முன்னொரு காலத்தில் குருபுரம் என்ற ஊரில் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்தது. அக்குடும்பத்தில் எல்லோருக்கும் இளையவனான நல்லதம்பி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்றாற் போல் நல்லவனாக இருந்தான்.
ஒருநாள் நல்லதம்பியின் தாய் அவனிடம் மூன்று செம்பு நாணயங்களைக் கொடுத்து கடைவீதிக்குச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னார்.
நல்லதம்பியும் அம்மா கொடுத்த காசுகளை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்க கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தான்.
வழியில் இருந்த ஏரியில் இருந்த தண்ணீரை எட்டிப் பார்த்தான். அவன் சட்டைப் பையில் வைத்து இருந்த காசுகள் ஏரித்தண்ணீரில் விழுந்து விட்டன.
சிறிது நேரம் கழித்துதான் தான் காசுகளை தவறவிட்டதை அவன் உணர்ந்தான்.
தன்னுடைய அம்மா தன்னை நம்பி உணவுப் பொருள் வாங்கக் கொடுத்த காசுகளை தவறவிட்டதை எண்ணி நல்லதம்பி மிகவும் கவலை அடைந்தான். சோகத்தில் ஏரிக்கரையில் அமர்ந்து அழத் தொடங்கினான்.
நல்ல தம்பியின் அழுகையைக் கேட்டதும் அவ்விடத்திலிருந்த குட்டி தேவதை அவனிடம் இரக்கம் கொண்டு அவனுக்கு காட்சியளித்தது.
நல்லதம்பியிடம் தேவதை “தம்பி நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்டது. அதற்கு நல்லதம்பி “என்னிடம் என் அம்மா மூன்று காசுகள் கொடுத்து கடைவீதியில் சென்று உணவுப்பொருட்களை வாங்கி வரச் சொன்னார். நான் காசினை இந்த ஏரியில் தவற விட்டேன். அதனால்தான் அழுகிறேன்” என்றான்.
அதனைக் கேட்ட குட்டி தேவதை “கவலைப்படாதே. நான் இப்போதே ஏரியில் மூழ்கி உன்னுடைய காசினை எடுத்துத் தருகிறேன்” என்றது.
பின் ஏரியின் தண்ணீரில் மூழ்கிய தேவதை சிறிது நேரத்தில் வெளிப்பட்டது. குட்டி தேவதை நல்லதம்பியிடம் மூன்று தங்கக் காசுகளை நீட்டியது.
தங்கக் காசுகளைப் பார்த்த நல்லதம்பி “இவை என்னுடையவை அல்ல.” என்றான்.
“சரி நான் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று கூறிய குட்டி தேவதை தண்ணீரினுள் மூழ்கியது.
சிறிது நேரத்தில் வெளிப்பட்டு நல்லதம்பியிடம் மூன்று வெள்ளிக் காசுகளை நீட்டியது. அதனைக் கண்டதும் நல்லதம்பி “இவை என்னுடையவை அல்ல” என்று கூறியது.
“கவலைப்படாதே தம்பி நான் மீண்டும் சென்று உன்னுடைய காசுகளை கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு தண்ணீரினுள் சென்றது.
சிறிது நேரத்தில் வெளியே வந்து மூன்று செம்பு நாணயங்களை நல்லதம்பியிடம் நீட்டியது.
அதனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் நல்லதம்பி “இவை என்னுடையவைதான்” என்று கூறினான்.
உடனே குட்டி தேவை “நல்லதம்பி தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகளை பார்த்த போதும் அதற்கு ஆசைப்படாமல் உன்னுடைய செம்புக்காசுகளை மட்டுமே உன்னுடையது என்று கூறினாய்.
நீ உண்மையைக் கூறியதற்காக இந்த தங்கம், வெள்ளி மற்றும் செம்புக் காசுகளை நீயே வைத்துக் கொள்” என்று கூறிவிட்டு மறைந்தது.
காசுகளைத் திரும்பப் பெற்ற நல்லதம்பி மகிழ்ச்சியுடன் கடைவீதிக்குச் சென்றான்.
இக்கதையின் மூலம் உண்மையின் பரிசு பற்றி அறிந்து கொண்டீர்களா. உண்மையின் பரிசு விலை மதிப்பிலாதது தானே.