ஒரு வகுப்பறையில் மாணவர்கள் ஒருத்தர் ஒருத்தருடன் பேசிக்கொண்டு சந்தைக் கடை வீதி போல சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பக்கத்து வகுப்பறை ஆசிரியருக்கு அது வெகுவான கோபத்தினை ஏற்படுத்தியது. இந்த வகுப்பறைக்குள் வந்த அவர் மாணவர்களைக் கடிந்து கொண்டார். மேலும் இந்த மாணவர்களின் கணித ஆசிரியர்தான் அவர்.
மாணவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மாணவர்களிடம் “அமைதி! அமைதி! இங்கே பாருங்கள். நான் உங்களுக்கு ஒரு கூட்டல் கணக்கு தருகிறேன். அமைதியாக அதனைச் செய்து விடையினை பக்கத்து அறையில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து காட்ட வேண்டும்” எனக் கூறி ஒரு கூட்டல் கணக்கினை மாணவர்களிடம் அறிவித்தார்.
“ஒன்று முதல் நூறு வரை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பு என்ன? என்பதனைக் கண்டுபிடிக்கவும்” என்ற கேள்வியினை அவர் மாணவர்களிடம் கேட்டார்.
மாணவர்கள் அனைவரும் கவனத்துடன் கணக்கினைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். வகுப்பு அமைதியாகி விட்டது.
அவரது எண்ணம் இந்தக் கணக்கின் விடையினை 6ம் வகுப்பு படிக்கும் அவர்கள் கண்டு பிடிக்க குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஆகும். அதுவரை மாணவர்கள் அமைதியாக இந்தக் கணக்கினைச் செய்து கொண்டு இருப்பார்கள் என்பதுவாகும்.
ஆனால் அவர் கணக்கினைச் சொல்லிவிட்டு அவரது வகுப்பறைக்குச் செல்லும் முன்னரே ஒரு மாணவன் எழுந்து, “சார்! நான் விடை கண்டு பிடித்து விட்டேன்” என்றான்.
உடனே ஆசிரியர், “என்னடா! அதற்குள்ளாகவா விடையினைக் கண்டு கொண்டாய்! எங்கே விடையினைச் சொல்?” என்றார்.
மாணவன் சட்டென்று “5050” என்றான்.
ஆசிரியருக்கு ஆச்சரியமாகிவிட்டது.
இப்போது 1 முதல் 100 வரைக் கூட்டி மாணவன் சொன்ன அந்த விடை சரிதானா? என்று கண்டுபிடிக்க அவருக்கே சற்று நேரம் பிடிக்கும் என்று தெரிந்த அவர்,
கொஞ்சம் கடினமான குரலில் “எங்கே? எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று விளக்கமாகக் கூறு பார்க்கலாம்” என்றாராம்.
உடனே அந்த மாணவன், “சார் 1 முதல் 100 வரை கூட்டச் சொன்னீர்கள்.
1+100 = 101
2+99 = 101
3+98 = 101 …
இது போல 1 முதல் 100 வரை 50 முறை 101 வரும். எனவே விடை 50 x 101 = 5050″ என்று சரியாகக் கூறினானாம்.
அந்த விளையும் பயிராகிய உன்னத மாணவன் வேறு யாருமல்ல. எண்ம விதிகள், வடிவவியல், நிகழ்தகவு, வானியல் மற்றும் மின்காந்தவியல் தத்துவங்களின் மேதை எனப் பன்முகத்திறமை கொண்ட ஜெர்மன் நாட்டின் கார்ல் பிரெட்ரிக் காஸ் அவர்கள்தான்.
மின்னல் வேகத்தில் கூட்டல் கணக்கினை செய்யும் அசாத்தியத் திறமை கொண்ட பிறவிமேதையாகிய காஸ் அவர்கள் வாழ்ந்த காலம் 1777 முதல் 1855 வரையாகும்.
கணிதவியலிலும், வானியலிலும் மற்றும் இயற்பியலிலும் திறமை கொண்ட இந்த அதிசய மனிதர்தான் காந்தமானியையும் கண்டறிந்தார். அவரைப் போற்றும் வண்ணம் இன்றும் நாம் மின்காந்தத்தின் செறிவை காஸ் எனும் அலகின் மூலம் தான் அளக்கின்றோம்.
வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு. மாணவர்கள் மத்தியில் நல்ல திறமையுள்ள ஆசிரியருக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது அதனை அனுபவித்த ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.
படி! படி! என்று திரும்பத் திரும்ப சொல்லும் போதே நீங்கள் ஒரு ஆசிரியர்தான் என்று எங்களுத் தெரியும்.
சரி சார்! நீங்க ஒரு ஆசிரியர், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார்? என்று எங்களுக்கு நீங்க சொல்லுங்க! என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
இப்படித்தான் சுஃபி இயக்கத்தில் ஹசன் என்று ஒரு குரு இருந்தார். அவரது சீடர்களிடம் அவருக்கு அதீத மரியாதை இருந்தது. தினசரி அவர் சீடர்களைச் சந்தித்து ஆசியுரை வழங்குவது வழக்கம்.
அப்போது குருவிடம் ஒரு சீடர் “குருவே இவ்வளவு விஷயங்கள் எங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்து சிறந்த குருவாகச் இருக்கின்றீர்கள். உங்களுக்கு குரு யார்?” என்று கேட்டாராம்.
அதற்கு ஹசன், “பொறுமையாக இருங்கள். நான் நேரம் வரும் போது உங்கள் கேள்விக்கு பதில் சொல்கின்றேன்” என்றாராம்.
அதுபோல நானும் உங்களுக்கு அடுத்த வாரம் சொல்லட்டுமா?
( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
முந்தையது விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!