உத்தாமணி – மருத்துவ பயன்கள்

உத்தாமணி முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்ப காரப் பண்புகளும் கொண்டது. குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தி உண்டாக்கும்; பசியைத் தூண்டும். இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.

கருப்பைக்கான சத்து மருந்தாகவும் கபத்தையும் வாந்தியையும் வெளியே கொண்டு வரும் மருந்தாகவும் இலைகள் பயன்படும் என்பது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தாவரத்தின் பிரதானமான செயல்படும் மூலப்பொருள் “பெர்குலேரியா” மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

5செ.மீ நீளமுடைய, இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிறமான பூங்கொத்துகளையும், மென்மையான முட்களைக் கொண்ட காய்கறிகளையும் உடைய சுற்றிப் படரும் கொடியினம்.

காய்கள், இரட்டையான தொகுப்புடன் வளைந்து 7 செமீ வரை நீளமாகக் காணப்படும். மேற்பகுதியில் சாம்பல் நிறமான வலிமையற்ற முட்களுடன் கூடியது. காய்களின் உள்ளிருக்கும் முட்டை வடிவமான விதைகளில் பட்டு போன்ற பஞ்சிழைகள் அடுக்கப்பட்டிருக்கும்.

தென்னிந்தியா முழுவதும் இயல்பாக வளர்கின்றது. தமிழகமெங்கும் ஏறுகொடிகளாக வேலிகளில் படர்கின்றது. தாவரத்தைக் கிள்ளினால் பால் வடியும். வேலிப்பருத்தி, உத்தம கன்னிகை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், செரியாமை தீர பசுமையான 3 உத்தாமணி இலைகளைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, இலேசாக நசுக்கி 100மிலி தண்ணீரில் இட்டு காய்ச்சி 25 மிலி அளவாக குடிநீராக செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு வசம்பைச் சுட்டு கரியாகிக் கொண்டு, 2 அரிசி எடை அளவு கரியை 25 மிலி உத்தாமணிக் குடிநீருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை குழந்தைகளுக்கு 5 மிலி அளவு காலை, மாலை இரண்டு வேளைகள் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாக உத்தாமணி இலையின் குடிநீரை, 20 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

வீக்கம் குறைய உத்தாமணி இலைச் சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம்.

மூட்டுவலி கட்டுப்பட உத்தாமணி இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.