கோயில் மசூதி குருத்துவாரா
கூடும் மக்கள் பொதுக்கூட்டம்
பாயில் நசியும் பழமுடலின்
பத்தி பாடல் முற்றோதல்
நோயில் நுடங்கும் நிணக்காடு
நுவலும் உண்மைப் பேச்செல்லாம்
வாயிற் காலன் வரவறிந்து
வடிக்கும் புலம்பல் வேறிலையே
அச்சம் இறப்பில் அதைத்தவிர்க்க
ஆன்மா மாயை எனப்பிதற்றி
இச்சை யடக்கத் தெரியாமல்
இதுகாண் வழியாம் எனவுளரும்
கொச்சை மாந்தர் அடியொற்றிக்
கொள்கை விளக்கம் பலகண்டு
கச்சை மாதர் கசப்பென்பார்
காலன் வரவில் கதியற்றே
நெருப்பால் எரிக்க முடியாது
நீரால் நனைக்க முடியாது
கருவி யறுக்க முடியாது
காற்றும் உலர்த்த முடியாது
பெருமை கொண்ட உன்னிருப்பைப்
பேர்த்தே எடுக்க முடியாது
திருவாய் மலர்ந்தால் மூச்செறிந்து
திடமாய் அமர்வார் பேதையரே
பகலோன் வரவில் அவிழ்ந்துவிடும்
பட்டுப் பூக்கள் இதழ்விரிப்பை
அகல விழியைத் திறந்துவைத்தே
ஆகா அருமை எனவியக்கும்
மகவே உண்மை யறிவாயே
மலர்கள் அவிழ்வ தெதனாலே
துகளா அலையா தெரியாத
தொகைசேர் ஒளியின் எடையாலே
எரியின் நிழற்கீழ் இளைப்பாறும்
இளமை இன்பப் பொருள்கடந்து
விரியும் அறிவின் துணையாலே
விழல்நீர் பாய்ச்சும் தொழில்விடுப்பாய்
கரியா அஞ்சும் கனலேற்க
காலன் கவலை யொழித்துவிட்டுச்
சரியாய் உலகைப் பொதுமைசெய்வாய்
சான்றோன் எனநூல் மொழிந்தவாறே!
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574