யதார்த்த குணங்கள் அங்கே வெளிப்பட்டதை அவர்களே உறுதியும் செய்தார்கள்.

இன்று நீங்கள் யாரை ஆளுமைகளாக நினைக்கிறீர்களோ சமகாலத்தில் சாதித்து இருக்கிறார்களோ அவர்கள் பெரும்பாலும் தகுதியை [QUALITY] நிர்ணயித்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.

‘சார் நீங்க ரொம்ப பிசியாக இருக்கிறீர்கள்; உங்கள மாதிரி எல்லாம் என்னால் வேலை பார்க்க முடியாது, இவ்ளோ வேல பாக்றீங்க! நேரம் எப்படி சார் கிடைக்கும்? இது உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் சார்’ என்று நீங்கள் நினைக்கும் அவர்களின் கஷ்டம் உங்களுக்கு தானே தவிர, இது ரொம்ப கஷ்டம், முடியவே முடியாது என்று எந்த ஆளுமைகளும் சொன்னதாக தெரியவில்லை.

ஒரு வேளை அவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை அவர்கள் அணுகும் பக்குவம் அவர்களை மாற்றியிருக்கும்.

காரணம், மனம் நிறைந்து வேலை பார்த்தால் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் மனம் ஒன்றி வேலை பார்ப்பதற்கான அடிப்படையை நாம் தவற விட்டதால் நாம் பிறரை பற்றியே யோசிக்கிறோம்.

அதன் விளைவு,

ஏறக்குறைய சம வயதுடைய, ஒரே கல்வித் தகுதியுடைய அல்லது சம பாட கல்வி தகுதியுடைய ஒருவன் லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கும் போது அதே சம வயதுடைய, ஒரே கல்வித் தகுதியுடைய ஒரு மாணவன் மாத சம்பளம் ரூபாய் 20,000ற்கும் குறைவாக இருக்கிறது என்ற ஏக்கம் மேலிடுகிறது.

‘வேலை சரியாக அமைவதற்கும் அமையாததற்கும் காரணம், அவரவர்கள் படித்த படிப்பா? கால சூழலா? திறமையா?’ எனும் யோசிக்கும்போது ‘திறமை’ என்பது தான் உண்மை என்று புரிய வரும்.

குணத்தின் அடிப்படையில் வெளிவரும் திறமைகள் வெளிப்படாத போது உடல் ரீதியான (வெளிப்படையான) காரணங்களுக்காகவே வேலைகள் செய்ய பழகி விடுகிறோம்.

அப்படி செய்யும்போது என்றாவது ஒருநாள் ஏதேனும் வேலைக்கான பொறுப்புகள் கொடுக்கப்படும்போது அதை மிக சரியாக மிக சிறப்பாக செய்து முடிக்கும் போது, “டேய்! நீயா! கலக்கிட்டடா! இத்தன நாளா வரதும் தெரியாது, போறதும் தெரியாது” என நண்பர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனைவரின் பாராட்டை பெறுகின்ற போது, ‘ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது இந்த மாதிரி நிறைய பண்ணி இருக்கேன்’ என்று சொல்வதற்கு மனம் வந்தாலும் வாய் மூடிக் கொள்ளும்.

யதார்தமாகவே உங்கள் குணங்களின் அடிப்படையில் வெளிவரும் திறமைகள் வெளிப்படும்போது என்றாவது ஒருநாள் நீங்கள் யார் என்பதை புரிய வைக்கிறதல்லவா!

அந்த திறமையை தான் நீங்கள் இழந்திருக்கீர்கள்; அல்ல, தொலைத்திருக்கிறீர்கள்.

கால சூழலில் நீங்கள் தொலைத்த அந்த திறமை தான், வேலை சரியாக அமைவதற்கும் அமையாததற்கும் காரணம் என்பதை உங்களால் உணர, புரிந்து கொள்ள முடியாமலே போய் விடுகிறது. அதை உணர்ந்தவர்கள் தொடர்கிறார்கள்; ஆளுமைகளாக மாறுகிறார்கள்.

உங்கள் கவனத்தில் தென்படுகின்ற, சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற, பல்வேறு பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றவர்களை வெளியில் இருந்து நாம் பார்க்கும் போது கஷ்டமாக தெரியும்.

ஆனால் அது தான் அவர்களுக்கு இன்பம்.

மனதுக்கு பிடித்த விஷயங்களை, வேலைகளை செய்யும் போது மன நிறைவு ஏற்படும். இது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

சிறு வயதில் நீங்கள் தொலைத்த ‘உங்களை’, உங்கள் குணத்தின் அடிப்படையில் வெளி வந்த ‘திறமைகளை’ மீட்டெடுங்கள்.

நாம் நமது பெயருக்கு பின்னால் நாம் வாங்கும் படிப்புகளை போட்டுக் கொள்கிறோம்.

கொஞ்சம் மாற்றி யோசித்து உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் திறமைகளை போட்டு நீங்களே பேசிப் பாருங்கள்.

மனிதர்கள் திறமையின் அடிப்படையில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தியலை இப்போது தான் நாம் யோசித்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த அறிவியலும் தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில் வாழ்ந்த ‘முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ அவர்கள் தனது நண்பர்களை அவர்களின் பெயருக்கு பின்னால் அவர்களின் திறமைகளை வைத்து அழைத்ததால் உலகம் அவர்களை இன்றும் நினைவில் வைத்திருக்கிறது.

‘அபூபக்கர்’ என்ற பெயருக்கு பின்னால் ‘உண்மையாளர்’ என்ற குணத்தின் அடிப்படையில் வெளியான திறமை வைத்து அழைக்கப்பட்டார்கள்

‘உமர்’ என்ற பெயருக்கு பின்னால் நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பவர் எனும் குணத்தின் அடிப்படையில் வெளியான திறமை வைத்து அழைக்கப்பட்டதால், 10 ஆண்டுகள் (634 – 644) அவர்களின் ஆட்சி முறையின் நீட்சி இன்றும் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்ல நடைமுறையிலும் இருக்கிறது என்பதை ஆச்சர்யத்தோடுதான் பார்க்க வேண்டி இருக்கிறது.

இது போன்ற நிறைய உதாரணங்கள். ஆகவே நீங்கள் உங்கள் சிறுவயதில் தொலைத்த உங்கள் குணத்தின் அடிப்படையில் அமைந்த திறமைகளோடு உங்கள் செயல்களை உங்கள் வேலைகளை செயல்படுத்த துவங்குங்கள்.

உலகம் உற்று நோக்கும் இடத்தில் நீங்களும் ஒருவராக மாறுவீர்கள்!

வாழ்த்துக்கள்!!

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408