உப்பைப் போல் உடன் வருவாய்…

புழல் சிறை வாசலில் எல்லோரும் ஹேமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் அந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் இல்லை, கத்தி போல் புருவம், பெரிய அகண்ட கண்கள், தரை தட்டும் தலைமுடி , மேக்கப் ஏதும் போடாமலேயே ஒரு நாட்டியக்காரி போல் இருந்தாள்.

ஹேமாவுக்கு இது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. பெரும் குழப்பத்திலும், பயத்திலும் மன உளைச்சலில் நின்று கொண்டிருந்தாள். ஏதேதோ சிந்தனைகள் ஓடின.

சிறையில் இருக்கும் அப்பாவை பார்க்க மனு போட்டு அனுமதியும் வாங்கி போட்டோ கொண்டுவர மறந்து வந்து விட்டாள்; உள்ளேவிட மறுக்கிறார்கள்.

சாரங்கனிடம் போன் பண்ணி சொல்ல, அவன் அதை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான்.

சாரங்கனிடம் இவளுடைய போட்டோ மற்றும் எல்லா பெர்சனல் டாக்குமெண்ட்களும் இருக்கிறன.

சாரங்கனிடம் எந்த உதவியும் கேட்க வேண்டாம் என்றுதான் அவள் எப்போதும் நினைப்பாள். ஆனால் அவனின்றி ஒரு அணுவும் இவளுக்கு அசைவதில்லை.

சாரங்கன் சொன்னது தான் தாமதம் உடனே கிளம்பி விட்டான். சாரங்கன் எப்போதும் இப்படிதான், ஒருநாள் கூட ஹேமா சொன்னதை தட்டியதில்லை.

‘எப்படித்தான் அவனால் முடிகிறதோ? அவன் வேலை, விருப்பு, வெறுப்பு இதையெல்லாம் புறந்தள்ளி நமக்காக வருகிறான்’ என்று சாராங்கனை நினைத்து வருந்தினாள்.

அதைவிட 2 மாதமாய் சிறையில் வாடும் எந்த தவறும் செய்யாத அப்பாவை நினைத்தால் மனதே வெடித்து விடும் போல் இருந்தது ஹேமாவிற்கு.

ஹேமாவின் அப்பா குலோத்துங்கன் ஒரு பொதுத்துறை வங்கியின் மேலாளர்.

அப்போது இருந்த நிதி மந்திரி, வங்கியின் தலைமை இயக்குனர் சொன்னதற்கு ஏற்ப தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து தனியார் ஒருவருக்கு 50 கோடி கடன் பத்திரத்தில் குலோத்துங்கன் கையெழுத்து போட்டதற்குதான் இந்தச் சிறை.

கடன் வாங்கியவர் நாட்டை விட்டு தப்பித்து போய்விட்டார் கடன் கொடுக்கும் போது இருந்த ஆளுங்கட்சி இப்போது எதிர்க்கட்சியாக மாறிவிட்டது

புதிதாய் வந்த அரசு இந்த வழக்கை பழி வாங்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறது. பலிகடாவாக ஹேமாவின் அப்பா மாட்டிக் கொண்டார்.

வங்கியின் அந்த தலைமை இயக்குனரும் டெல்லி திகார் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்

பெரிய வக்கீல்கள் யாரும் இந்த வழக்கை எடுக்க அஞ்சுகிறார்கள். இரண்டு முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.மூன்றாவது முறையாக அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வருகிறது

குலோத்துங்கனை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அப்புருவராக மாறச் சொல்கிறார்கள், முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்க போலீஸ் முயற்சி செய்கிறது

ஹேமா மிக உறுதியானவள்,

அப்பாவும் அப்பாவால் அறிமுகபடுத்தப்பட்ட பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தங்கங்களும் அவளை சாதாரண கெக்கே பெக்கே பெண்ணாக இல்லாமல் நெருப்பு போல் மாற்றி வைத்திருக்கிறது.

