உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும்.
இப்பாசுரம் திருப்பாவையில் பரந்தாமனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக இருமுறை ஓதப்படுகிறது.
நப்பினையாகிய திருமகளை எழுப்பும் பாடல் இது. திருமகளை வணங்கியே திருமாலிடம் செல்ல வேண்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.
திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே, நப்பினாய்
கந்தம் கமழங் குழலீ கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
மதம் நிறைந்த யானைகளை செலுத்தும் தோள் வலிமை பெற்றவரும், புறமுதுகிட்டு ஓடிவராத தோள் வலிமை உடையவருமான நந்தகோபரின் மருமகளாகிய திருமகளே,
நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே,
வந்து வாயிற் கதவினைத் திறப்பாயாக.
பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக சேவல் கோழிகள் கூவிக் கொண்டிருக்கின்றன.
குருக்கத்தி மலர்ப்பந்தலில் குயில்கள் காலையில் எழுந்து கூவுகின்றன. உன்னுடைய காதில் விழவில்லையா?

உன் கணவனான கண்ணனுடன் பந்து விளையாடிய பின்னும் பந்தினைப் பிடித்தபடி உறங்குபவளே,
உனது கணவனான கண்ணனின் திருப்பெயர்களை நாங்கள் எழுந்து பாடிக் கொண்டிருக்கிறோம்.
நீயும் எங்களுடன் சேர்ந்து கண்ணின் புகழினைப் பாட, அழகிய தாமரை மலர்போன்ற கைகளில் உள்ள வளையல்கள் ஒலிசெய்ய நடந்து வந்து, மகிழ்ச்சியுடன் வாயில் கதவினைத் திறக்கவேண்டும். அதனால் எங்கள் மனம் மகிழ வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!