ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்ததைப் பார்த்தது.
முதல் மரத்திடம் சென்ற சிட்டுக்குருவி, “மழைக் காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சுகளும் வசிக்க உன் கிளையில் கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?” என்று கேட்டது.
அதைக் கேட்ட மரம் “என் கிளையில் நீங்கள் வசிக்கக் கூடு கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்; உடனடியாக இங்கிருந்து போய்விடு” என்று பதில் சொன்னது.
அதைக் கேட்ட குருவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரண்டாவது மரத்திடம் சென்று அனுமதி கேட்டது.
முதல் மரத்தைப் போல் கோபமாகப் பேசாமல் இரண்டாவது மரம் பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தது.
குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டிக் குஞ்சுகளுடன் வாழ ஆரம்பித்தது. மழைகாலத்தில் தன் குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்க ஒரு நல்ல இடம் கிடைத்த நிம்மதியில் அந்தக் குருவி மகிழ்ச்சியாக இருந்தது.
குருவி எதிர்பார்த்த மழைக் காலம் வந்தது. ஒருநாள் பெரிய மழை பெய்தது. ஆற்றில் பயங்கரமான வெள்ளம் வந்தது. திடீரென முதல் மரம் ஒடிந்து ஆற்றில் விழுந்தது. அந்த மரம் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றில் விழுந்த மரத்தைக் குருவி பார்த்தது. தனக்கு அந்த மரம் உதவவில்லை என்ற கோபம் குருவியிடம் இருந்தது. அந்தக் கோபத்தைக் குருவி கேலியாக வெளிப்படுத்தியது.
தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து, குருவி சிரித்து கொண்டே, “எனக்குக் கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்” என்று கூறியது.
தன் நிலையைப் பார்த்து சிரித்த சிட்டுக்குருவியை அந்த மரம் அமைதியாகப் பார்த்துப் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னது.
“நான் ஒரு வயதான மரம். நான் வலுவிழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன் என்பதும், இந்த மழைக்காலத்தில் நான் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபடுவேன் என்பதும் எனக்குத் தெரியும்.” என்றது.
“என் துயரம் என்னோடு போகட்டும்; நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். என்னை மன்னித்து விடு” என்றது அந்தப் பழைய மரம்.
தன்னிடம் கடுமையான சொற்களைச் சொன்னாலும் எத்தனை உயர்வான மனதை உடையது அந்த மரம் என்பதைக் குருவி உணர்ந்து கொணடது.
தனக்கு உதவி செய்யாத உத்தமன் அந்த மரத்தைக் கண்ணீரோடு வணங்கி வழியனுப்பியது சிட்டுக்குருவி.
கதை சொல்லும் கருத்து
உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள்.
அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!