உண்மை

ஊருல காட்டுல மேட்டுல எல்லாம் அமைதியா இருக்குது

உச்சியில் வானத்து நட்சத்திரம் நல்லா இப்ப தெரியுது

காரு வண்டியினு ஓடுன ரோடு காலியாகவே கிடக்குது

காற்றுங்கூட தூசியில்லாம சுத்தமாகவே வீசுது

 

ஆறுக எல்லாம் அசுத்தமின்றி நல்லா இப்போ சிரிக்குது

ஆத்து மணலை வித்தகூட்டம் முடங்கிப் போயி கிடக்குது

தெருமுழுதும் குடிகாரர் தொல்லைகளின்றி இருக்குது

தெருக்கோடி சாமியும் இப்போ நல்லா அசந்து தூங்குது

 

வெறும் ருசிக்கே என்றுவந்த துரிதஉணவு தொலைந்து

வீட்டுல சமையல் செய்வதாலே உடல்நலனே பெருகுது

குறுக்கும் நெடுக்கும் வேகமாக பறந்த கூட்டம் அடங்குது

கூட்டாக சேட்டைகள் செய்யும் கும்பல் எங்கேஇப்போ போனது

 

கருவிலிருந்து பிறக்கும் குழந்தை அழகு பூமியை பார்க்குது

காதுவலிக்க சத்தம் போடும் பாட்டொலி அடங்கிப் போனது

குருவி மைனா குயிலு சத்தம் இனிமையாக கேட்குது

கொஞ்சு புறாக்கள் அகவல் மொழியும் தெளிவாக புரியுது

 

பெரும்பயணம் போகும் மனிதர் எண்ணிக்கை குறையுது

பெரிய உண்மை இப்போதுதான் உலகத்திற்கே தெரியுது

மருந்து சிகிச்சை இல்லாமலே மனிதநலன் பெருகுது

மாறாது இந்தநிலை தொடர மனம் விரும்புது

 

வெறும் நோய்தான் கொரானா இது உலகை மிரட்டி சிரிக்குது

விண்ணும் மண்ணும் நமதென்ற ஆணவத்தை நொறுக்குது

ஒருஉண்மை இந்நோய்தான் நாம் உணரக் காட்டுது

ஒருபொழுதும் இயற்கை அன்னை தோற்றதில்லை என்றது

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.