“ஐயா, ஐயா” என்று வாசலுக்கு வெளியில் நின்று கூப்பிட்டான் சண்முகம்.
“யாரு தம்பி?” என்றபடி வெளியே வந்தார் குமரைய்யா.
“நான் சண்முகம், மேலத்தெரு பரஞ்சோதி மகன்.”
“என்னப்பா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”
“எல்லாரும் நல்லாயிருக்காங்கய்யா.”
“உள்ளே போகலாம் வா” என்றபடி உள்ளே சென்றார். வீட்டிற்குள்ளிருந்த சோபாவில் அமர்ந்தனர்.
“அலமேலு, மோர் கொண்டு வா.”
குமரைய்யாவின் மனைவி இரண்டு டம்ளர்களில் மோர் எடுத்து வந்து இருவரிடம் கொடுத்தாள்.
“நம்ம ஊருக்கு வெளியில காலேஜ் கட்டப் போறாகளாம். உங்க ஐஞ்சேக்கரு காட்டுக்குப் பக்கத்திலதான். அதான் அந்தக்காட விடாம விலைக்கு கேக்குறாங்க. அதப்பத்தி பேசத்தான் நேர்ல வரச் சொன்னேன். ஏக்கரு இருபது லட்சம் கேள்வி இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?” என்றபடி சண்முகத்தை ஏறிட்டார்.
“இல்லங்கைய்யா, அப்பாவுக்கு காட விக்குறதுல விருப்பம் இல்ல. காட சுத்திலும் வேலி போட சொல்லி விட்டுருக்காங்க. வர்ற பங்குனி கோயில் திருவிழாக்கு குடும்பத்தோட இங்க வர்றோமுன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. நான் இன்னும் ரெண்டு நாள் இங்க தங்கி காட்டுக்கு வேலி போட்டுட்டு சென்னை போகலாமுன்னு இருக்கேன்.”
“சரி தம்பி. உங்க விருப்பம் போல செய்யுங்க.”
“நான் அப்ப கிளம்புறேன்.” என்றபடி கைகளை குவித்து வணங்கி விடைபெற்றான் சண்முகம்.
சண்முகத்தை வாயிலுக்கு வந்து வழியனுப்பிவிட்டு திண்ணையில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டார் குமரைய்யா.
மேலத்தெரு சுப்பையா ஓரளவுக்கு வசதி படைத்தவர். சுப்பையாவுக்கு பழனி, முத்து, செந்தூரன், பரஞ்சோதி என நான்கு ஆண் பிள்ளைகள்.
பழனி, முத்து, செந்தூரன் ஆகிய மூவரின் மனைவியரும் உடன் பிறந்த சகோதரிகள்; உள்ளுரைச் சேர்ந்தவர்கள். ஆதலால் மூத்த சகோதரர்கள் மூவரின் குடும்பத்தினரும் ஒற்றுமையாக இருப்பர்.
பரஞ்சோதியின் மனைவி அயலூரைச் சேர்ந்தவள். மேலும் இளைவரான பரஞ்சோதி குடிப்பழக்கம் கொண்டவர். எனவே மூத்த சகோதரர்களின் குடும்பத்தினர்கள் பரஞ்சோதி குடும்பத்தினரை தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை.
சுப்பையா இறந்த பின்பு சொத்துகளை பாகப்பிரிவினை செய்ய சுப்பையாவின் பிள்ளைகள் விரும்பினர். மூத்தவர்கள் மூவரும் ஊருக்குள் இருந்த சொத்துகளை தங்களுள் பிரித்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த ஐந்து ஏக்கர் காட்டை பரஞ்சோதிக்கு கொடுத்து விடுவது என முடிவு எடுத்தனர். தங்களின் முடிவினை ஊரின் நாட்டாமையான குமரைய்யாவிடம் தெரிவித்தனர்.
மூத்த சகோதரர் மூவரின் பங்குகளின் மதிப்பினை ஒப்பிடுகையில் பரஞ்சோதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வானம் பார்த்த பூமியான ஐந்து ஏக்கர் காட்டின் மதிப்பு மிகவும் குறைவு. இது சரியான பாகப்பிரிவினை அல்ல என்று குமரைய்யா வாதிட்டும், இறுதியில் பரஞ்சோதிக்கு ஐந்து ஏக்கர் உதவாத காடு பாகப்பிரிவினையாக வல்லுக்கட்டாயமாக சகோதரர்களால் கொடுக்கப்பட்டது.
