உயர்வோங்கும் வாழ்வே!

நாரணன் பாதங்கள் இருள் நீக்கும் – நம்பி
பாராயணம் செய்வோர்க்கு மருள் நீங்கும் – எண்ணி
காரணன் பணிந்தோர்க்கு பயமில்லை – சொல்லும்
நாவாலே உயர்வோங்கும் தாழ்வில்லை வாழ்வே !

வாழும் வகையறியேன் திகைக்கின்றேன் இவ்வுலகில்
பாழும் சம்சார சமுத்திர சாகரத்தில்
வீழ்ந்தேன் இம்மானிட பிறப்பெடுத்து – மீள
வாழ்வேன் நின்நாமம் இனியுரைத்து !

உரைக்கும் சொல்லெல்லாம் நின் பொருளே ! யாவும்
உரைக்கும் நின்பெருமை !
மறைப்பொருள்கள் யாவும்
உறையும் மனமும் உடலாவி யாவும்
உறைந்து உரைப்பார்க்கு
நின்கழலே யாவும் !

நீயே எந்நாளும் என் துணையாய் வாராய் !
பேயாய் நான் பிறந்தாலும் என்னிடரைத் தீராய் !
சேயனை கைவிடேல் நின்னையே சரண் புகுந்தேன்
மாயனே ! மாதவனே ! தொடர்தருள் செய்திடாய்…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்