உண்மை – சிறுகதை

உண்மை - சிறுகதை

மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.

டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.

கிரிதரனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம்.

கிரிதரனின் அப்பா ஓர் பால் வியாபாரி. மிகவும் கண்டிப்பானவர். அம்மா அதிகம் படித்தவர் இல்லையென்றாலும் அன்பானவர்.

அப்பா கந்தசாமியும் அம்மா லட்சுமியும் கிரிதரனை பாசத்துடனும் கண்டிப்புடனும் வளர்த்து வந்தனர்.

கந்தசாமி தன் மகன் கிரியை எப்படியாவது படிக்க வைத்து ஓர் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற நினைப்பில் உறுதியுடன் இருந்தார்.

பத்தாவது படித்துக் கொண்டிருந்த கிரிதரனுக்கு ஏனோ அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. வீட்டில் அப்பாவின் கண்டிப்பு அதிகமானது.

ஒருமுறை தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல் கிரிதரனை அடிக்க, அவரை பிடித்து தள்ளி விட்டு விட்டு அன்று ஓடியவன் தான்.

‘டமார்’ என்று ஒரு சத்தம். கண் விழித்தார் கிரிதரன்.

டிரைவர் பதட்டத்துடன் காரின் கதவை திறந்து கீழே இறங்கி ஓட, கிரிதரனும் காரை விட்டு இறங்கி சென்றார்.

காரின் முன் பக்கத்தில் ஒரு வயதான பெரியவர் தலையில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தார்.

கிரிதரன் டிரைவரை பார்த்து “என்னப்பா இப்படி பண்ணிட்டியே? என்ன ஆச்சு.”

“நான் கவனமாகத்தான் ஓட்டினேன் ஐயா. இந்தப் பெரியவர் தான் குறுக்கே வந்து விழுந்து விட்டார்.”

“சரி, சரி. இப்போ என்ன செய்வது?”

“ஒன்னும் பெரிய அடி ஒன்னு இல்லங்கையா. தலையில லேசா தான் அடிபட்டு இருக்கு. பெரியவர் மயக்கத்துல கிடக்கிறார்.” என்றார் டிரைவர்.

இரவு நேரம் என்பதால் போக்குவரத்து அதிகம் இல்லை.

கிரிதரன் “சரி, சரி. நல்லா பாத்திட்டியா? அடி ஒன்னும் பலமா இல்லையே? புடி”

யாரும் பார்க்கிறதுக்கு முன்னால ரெண்டு பேரும் பிடித்து தூக்கி ஓர் ஓரமாக கொண்டு போய் சுவற்றில் சாய்த்து பெரியவரை உட்கார வைத்தார்கள்.

டிரைவர் ஓடிப்போய் வண்டியில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு வந்து ரத்தத்தை துடைத்துவிட்டு, “ஒன்னும் பெரிய அடி எல்லாம் ஒன்னும் இல்லங்க ஐயா. இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரியவர் கண்ணு முழுச்சுடுவார்.”

கிரிதரன் “சரி, சரி இதோட போச்சே” என்று சொல்லிவிட்டு தன் பேக்கில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து பெரியவர் பாக்கெட்டில் வைக்க சொல்லி டிரைவரிடம் கொடுத்தார்.

பெரியவரின் பாக்கெட்டில் பணத்தை வைத்தப் பின் கார் புறப்பட்டுச் சென்றது.

இரண்டு நாட்கள் சென்றன. கிரிதரன் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பும் வேளையில் பெற்றோரின் ஞாபகம் வந்தது.

உடனே “டிரைவர் வண்டிய எடுங்க. நெல்லிகுப்பத்துக்கு போகணும்.” என்றார்.

கார் புறப்பட்டது. நெல்லிக்குப்பம் இன்றும் பழமை மாறாமல் அப்படியே இருந்தது.

தங்கள் வீட்டினை அடையாளம் கண்டு வீட்டின் வாசலில் காரை நிறுத்தி விட்டு கிரிதரன் கீழே இறங்கினார்.

வீட்டின் முன்பு ஊர் மக்கள் நிறையபேர் கூடி இருந்தார்கள்.

ஒன்றும் புரியாதவராய் கூட்டத்தை விலக்கி உள்ளே செல்ல, உள்ளே கட்டிலில் ஓர் பெரியவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

அதனை சுற்றி உட்கார்ந்து அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்.

கிரிதரன் அங்கிருந்த ஒருவரை அழைத்து, “இங்க இருந்த கந்தசாமியும் லட்சுமியும் எங்கே போனார்கள்? இவர்கள் எல்லாம் யார்?” என்று கேட்டார்.

அதற்கு அவர் “இங்கே இறந்து போய் கிடக்கிறாரே அவர் தான் கந்தசாமி. அவர் காலை புடிச்சுகிட்டு அழுதுட்டு இருக்குதே அது தான் லட்சுமி. ஆமாம் நீங்க யாரு?” என்று கேட்டார்.

“நான்தான் அவங்க புள்ள கிரி.”

“ஓ! அந்த சின்ன புள்ளையிலேயே ஊரை விட்டு ஓடிப் போனது நீங்க தானா? வாங்க” என்று அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

கந்தசாமியின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த லட்சுமியை கூப்பிட்டு “இந்தா லட்சுமி, உன் புள்ள கிரி வந்திருக்கான் பாரு” என்று சொன்னார்.

துக்கத்தில் இருந்த லட்சுமி திரும்பி தன் பிள்ளை கிரியை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

பின் சுயநினைவுக்கு திரும்பி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “வாப்பா, வந்து உன் அப்பாவை பார்.”

அருகில் சென்ற கிரிதரன் தன் அப்பாவை பார்த்து, “இதற்குத்தான் இவ்வளவு நாள் கழித்து வந்தேனா? அப்பா! நான் நல்ல நிலைமையில் இருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களை என்னுடன் அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று வந்தேனே” என்று அழுது புலம்பினார்.

“ஆமாம் இது எப்படி நடந்தது?” என்று அம்மாவிடம் கிரி கேட்டார்.

“நீ வீட்டை விட்டு ஓடிப் போனதில் இருந்து உன் அப்பா மனசு உடைஞ்சு போய் விட்டார். உன்னை தேடி கண்டுபிடிக்கிறேன் என்று போனவர்தான் திரும்பி வரவேயில்லை.

நீங்கள் இருவரும் எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? என்று தெரியாமல் நான்தான் தவித்துக் கொண்டே இருந்தேன்.

நேற்று முன்தினம் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து இவர் சென்னையில் இருந்ததாகவும், ஏதோ கார்க்காரங்க அடிச்சு போட்டுட்டு போய்விட்டதாகவும், அவர் இறந்து விட்டதால் அவர் பாக்கெட்டில் உள்ள அட்ரசை வைத்து இங்கே கொண்டு வந்ததாகவும் சொல்லி விட்டு சென்றார்கள்.” என்றார்.

இப்போது தான் கிரிதரனுக்கு எல்லாமே புரிந்தது. இறுதி சடங்கு முடிந்தது.

கிரிதரன் வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கைபேசியில் பேச, வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.