உதவாத காடு என்று சகோதரர்களால் வழங்கப்பட்ட பாகப்பிரிவினையை முழுமனதுடன் பரஞ்சோதி ஏற்றுக் கொண்டார். ஈராண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் சென்னைக்கு புலம்பெயர்ந்தார் பரஞ்சோதி.
பழைய இரும்புக்கடை ஆரம்பித்து தொழிலைப் பெருக்கி சகோதரர்களைவிட வசதி படைத்தவராக உருவானார் பரஞ்சோதி.
சொந்த ஊரிலும் வீடு கட்டிய பரஞ்சோதி, தன்னுடைய பங்கான ஐந்து ஏக்கர் காட்டினை அவ்வப்போது ஊருக்கு வந்து பார்த்து விட்டு செல்வார்.
வானம் பார்த்த பூமியானாலும் தன்னுடைய தந்தை அக்காட்டில் மிளகாய், வெங்காயம், எள், பருத்தி போன்றவற்றை பயிர் செய்து வந்ததை எண்ணி பார்த்து மகிழ்வார்.
ஆனால் தற்போது காடு தரிசாகக் கிடக்கிறதே என்பதை பார்க்கையில் அவருக்குள் அழுகை பொங்கும். பரஞ்சோதியின் மன ரணத்திற்கு குமரைய்யாவே தன் பேச்சால் மருந்திடுவார்.
அப்போதுதான் எதிர்பாராதவிதமாக பரஞ்சோதியின் உதவாத காடு அருகே கல்லூரி ஆரம்பிப்பதற்காக அருகில் இருந்த நிலங்கள் வாங்கப்பட்டன.
பரஞ்சோதியின் காட்டினையும் விலைக்கு கேட்டனர். குமரைய்யா காட்டை விலைக்குக் கேட்டவர்களிடம் பரஞ்சோதி காட்டை விற்பதாக இல்லை என்று கூறிவிட்டார்.
பங்குனி மாத கோவில் திருவிழாவிற்கு பரஞ்சோதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். குமரைய்யாவை சந்தித்துப் பேசினார்.
“பரஞ்சோதி, உங்க அண்ணன்மார்கள் அன்னைக்கு உதவாத காடு அப்படின்னு ஒதுக்கின ஐஞ்சேக்கரை இன்னைக்கு என்ன விலைக்கு கேக்குறாங்க பார்த்தியா?”
“எங்கப்பாவோட சேர்ந்து அந்த காட்ல வேளாண்மை செஞ்சத என்னால மறக்க முடியாது. அந்த காட்ல எங்கப்பாவோட மூச்சு கலந்திருக்கிறதாதான் நான் நினைக்கிறேன். அதனால பாகப்பிரிவினைல எனக்கு அது கிடைச்சப்ப என் ஆயுசுக்கும் அத விக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். இப்ப என்ன விலைக்கு கேட்டாலும் பரவாயில்ல. நான் என்னோட முடிவ மாத்திக்கிட மாட்டேன்.”
“நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. குப்பைனு ஒதுக்கினது ஒரு நாள் கோபுரமா மாறும்முன்னு. அது இன்னைக்கு ஐஞ்சேக்கரு விசயத்துல உண்மையாயிருச்சு. உங்க அண்ணன்மாரு சொத்து எல்லாத்தையும் சேர்த்தாலும் இதோட மதிப்புக்கு ஈடாகாது.” என்றபடி பரஞ்சோதியைத் தட்டிக் கொடுத்தார் குமரைய்யா.
Comments
“உதவாத காடு – சிறுகதை” மீது ஒரு மறுமொழி
உறவுகளுக்குள் நடக்கும் பிரிவினைகள், ஏற்றதாழ்வுகள் சமூகத்திற்கான முன்னுதாரணங்கள். அதை கதையின் மூலக் கருத்தாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். உழைப்பால் உயரலாம் மேன்மை அடையலாம் என்பதையும் இக்கதை விளக்குகிறது. மேலும் சிறுகதை கூறிய விதம் அழகாக இருக்கிறது.