ஆனால் இப்போது வந்திருக்கும் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அல்லாடுகிறாள். நேர்மையற்ற உலகை கையாள முடியாமல் தவிக்கிறாள் .

எப்படியாவது அப்பாவை வீட்டுக்கு கொண்டு வந்து விடவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை தவிர வேற எதுவும் இவளுக்கு பிடிபடவில்லை

அப்பாவின் சிறை அம்மாவின் மன, உடல் நிலையை வெகுவாக பாதித்து விட்டது. அம்மா பித்து பிடித்தவள் போல் ஆகிவிட்டாள்.

சாரங்கன் ஹேமா போட்டோவை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் அவசர அவசரமாக சிறைக்குள் ஓடினாள்

அப்பாவை பார்த்ததும் அழுகை வந்துவிட்டது, குலோத்துங்கன் மகளைத் தேற்றினார்.

“நீங்கள் அப்ரூவராக மாறிவிடுங்கள் அப்பா! ஜாமீன் கிடைத்துவிடும்!” என்று ஹேமா கேட்டதை அவர் ஒத்துக் கொள்ளவில்லை .

“செய்யாத தவற்றை ஒத்துக்கொண்டு, மற்றவர்களையும் சிக்க வைத்து இது பெரிய அழிவு செயல், எது நடந்தாலும் பரவாயில்லை நாம் சட்ட போராட்டம் நடத்துவோம், நானே வாதாடுகிறேன். வக்கீல் வேண்டாம்” என்று உறுதியாக சொல்லிவிட்டார். அப்பா சொன்னால் சொன்னது தான் .

ஹேமாவுக்கு தெரியும் அப்பா எந்த குறுக்கு வழியும் போகமாட்டார் அம்மாவின் உடல் நிலை கருதி எதுவும் செய்வார் என்ற ஆசையில் கேட்டு பார்த்தாள்.

இந்தப் போரில் நானோ, அம்மாவோ இறந்தாலும் பரவாயில்லை ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார். “நீ அம்மாவை அடுத்த முறை மனுப்போட்டு இங்கு கூட்டி வா! நான் பேசுகிறேன்” என்றார்.

அப்பாவுக்குச் சிறை பழகிவிட்டது. உடல் சோர்வு காணப்பட்டாலும் மனத்தளவில் ஸ்ட்ராங் ஆக இருந்தார். ஹேமாவுக்குத்தான் அப்பாவை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது.

அப்பா சொல்வது போல் போர் தொடரட்டும். அப்பா இப்போதைக்கு சிறையிலிருந்து வெளியில் வர முடியாது, அடுத்து அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

அதற்குமுன் அம்மா நியூஸ் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அப்பாவை ஏதோ வடமாநில கொள்ளைகாரர்கள் போல் சித்தரித்து செய்தி போடுகிறார்கள்.

வெளியில் சாரங்கன் நின்று கொண்டிருந்தான். எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது.

சாரங்கனுக்கு என்ன தீர்வு?

ஹேமாவும் சாரங்கனும் ரயில்வே எக்ஸாம் எழுதி புக்கிங் கிளெர்க்காக ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். பக்கத்து சீட், பணியிடத்து துணை. அங்குதான் இவர்கள் பழக ஆரம்பித்தார்கள்.

தன் அப்பாவைத் தவிர எந்த ஆண்மகனையும் பிடிக்காத ஹேமாவிற்கு சாராங்கனை உடனே பிடித்து விட்டது.

சாரங்கனுக்கு ஹேமாவைவிட 3 வயது குறைவு. உடலளவிலும் அவன் ஹேமாவை விட மெலிந்தும் உயரம் கம்மியாகவும் இருந்தான்.

ஹேமாவுக்கு கூட பிறந்தவர்கள், பெரிய நட்பு வட்டம் என்று யாருமில்லை. சாராங்கனை ஒரு தம்பியாகவே நினைத்தாள். “சாரா, சாரா” என்று உருகினாள்.

வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனாள், வெளியில் போனாலும் சாரங்கன்தான். தன் மாதவிடாய் பிரச்சினை முதல் மாதாந்திர சிலவுகள் வரை எல்லா விஷயங்களையம் அவனிடம் பகிர்ந்தாள்.

சாராங்கனைப்போல் எல்லாம் புரிந்த, அன்பை மட்டும் பிரதானமாக கொண்ட ஒருகணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

ஆனால் சாரங்கன் ஹேமாவையே திருமணம் செய்ய ஆசைபடுகிறான்.

இந்த 5 வருட பழக்கத்தில் ஹேமாவை தவிர வேறு எந்த உலகமும் அவனுக்கு தெரியவில்லை.

வயது மூப்பு, உருவ பொருத்தமின்மை எதுவும் அவன் முன் இல்லை. பித்தாகி நிற்கிறான் ஹேமாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மறுக்கிறான் .

சாரங்கன் வீட்டில் ஹேமாவை திட்டி தீர்க்கிறார்கள், தன் மகனை மயக்கி குழப்பி வைத்திருக்கிறாள். தானும் திருமணம் செய்ய மாட்டாளாம், அவனை வேறு யாரையும் திருமணம் செய்யவும் சொல்ல மாட்டாளாம், தன் அழகால் மயக்கி அடிமைபோல் வைத்திருக்கிறாள் என்று சங்கரனின் அம்மா ஹேமா வீடு வரை வந்து கலாட்டா செய்து பெரிய பிரச்சினையையாகிக் கிடக்கிறது

ஹேமா பலநூறு முறை சொல்லிவிட்டால் “சாரங்கா! நீ வேறு பெண்ணை திருமணம் செய்துகொள். மத்திய அரசு உத்தியோகம். நல்ல பெண் கிடைப்பாள். எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கிறது.

என் அப்பாவை போல் நிதானமும் அன்பும் கொண்ட உன்னை என்னால் மறக்க முடியாது. உன் நட்பு வேண்டும். உன் வயது, உயரம் எதுவும் எனக்குத் தடையில்லை.

அது என்னவோ உன்னை திருமணம் செய்துகொண்டு குடித்தம் பண்ண எனக்கு இஷ்டமில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. உன் மீது பெருங்காதல் இருக்கிறது.

ஐ நீட் யூ , ஐ லவ் யு, ஐ மிஸ் யூ , அனால் திருமணம் செய்யும் எண்ணமில்லை . இது புது வியாதி , தயவு செய்து புரிந்து கொள்” ஹேமா நிறைய முறை மன்றாடியும் அவன் கேட்பதாயில்லை.

“நான் திருமணம் செய்யாமல் அப்படியே இருந்து விடுகிறேன்!” என்று ஒற்றை பதிலில் நின்று விடுகிறான்.
ஆனால் இனியும் இது தொடரக் கூடாது

ஹேமா அப்பா சிறைக்கு போனதில் சாரங்கன் குடும்பத்தினர் செம கடுப்பில் இருக்கிறார்கள். ‘பிராடு குடும்பம்‘ என வெளிப்படையாகவே பேசுகின்றார்கள்.

“என் பிள்ளை வாழ்க்கையை கெடுத்ததால் தான் இப்படி!” என சாரங்கன் அம்மா புலம்பி தீர்க்கிறாள்.

‘எப்படியாவது சாராங்கனை விடுவிக்க வேண்டும்’ என ஹேமா யோசிக்கலாயினாள்.

‘என்ன செய்தால் அவன் நம்மை விட்டு விலகுவான்? அப்பன் சிறையில், அம்மா நோயில் நான் இப்போது வேறு யாரையும் திருமணமும் செய்து கொள்ள முடியாது.’

ஹேமா சாரங்கனின் மனசாட்சியாய் சீண்ட திட்டம் போட்டாள்.

‘முக்கியமான விஷயம் பேச வேண்டும்’ என அவனை ரெயில்வே கெஸ்ட் ஹௌஸ்க்கு வரச் சொன்னாள்.

