உப்பு நதி பற்றி தெரியுமா? என்ற கேள்வி உங்களை ஆச்சர்யப்படுத்துகிறதா?
உண்மையில் உப்பு நதி இந்தியாவில் இருக்கிறது. கூடுதல் தகவல் அது தார் பாலைவனத்தின் மிகப்பெரிய நதி. அதனுடைய பெயர் லூனி என்பதாகும்.
பொதுவாக ஆறுகள் நன்னீரினைக் கொண்டு இறுதியில் கடலிலோ, மற்ற பெரிய ஆறுகளிலோ சென்று கலக்கும். ஆனால் இந்நதி வித்தியாசமாக உப்பு நீரினைக் கொண்டு இறுதியில் சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் நாகா மலையில், மேற்குச் சரிவில் சுமார் 772 மீட்டர் உயரத்தில் லூனி உற்பத்தியாகிறது. இது ராஜஸ்தானின் மலை மற்றும் சமவெளிப் பகுதியைக் கடந்து குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் என்ற இடத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.
லூனி உற்பத்தியாகும் இடத்தில் சபர்மதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உற்பத்தி இடத்தில் இருந்து பயணிக்கும் சபர்மதி கோவிந்தகார்க்கை கடந்த பின்பு சர்சுதி என்ற துணை ஆற்றினைச் சந்திக்கிறது. அதன் பின்பே இது லூனி என்று அழைக்கப்படுகிறது.
இந்நதியின் நீளம் சுமார் 495 கிமீ. இதனுடைய வடிநிலப்பரப்பு 37,363 சதுர கிமீ ஆகும். இந்நதியின் வடிநிலப்பரப்பு ராஜஸ்தானின் அஜ்மீர், பார்மர், ஜொலூர், ஜோத்பூர், நாகௌர், பாலி, சிரோஹி மாவட்டங்களையும், குஜராத்தின் பானாஸ்காந்தா, படன் மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
லூனி உற்பத்தியான இடத்திலிருந்து முதல் நூறு கிமீ வரை, நன்னீரையே கொண்டுள்ளது.
பார்மர் மாவட்டத்தில் உள்ள பல்தோரா என்ற இடத்தினை அடையும் போது, இந்நதி நீர் உப்பாக மாறுகிறது. காரணம் அவ்விடத்தில் உள்ள மண்ணின் அதிகப்படியான உப்புத்தன்மை நதி நீரில் கலந்து, அதனை உப்பாக மாற்றுவதே ஆகும்.
உப்பு நதியாக இருந்தாலும் இந்நதி, ராஜஸ்தான் வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுக்ரி, பண்டி, ஜவாய், சாகி உள்ளிட்ட 10 துணை நதிகள் லூனிக்கு நீர்வளத்தைக் கொடுக்கின்றன.
கோதுமை, தினை மற்றும் பருவகால பயிர்கள் இந்நதி நீரினைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன.
இந்நதி லவனரவி, லவனவதி என்றும் அழைக்கப்படுகிறது. லூனி என்பதற்கு சமஸ்கிருதத்தில் உப்பு நதி என்பது பொருளாகும்.
இந்திய நதிகள் வங்காள விரிகுடாவிலோ, அரபிக்கடலிலோ அல்லது பெரிய ஆறுகளிலோ கலக்கின்றன. ஆனால் லூனி எந்தக்கடலிலும் கலப்பதில்லை.
இந்நதி கடலில் வரை சென்று கலக்காததற்கு சில காரணங்கள் உள்ளன. இதனுடைய பெரும்பான்மையான பயணம் ராஜஸ்தானின் பாலைவன மணல் பகுதிகளிலேயே நிகழ்கிறது.
இதனால் ஓட்டத்தில் இது ஆழமான நதியாக மாறாமல் கரைகளை அரித்து, பரப்பில் விரிந்து பரந்து மேலோட்டமாகவே பயணிக்கிறது.
அத்தோடு அது பயணிக்கும் பகுதி குறைந்த மழைப்பொழிவும், அதிக வெப்பநிலையையும் கொண்டது. போதுமான தண்ணீர் கிடைக்காமல் இந்நதி கோடையில் வறண்டு பருவகால நதியாகவே திகழ்கிறது.
ஜோத்பூர் மாவட்டத்தில் பிலாராவுக்கு அருகிலுள்ள பிச்சியாக் நகரில் உள்ள ஜஸ்வந்த் சாகர் அணை லூனி ஆற்றின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. இந்த அணையைச் சுற்றியுள்ள ஏரி இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும்.
பார்மர் மாவட்டத்தில் உள்ள பல்தோரா இடத்தில், பருவமழைக் காலத்தில் அதிகபட்ச மழையைப் பெற்று முழு ஓட்டத்தில் இருக்கும் லூனி நதியைப் பார்வையிடலாம்.