உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது.

கட்டிலில் தொப்பென்று விழுந்து பெருமூச்சு விட்டான்.

முதல்முறை என்பதால் உடல் நடுங்கியது. கண்களை மூடி முன்பு நடந்த நிகழ்வுகளை நினைக்கத் தொடங்கினான்.

குமாரின் அப்பா கம்பீரமானவர். கண்டிப்புடன் மகனை வளர்ப்பவர். ஹிட்லர் போல் இருக்கிறார் என மற்றவர்களிடம் கூறி குமார் வருந்துபவன்.

அன்று காலை அடுப்பங்கரையில அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டு “கல்லூரியில் சுற்றுலா போறாங்கம்மா, ஐந்நூறு ரூபாய் பணம் வேணும்மா” என்றான்.

வெள்ளைக் காளான் போல் சிறுசிறு வட்டமாக உள்ள இட்லிகளைச் சுடச்சுட துணியிலிருந்து எடுத்தாள் அம்மா.

“என்ட்ட பணம் இல்லப்பா. ஒங்க அப்பாகிட்ட கேட்டுக்க.”

“நான் பணம் கேட்டு அவர்ட்ட திட்டு வாங்கனுமா?”

“சரி சரி, நான் அப்பாகிட்ட கேட்டு வாங்கித் தாரேன்.”

வராண்டாவில் குமாரின் தந்தை இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீ முதல்ல சாப்பிடு” என்றார் அம்மா.

கடப்பா கல்லில் அரைத்த சிவப்பு நிற சட்னியுடன், ஆவி பறக்க தட்டில் இருந்த இட்லிகள் குமாரின் கையில் தவழ்ந்து, வாயில் நுழைந்தன.

குமார் அம்மாமேல் நம்பிக்கையின்றிதான் கல்லூரிக்குச் சென்றான்.

கல்லூரியில் குமாரின் நண்பன் ராஜா “என்னடா, வீட்ல சுற்றுலாவுக்கு பணம் வாங்கிட்டியா?” என்று கேட்டான்.

“இல்லடா; எங்க அம்மாகிட்ட கேட்டேன். அவங்க அப்பாகிட்ட கேட்க சொன்னாங்க. அவருகிட்ட கேட்கிறதுக்கு சுற்றுலா போகாம இருக்கலாம்.”

“நான் ஒரு யோசனை சொல்றேன். வீட்ல கேட்டா நடக்காது. அப்பா சட்டை பையிலிருந்து தெரியாம எடுத்துடு.”

குமார் முதலில் மறுத்தான். பிறகு சரி என முடிவெடுத்தான். கல்லூரி முடிந்ததும் சாயங்காலம் வீட்டுக்குச் சென்றான்.

‘இந்த செயலை செய்யலாமா? வேணாமா?’ என குமாரின் மனம் குழம்பியது. இறுதியில் அவன் முடிவு மாறவில்லை. அசட்டுத் தைரியத்தோடு களத்தில் இறங்கினான்.

நிகழ்வுகளை நினைத்துப் பார்த்த குமார் தூங்குவதற்கு முயற்சி செய்தான். தூக்கம் வரவில்லை. தூங்காமல் கண்களை மூடி படுத்திருந்தான்.

உன்னத உறவு

விடியற்காலைக்கு முன்பு குமாரின் அறை கதவை மெதுவாகத் திறந்து அவன் அப்பா உள்ளே வந்தார். தூக்கம் வராமல் படுத்திருந்த குமார், ஒரு கண்ணை மட்டும் லேசாக திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய கைகடிகாரத்திற்கு பக்கத்தில் எதையோ வைத்துவிட்டு, அங்கிருந்து உடனே சென்றார்.

குமார் என்னவென்று பார்த்தான். ஒரு ஐந்நூறு ரூபாய் பணம் அங்கே இருந்தது. அந்த பணம் குமாரின் கண்களால் ஈரமானது.

அப்பா நடைபயிற்சிக்கு சென்ற நேரத்தில், அவன் எடுத்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அப்பாவின் சட்டை பையில் திரும்ப வைத்தான்.

‘எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்’ என குமாரின் மனம் குமுறியது.

‘இது போன்ற செயலை இனி செய்யவே கூடாது’ என முடிவெடுத்து திருந்தினான்.

கல்லூரிக்கு புறப்பட்ட குமார் அப்பாவிடம் “போய்ட்டு வரம்பா” என கூறினான்.

முதல்நாள் வரை குமார் அப்பாவிடம் அப்படி கூறியதில்லை.

“பத்திரமா போய்ட்டு வா” என்றார் அப்பா.

கல்லூரிக்குச் சென்றதும் நடந்ததை ராஜாவிடம் கூறினான்.

“நீ குடுத்து வைத்தவன். அருமையான அப்பாவா இருக்காரு.”

“எல்லா அப்பாவும் அருமையான அப்பாதான், பிள்ளைங்கதான் புரிஞ்சிக்கிறதில்ல.”

ராஜாவும் சிந்தித்தான்.

அப்பா பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்ப்பதால் அக்கறை இல்லை என அர்த்தமில்லை; நம் நன்மைக்குத்தான் என குமாரும், ராஜாவும் புரிந்து கொண்டனர்.

உன்னத உறவு என்றால் அப்பா என அறிந்தனர் இருவரும்.

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.