உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.
கையிலாயத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.
“கேள்” என்றார் சிவபெருமான்.
அம்மை ஆரம்பித்தார்.
“கங்கை என்பது புனித நதி. அதில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக நீங்களே கூறியுள்ளீர்கள். தினமும் லட்சக்கணக்கானோர் அதில் நீராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தங்களின் வாக்கின்படி அவர்களின் பாவங்கள் நீங்கியிருந்தால் அவர்களின் மறைவிற்குப் பின் அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து, சொர்க்கம் நிரம்பி இருக்கவேண்டும் அல்லவா?
ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே ஏன்?” என்று கேட்டார்.
உமையம்மையின் கேள்விக்குப் பதிலாக புன்னகைத்த சிவபெருமான் “இந்தக் கேள்விக்கு விளக்கம் சொன்னால் உனக்கு புரியாது. ஆதலால் நீ என்னுடன் நேரடியாக கங்கைக்கு வா. நான் சொல்கிறபடி செய். உன்னுடைய கேள்விக்கு விடை கிடைக்கும்.” என்று கூறினார்.
கங்கையில் திருவிளையாடல்
பின்னர் சிவபெருமான் 80 வயது நிரம்பிய முதியவராகவும், உமையம்மை 75 வயது நிரம்பிய முதியவளாகவும் உருமாறி கங்கைக் கரையை அடைந்தனர்.
கங்கையில் நிறையப்பேர் நீராடிக் கொண்டிருந்தனர். முதிய தம்பதியரும் கங்கையில் நீராடுவதற்காக இறங்கினர். சிறிது நேரத்தில் முதியவரை கங்கை நீர் இழுத்துச் செல்லத் தொடங்கியது.
இதனைப் பார்த்ததும் முதிய பெண்மணி “ஐயோ, என்னுடைய கணவனை கங்கை இழுத்துச் செல்கிறது. யாராவது அவரைக் காப்பாற்றுங்கள்” என்று அலறினாள்.
நிறைய பேர் அவரைக் காப்பாற்ற முன்வந்தனர்.
அந்தக் கிழவி தொடர்ந்து கத்தினாள்.
“பாவங்கள் இல்லாத யாரேனும் அவரை காப்பாற்றுங்கள். பாவங்களுடன் அவரைத் தொட்டால் என்னுடைய கணவரும், அவரைத் தீண்டியவரும் எரிந்து சாம்பலாவர். அப்படி ஒரு சாபம் அவருக்கு உள்ளது. பாவங்கள் இல்லாத யாராவது அவரை உடனடியாகக் காப்பாற்றுங்கள்.” என்று கதறினார்.
அப்பெண்மணியின் கதறல் அங்கிருந்தோர்களை உருக்கியது. ஆனாலும் முதியவரின் சாபத்தை எண்ணி எல்லோரும் பின்வாங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவன் கரையிலிருந்து ஆற்றில் குதித்தான்.
வேகவேகமாக நீந்தி முதியவரின் அருகே சென்றான். அனைவரும் அரண்டுபோய் முதியவரையும் அவரைக் காப்பாற்றச் சென்றவனையும் பார்த்த வண்ணம் இருந்தனர்.
அவன் அவரைத் தொட்டான். என்ன அதிசயம்! இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவன் முதியவரை ஆற்றிலிருந்து வெளியே இழுத்து வந்தான்.
அவன் முதியவருக்கு முதலுதவி செய்தான். அவரும் பிழைத்துக் கொண்டார். மூதாட்டி நன்றியுடன் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார்.
உடனே எல்லோரும் காப்பாற்றிய நபரை ஆவலுடன் பார்த்தனர்.
அவனைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சிக்கு அடைந்தனர்.
ஏனெனில் காசியில் அவன் மிகப்பெரிய திருடன். நிறைய பாவங்களைக் கொண்டவன்.
‘இவன் எப்படி பெரியவரைக் காப்பாற்றினான். பெரியவரின் சாபம் இவனை ஒன்றும் செய்யவில்லையா?’ என்று எண்ணியவாறு ஆச்சர்யப்பட்டனர்.
அப்போது திருடன் “உங்களுடைய ஆச்சர்யம் எனக்குப் புரிகிறது.
நான் காசியிலேயே மிகப்பெரிய திருடன். நிறையப் பாவங்கள் செய்தவன். நான் அவரைத் தொட்டாலும் ஒன்றும் ஆகவில்லையே என்று தானே நினைக்கின்றீர்கள்.
அந்தப் பாட்டி கதறியபோது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் எனக்குத் திடீரென்று, “கங்கையில் குளித்தால் நம் பாவம் எல்லாம் நீங்கிவிடும்” என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.
உடனே அந்த நம்பிக்கையோடு விஸ்வநாதரை மனதில் நினைத்துக் கொண்டு தைரியமாக கங்கையில் குதித்தேன்.
கங்கையில் குதித்ததால் என்னுடைய பாவங்கள் நீங்கின. ஆதலால் பெரியவரை நான் தொட்டபோது அவருடைய சாபம் என்னை ஒன்றும் செய்யவில்லை.” என்று கூறினான்.
அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது, கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் இல்லை என்பது.
உமையம்மைக்கும் சொர்க்கம் நிரம்பி வழியாததற்கான காரணம் புரிந்தது.
உமையம்மையின் சந்தேகம் போல் உங்களுடைய சந்தேகமும் தீர்ந்து விட்டது அல்லவா?
இறைபக்தி என்பது இறைவனின் மீதான உண்மையான நம்பிக்கை ஆகும்.
நம்முடைய வாழ்வில் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது அவசியமானது. நம்பிக்கையுடன் செய்யும் செயலானது நம்மை வாழ்வில் உயர்வடையச் செய்யும்.
ஆதலால் எல்லோரும் எந்த நல்ல செயலைச் செய்யும்போதும் முழுமையான நம்பிக்கை கொள்ளுங்கள்.
வாழ்வில் உன்னத நிலையைப் பெறுங்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!