சாரங்கன் ஹேமா அப்பாவை ஜாமினில் எடுக்கும் விஷயமாக இருக்கும் என நினைத்து ஓடி வந்தான்.

“என்ன ஹேமா ஏதும் பணம் தேவைப்படுகிறதா?” என பதைபதைப்புடன் கேட்டான் .

“இல்லை சாரா, அப்பா சிறையில்; அம்மா நோயில். இதுதான் சரியான தருணம் நாம் இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருக்கலாம். நீ எனக்கு செய்த உதவிகளுக்கெல்லாம் எது கொடுத்தாலும் தகாது.

நான் என்னையே தர முடிவு எடுத்து விட்டேன், நீ சொல்வது போல் உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.

உன் குடும்பத்தை பகைத்துக் கொண்டு ஒரு முதிர் கன்னியை நீ திருமணம் செய்வதும் அபத்தம், அதே சமயம் உனக்கு என் உடல்தான் தேவை; என் அழகு இஷ்டம் என்பதால் தயவு செய்து என்னை எடுத்துக் கொள்!” என்று அவனை இழுத்தாள் .

“ஹேமா உனக்கு பயித்தியம் பிடித்து விட்டதா?” சாரங்கன் திமிறி எழுந்தான்

“சுய நினைவுடன்தான் இருக்கிறாயா? இப்போதுள்ள உன் குடும்ப சூழ்நிலையை நினைத்தால் எனக்கே தூக்கம் வர மறுக்கின்றது! இப்படி பேச உனக்கு எப்படி மனது வந்தது

உன் நீண்ட முடியோ, அழகோ எனக்கு தூசுக்கு சமம். உன் புத்தியிலும் அன்பிலும் தான் நான் கட்டுண்டு கிடக்கிறேன். இது என்ன திடீரென்று உனக்கு ஈன புத்தி?

இத்தனை வருட பழக்கத்தில் இதுதான் நீ என்னை புரிந்துகொண்ட லச்சணமா? ஜெயகாந்தன் பாலகுமாரன் படித்தெல்லாம் வேஸ்ட்!” சாரங்கன் பொரிந்து தள்ளினான் .

“பிளான் சக்சஸ்!” ஹேமா உள்ளுக்குள் மகிழ்ந்தாள்

“இல்லை சாரா, எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீயும் வீட்டில் சொல்வது போல் திருமணம் செய்ய மறுக்கிறாய், நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அட்லீஸ்ட் இதாவது நடக்கட்டும் என்று தான். நீ ஒன்றும் கவலைப்படாதே வா! நான் பாத்துக் கொள்கிறேன்!” என்று மறுபடியும் அவனிடம் நெருங்கினாள்.

சாரங்கன் அவளையே உற்று பார்த்தான். அலங்கரிக்க படாத அங்காளம்மன் சிலைபோல் இருந்தாள். காதலோ காமமோ எதுவுமற்ற கல் போல் இருந்தது அவள் முகம்.

சாரங்கன் புரிந்து கொண்டு விட்டான். ‘இவள் நாடகம் போடுகிறாள். என்னைச் சீண்டி மடை மாற்ற முயற்சி செய்கிறாள்.’ ஹேமாவை பார்த்து சாரங்கன் சிரித்தான்.

“சாரா! என் நிலைமையைப் பார்த்தாயா?

என் இனிய நண்பனே!

அன்பு தம்பியே! தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக் கொள்.

இப்போதுள்ள சூழலில் என் அப்பா திருட்டு பழி சுமக்கிறார், எனக்கு வேறு எந்த பழியும் சுமக்க தெம்பு இல்லை. எனக்காக எவ்வளோவோ உதவிகள் செய்திருக்கிறாய். இந்த உதவியும் செய், ப்ளீஸ் சாரா!” என அவன் காலில் சாஸ்ட்ங்கமாக வீழ்ந்தாள் .

