உயர் நீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் இருக்கும்.

பாராளுமன்ற சட்டங்களின் அனுமதியின் பேரில் இவை செயல்படுகின்றன. மாநிலத்திலுள்ள பிற நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்களின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன.

உயர் நீதிமன்றத்தால் கொண்டு வரப்படும் மேல்முறையீடுகளை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

உயர் நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், பிற நீதிபதிகளையும் கொண்டுள்ளது. இவர்களை இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட வில்லை.

 

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்

இந்திய குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரின் ஆலோசனையின் பேரில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.

பொதுவாக பணி மூப்பின் அடிப்படையிலேயே தலைமை நீதிபதியின் நியமனம் நடைபெறுகிறது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் பிற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கின்றார்.

 

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதிகள்

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. உயர் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 60 என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1963-ம் ஆண்டு அரசியலமைப்பு 15-வது பிரிவு திருத்தப்படி நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களும் செயல்பாடுகளும்

நீதி வழங்கும் அதிகாரங்கள்

உயர் நீதிமன்றம் இரண்டு முக்கிய அதிகாரங்களான முதல்நிலை விசாரணை நீதி அதிகாரம் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரம் ஆகியவற்றைப் பெற்றுத் திகழ்கிறது.

முதல் விசாரணை நீதி அதிகாரம்

உயர் நீதிமன்றங்களின் முதல் விசாரணை அதிகாரம் வரையறைகளுக்கு உட்பட்டது. அரசியலமைப்பின் 226-வது பிரிவின்படி, அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்த அல்லது வேறு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நீதிப் பேராணையினை பிறப்பிக்க முடியும்.

இந்த முதன்மை நிலை அல்லது நேரடி அதிகாரத்தில் நிர்வாகம், திருமணம் தொடர்பான வழக்குகள், கம்பெனிச் சட்டம், நீதிமன்ற அவமதிப்பு போன்றவை அடங்கும்.

உச்ச நீதிமன்றத்தைப் போலவே உயர் நீதிமன்றமும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக

1. ஆட்கொணர் நீதிப்பேராணை

2. செயலுறுத்தும் நீதிப்பேராணை

3. தடைப்பேராணை

4. ஆவணக்கேட்புப் பேராணை

5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகிய ஆணைகளைப் பிறப்பிக்க முடியும்.

ஆட்கொணர் நீதிப்பேராணை

சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களைக் காக்கிறது.

செயலுறுத்தும் நீதிப்பேராணை

விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து, பொது சொத்தை பாதுகாக்கிறது.

தடைப்பேராணை

துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிறது.

ஆவணக்கேட்பு பேராணை

துணை நீதிமன்றங்களின் வரம்பு மீறி வெளியிடும் ஆணைகளை நீக்குதல்

தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை

பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்

 

மேல்முறையீட்டு அதிகாரங்கள்

சிவில் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளில் கீழ்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம்.

அரசியலமைப்பு சட்டவிதிகளின் விளக்கங்கள் தொடர்பான வழக்குகளையும் உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம். இத்தகைய நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் உயர் நீதிமன்றம் முழுமையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகிறது.

 

நிர்வாகப் பொறுப்புகள்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக பல நிலைகளிலான நீதிமன்றங்கள் உள்ளன. அவை சார்பு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய சார்பு நீதிமன்றங்களை உயர் நீதிமன்றம் கண்காணிக்கிறது.

சார்பு நிலை நீதிமன்றங்கள் உயர் நீதி மன்றத்தின் விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். கீழ்மட்ட நீதிமன்றங்களின் கோப்புக்களை உயர் நீதிமன்றம் ஆய்வு செய்யும். ஒரு சார்பு நீதிமன்றத்திலிருந்து வழக்கை மாற்றும் அதிகாரம் உயர்நீதி மன்றத்திற்கு உண்டு.

 

சட்டத்தை நீதிமன்ற மறுபரிசீலனை செய்யும் அதிகாரம்

சட்டமன்றத்தால் இயற்றப்படும் மசோதா, அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு முரணானது என்று அறியப்பட்டால் அத்தகைய சட்டம் செல்லாது என்று அறிவிக்கின்ற உரிமை உச்ச நீதிமன்றம் போல உயர் நீதிமன்றத்திற்கும் உண்டு.

இவ்வுரிமை நிர்வாக மற்றும் சட்டமன்றங்களை வரம்பு மீறாமல் கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

 

மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை செயல்பட்டு வருகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.