சாரங்கன் அவளை தூக்கி நிறுத்தினான். முகமெல்லாம் கண்ணீர். “சரி!” என்று ஒத்துக்கொண்டான்
ஹேமா பெருங்குரலெடுத்து அழுதாள்.,

“ஆனால் சாரா என்னை விட்டு ஒரேயடியாக போய்விடாதே! அதே சமயம் நாம் ஈஷிக்கொண்டும் இருக்க முடியாது. புதிதாக வருபவளின் புரிதல் எப்படியிருக்குமோ தெரியாது.

உணவில் இருக்கும் உப்பைப் போல் அதிகமும் குறைவுமில்லாமல் நம் பழக்கம் இருக்க வேண்டும். அணுகாது அகலாது தீக்காய்வார் போல் உன் துணை எனக்கு வேண்டும் சாரா!”

ஹேமா கேட்ட எதற்கு இல்லையென்று சொல்லியிருக்கிறான் சாரங்கன், எல்லாவற்றுக்கும் சரியென்றான்
சாரங்கன்; வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.

காலம் உருண்டோடியது,

ஹேமா தனியாளாய் போரை முன்னின்று நடத்தினாள். ஹேமா அப்பா நிரபராதி என நிரூபித்து சிறையிலிருந்து மீள 11 வருடம் ஆகிவிட்டது.

அப்பா சிறையில் இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டாள். அப்பா பரோலில் வந்து கொள்ளி போட்டார். ஹேமா திருமணமே செய்து கொள்ளவில்லை.

பின்னாளில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த ஆண் – பெண் நட்பு பற்றிய விவாதத்தில் ஹேமா -சாரங்கன் இருவரையும் பேச கூப்பிட்டார்கள். மறக்க முடியாத நிகழ்வு ஒன்றைக் கேட்டார்கள்

சாரங்கன் தன் குழந்தைக்கு எவ்வளவோ சொல்லியும் கேளாமல், குலதெய்வ கோயிலில் செய்ய வேண்டிய காது குத்தும் விழாவை ஹேமாதான் என் குல தெய்வம் என்று சொல்லி, ஹேமா வீட்டில், ஹேமாவை அம்மன் போல் நடுவில் உட்காரவைத்து அவள் முன்னிலையில் தாய் மாமன் மடியில் வைத்து, காது குத்தியது,

குழந்தையைவிட ஹேமா அதிகம் அழுதது, விழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் அழுதது” என ஹேமா அழுது கொண்டே சொல்ல சொல்ல ஷோவில் கலந்து கொண்டவர்கள், டிவியில் பார்த்தவர்கள் எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

Comments

“உப்பைப் போல் உடன் வருவாய்…” மீது ஒரு மறுமொழி

  1. கவின் ராஜ்

    அகநக நட்பது தானே நட்பு; உண்மையான நட்பு; தெய்வீகமான நட்பு. அதற்கு வயது தெரியாது; பாலினம் தெரியாது; உருவம் தெரியாது; இனம், மொழி, மதம் எதுவும் தெரியாது.

    இன்றளவும் ஆண் பெண் நட்பு சரி வராது என்று சொல்லும் உலகில், நட்பின் மிகப் பரிசுத்தமான ஆழத்தையும் எதிர்பார்ப்பற்ற தன்மையையும் எழுத்து வடிவில் கோர்த்து இருக்கிறார் ஆசிரியர்.

    இதனைத் தவிர சிறைவாழ்வினால் பாதிக்கப்படும் குடும்பம், நேர்மை, வைராக்கியம், இலக்கியம் போன்ற பல உட்கருத்துக்களை தன் இயல்பான சிறுகதை உத்தி மூலம் உப்பை போலவே தூவி இருக்கிறார்.

    இதனைப் போல் வாய்க்கால் அணையார் தொடர்பு (நாலடியார்) போன்ற நட்பின் மகத்துவம் அறிந்தவர்கள் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை (மூதுரை)…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.